நறுக்கு செய்திகள்

நறுக்கு செய்திகள்: மே 27, 2024

இந்தியா, பிரான்ஸ், லக்ஸம்பேர்க், நெதெர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்த All we imagine as Light என்னும் இந்திய விவரணப் படத்திற்கு இவ்வருட கான் திரைப்பட விழாவில் கிராண்ட் பிறி தர உயர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்பட விழாவில் இந்தியாவிலிருந்து இடம்பெற்ற முதல் திரைப்படம் இது.

பாயல் கபாடியாவின் இயக்கத்தில் உருவாகி மலயாளம், இந்தி மற்றும் மராத்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா காதம், ஹ்றிது ஹரூன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கேரளாவில் இருந்து மும்பாய் மருத்துவமனையில் பணிபுரிய வரும் இரண்டு பெண் தாதிமார் அங்கு சமையல் வேலைக்கென மகாராஷ்டிர கிராமமொன்றிலிருந்து வரும் பெண் ஆகியோரிடையே எழுகின்ற நட்புறவு அரசாங்கம், மும்பாய் மாபியாக்கள், ஆணாதிக்கக் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு எதிராக இணைந்து போராடுவது என்பது கதை.

கான் திரைப்படவிழாவில் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது இப்படம்.

எலெட்றோணிக் பண்டங்களின் தயாரிப்பில் ஏகபோக அந்தஸ்தை அனுபவித்துவரும் சீனாவின் மேற்குலக உறவில் ஏற்பட்டுவரும் ஸ்திரமற்ற நிலைமை காரணமாக உலக வழங்கலில் ஏற்படக்கூடிய தடங்கல்களைச் சமாளிக்க கூகிள் உட்படப் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் தமது தயாரிப்புத் தளங்களைச் சீனாவிலிருந்து இந்தியா போன்ற நாடுகளுக்கு மாற்ற ஆரம்பித்திருக்கின்றன. இதன் பிரகாரம் கூகிள் நிறுவனம் தனது கைத்தொலைபேசி பிராண்டான பிக்செல் ரக போன்களின் தயாரிப்பை தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்ட ஃபொக்ஸ்கொன் நிறுவனத்திடம் கையளிக்க முடிவு செய்துள்ளது. தமிழ்நாடிலுள்ள ஃபொக்ஸ்கொன் நிறுவனத்தின் ஆலைகள் ஏற்கெனவே ஐஃபோன் தொலைபேசிகளைத் தயாரித்து வழங்குகிறது.

அதே வேளை கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்ஃபபெட் தமிழ்நாட்டிலுள்ள தனது சொந்தக் கிளை நிறுவனமான விங் எல்.எல்.சி. மூலம் ட்றோன்களைத் தானே நேரடியாகத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது.

இதற்கான ஒழுங்குகளைச் செய்வதற்காக கூகிள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு அபிவிருத்தி அமைச்சர் ரி.ஆர்.பி. ராஜா உடபடப் பலரையும் சந்தித்துப் பேசியிருக்கிறது. அதே வேளை முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலினும் அமெரிக்காவிற்குப் பயணம் செய்து அமெரிக்க நிறுவனங்களது முதலீடுகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரும் நோக்கத்தில் பல சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.