நறுக்கு செய்திகள்

நறுக்கு செய்திகள்: மே 23, 2024

சமாகி ஜன பலவேகய கட்சி உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பிநருமாகிய சரத் பொன்சேகா கட்சியிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் குதிக்கவுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியாகிய சமாகி ஜன பலவேகய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்கெனவே களமிங்கிய நிலையில் அவருக்கு எதிராக பொன்சேகா போட்டியிடுவது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என கட்சியின் பொதுச் செயலாளர் மட்டுமபண்டார தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்புகளின்படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் முதலாமிடத்தில் சஜித் பிரேமதாசவும் இரண்டாமிடத்தில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்காவும் மூன்றாமிடத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் இருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த மாதம் (ஜூன்) சரத் பொன்சேகா தனது உத்தேசத்தை அறிவிக்கவுள்ளார் எனவும் ஆனால் இதுவரை கட்சி உறுப்பினர்கள் எவருக்கும் அவர் தனது எண்ணத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் மட்டும பண்டார தெரிவித்துள்ளார். பொன்சேகா கட்சியை விட்டு விலகும் பட்சத்தில் அவருடன் வேறெந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி தாவ மாட்டார்கள் எனவும் உட்கட்சி வட்டாரங்கள் கூறியதாக அறியப்படுகிறது.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் சமாகி ஜன பலவேகய ஏற்கெனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டதாகவும் அறியப்படுகிறது.

முதலில் பாராளுமன்ற தேர்தல்களை நடத்தும்படி பங்காளிக் கட்சியான சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறதெனவும் ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க அதற்கு இணங்காது அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டுவிட்டதாகவும் அறியப்படுகிறது.

மக்களிடம் செல்வாக்கு பாரிய அளவில் அருகி வரும் நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சூனாக் திடீர் பொதுத் தேர்தல் ஒன்றை அறிவித்திருக்கிறார். எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதி நடைபெறவுள்ள இத் தேர்தலில் சூனாக்கின் கந்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வியைச் சந்திக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கடந்த 14 வருடங்களாக பாராளுமன்றத்தைக் கைப்பற்ற முடியவில்லை எனவும் ஆனால் தற்போது அதன் தலைவர் கெயிர் ஸ்ரார்மெர் தலைமையில் கட்சி அமோக வெற்றியைப் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஸ்ரார்மெரின் இஸ்ரேல் சார்புக் கொள்கையால் பல தொழிற்கட்சி ஆதரவாளர்கள் அக்கட்சியை விட்டு விலகி வருகின்ற காரணத்தால் தொழிற் கட்சியும் எத்தநை ஆசனங்களைப் பெறுமென்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தளர மறுக்கும் பணவீக்கம் மற்றும் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகள் ஆகியன சூனாக் அரசின்மீது மக்களின் அதிருப்தியைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. ஆனாலும் தேர்தலுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் வருமான வரிக்குறைப்பு அறிவிக்கப்படவிருக்கிறது எனவும் இதன் மூலம் சூனாக் மக்கள் ஆதரவைப் பெற முயற்சிக்கிறார் எனவும் கருதப்படுகிறது.

சூனாக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 2010 இலிருந்து ஆட்சியில் இருக்கிறதெனினும் அக்டோபர் 2022 முதல் தான் சூனாக் பிரதமராக ஆகியிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் 40 வருடங்களுக்குப் பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வியைத் தழுவியிருப்பதனால் பொதுத் தேர்தலிலும் நிலைமை இது போலவே இருக்குமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.