நறுக்கு செய்திகள்
கனடாவுக்கு இனிமேல் Multiple Visa வழங்கப்பட மாட்டாது

கனடாவுக்கு வரும் சுற்றுலா வாசிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 10-வருட மீள்வருகை விசா (multiple-entry visas) திட்டம் முடிவுக்கு வருகிறது. கனடிய மத்திய அரசின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களம் நேற்று (வியாழன்) இவ்வறிவித்தலைச் செய்துள்ளது. இதற்குப் பதிலாக ஒவ்வொருவரின் தகமைகளுக்கேற்ப குறுகிய கால விசாக்களை வழங்க இத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. முந்திய திட்டத்தின்படி சுற்றுலா வாசிகளுக்கு ஒற்றை வருகை (single entry) மற்றும் பல் வருகை (multiple entry) என இருவகை விசாக்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனாலும் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் அவர்கள் கேட்காமலேயே பல் வருகை விசா வழங்கப்பட்டு வந்தது. அதே வேளை வேலை நிமித்தம் அல்லது நிகழ்வுகளில் பங்குபற்ற வருபவர்களுக்கு விசேடமாக ஒற்றை வருகை விசா வழங்கப்பட்டு வந்தது. (Image source:RKIMT)
அம்ஸ்ரடாமில் அடி வாங்கும் இஸ்ரேலியர்

அம்ஸ்ரடாம், நெதர்லாந்தில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியின்போது இஸ்ரேலிய மக்காபி அணியின் ஆதரவாளர்களால் மேற்கொல்ளப்பட்ட வன்முறை ஆர்ப்பாட்டத்தையடுத்து அங்குள்ள பாலஸ்தீனிய ஆதரவாளர்களால் அவர்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு ஆரம்பத்தின்போது வலென்சியா, ஸ்பெயினில் நடைபெற்ற வெள்ளப்பெருக்கின்போது இறந்தவர்களுக்கான அஞ்சலி மேற்கொள்ளப்பட்ட தருணத்தில் அதை உதாசீனம் செய்துவிட்டு இஸ்ரேலிய அணியின் ஆதரவாளர்கள் அரபுக்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு கட்டிடங்களில் பறந்துகொண்டிருந்த பாலஸ்தீனக் கொடிகளைக் கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைப் பொறுக்க முடியாத பாலஸ்தீன ஆதரவாளர்கள் இஸ்ரேலிய ஆதரவாளர்களைத் தாக்கியும் ஆற்றில் தூக்கி எறிந்தும் கலவரத்தை உண்டுபண்ணினர். தாக்குதலுக்குள்ளான இஸ்ரேலியர்களை மீட்டு வருவதற்காக இஸ்ரேலிய அதிபர் உடனடியாக இரு விமானங்களை அனுப்பியிருக்கிறார்.
இலங்கையின் BRICS அங்கத்துவ விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது

மாறிவரும் பல்துருவ ஒழுங்கில் அதிகரித்து வரும் BRICS அமைப்பின் முக்கியத்துவத்தை முன்னிட்டு அதில் அங்கத்தவராக வருவதற்குப் பல தெற்குலக நாடுகள் முண்டியடித்து வருகின்றன. இலங்கையின் புதிய ஆட்சியாளரும் இவ்வமைப்பில் இணைந்துகொள்ள விண்ணப்பமொன்றைச் செய்திருந்தனர். கடந்த மாதம் ரஸ்யாவில் நடைபெற்ற BRICS அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜயவர்த்தன இம்மாநாட்டில் வைத்து இலங்கையின் விண்ணப்பத்தைக் கொடுத்திருந்தார். இருப்பினும் இவ்வமைப்பு இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டு BRICS அமைப்பின் கீழியங்கும் புதிய அபிவிருத்தி வங்கி (New Development Bank (NDB)) இல் அங்கத்துவம் பெறுவதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் உட்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதி உதவிகளை இவங்கி மூலம் இலங்கை பெற்றுக்கொள்ள முடியும். ஏற்கெனவே அங்கத்துவம் வகிக்கும் பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் தற்போது ஈரான், எகிப்து, எதியோப்பியா, UAE ஆகியனவும் இணைந்துள்ளன.
சுவிட்சர்லாந்து: இஸ்லாமிய பெண்கள் பொதுவெளியில் முகக்கவசம் அணிவதற்குத் தடை

எதிர்வரும் ஜனவரி 01, 2025 முதல் சுவிட்சர்லாந்தில் வாழும் பெண்கள் பொது வெளியில் முகக்கவசம் (burqa) அணிவது தடைசெய்யப்படுகிறது. இச்சட்டத்தை மீறுபவர்கள் 1,000 சுவிஸ் பிராங்குகளைத் தண்டமாகச் செலுத்தவேண்டி ஏற்படுமென அரசு அறிவித்துள்ளது. 2021 இல் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் மிகவும் சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் முகக்கவசத் தடைக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியிருந்தார்கள். சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய தொழுகை ஸ்தலங்களில் கோபுரங்களை எழுப்பமுடியாது என்ற தடையைக் கொண்டுவரக் காரணமான அமைப்பே முகக்கவசத் தடையைக் கொண்டுவருவதற்கும் காரணமாக இருந்தது. இருப்பினும் தொழுகை ஸ்தலங்கள், ராஜரீக ஸ்தலங்கள், விமானங்கள் மற்றும் புனித ஸ்தலங்கள்ஆகிய இடங்களில் முகக்கவசங்களை அணிவதற்கு தடை விதிக்கப்படமாட்டாது. விளம்பரங்கள், கலை வெளிப்பாட்டு நிகழ்வுகள், சுகாதார தேவைகள் ஆகியவற்றின்போதும் முகக்கவசங்களை அணிவதற்கு தடைகளில்லை. Image Creator: GIAN EHRENZELLER | Credit: KEYSTONE
