நறுக்கு செய்திகள்

நறுக்கு செய்திகள்: மே 13, 2024

கடந்த 5 வருடங்களில் இலங்கையின் முப்படைகளிலிருந்தும் குறைந்தது 25,000 படையினர் விலகியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மெஜர் ஜெனெரல் ரசிக க் உமார தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள் மேலாளர்களுக்கு அறிவிக்காமலேயே கடமைக்கு வரத் தவறியவர்கள் எனவும் இதற்காக ஏப்ரல் 20 முதல் மே 20 (2024) வரை இவர்களுக்கு இராணுவம் பொது மன்னிப்பு வழங்குவதுடன் முறையான கடமை நீக்க பத்திரங்களையும் வழக்கத் தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் அதிக சம்பளம் காரணமாக ரஷ்ய-யூக்கிரெய்ன் படையணிகளில் இணைந்து பணியாற்றச் சென்றுவிட்டதாக அறியப்படுகிறது. இலங்கை இராணுவத்தின் அடிப்படை சம்பளம் ரூ.29,540 எனவும் இதர கொடுப்பனவுகளுடன் இது மாதம் ரூ. 54,000 ஆகும்.

தற்போதுள்ள இராணுவத்தினரின் எண்ணிகையை 2024 இல் 135,000 ஆகவும். 2030 இல் இது 100,000 ஆகவும் குறைக்கும் திட்டமுள்ளதெனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

‘பலெஸ்ரைன்’ என்ற பெயரில் பெப்சி, கொகோ கோலா ஆகியவற்றுக்கு இணையான பானமொன்று சுவீடன் நிறுவனமொன்றினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெப்சி, கோலா போன்ற பானங்களின் தயாரிப்பாளர்கள் இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக இருந்துவருவதன் காரணமாக பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் இப்பானங்களைப் புறக்கணித்து வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இப்பானத்திற்கு அதிக கிராக்கியுள்ளதாகவும் உலகம் முழுவதிலும் பல உணவகங்கள் பெப்சி, கோலா போன்ற பானங்களைப் புறக்கணித்துவிட்டு ‘பாலெஸ்ரைன்’ பானத்தையே கொள்முதல் செய்வதாகவும் இதன் காரணமாக இப்பானங்களின் தயாரிப்பை மத்திய கிழக்குக்கு விஸ்தரிக்கவுள்ளதாகவும் அதன் தயாரிப்பாளர்கள் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுவீடனில் மல்மோ என்னுமிடத்தில் வாழும் இரண்டு பாலஸ்தீனிய பூர்விகத்தைக் கொண்ட தொழில் முகவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இம்முயற்சி இப்போது மிகவும் வெற்றிகரமாக ஆகியிருக்கிறது எனவும் இதுவரை பல மில்லியன்கள் எண்ணிக்கையில் கொள்வனவுக்கான கோரிக்கைகள் வந்திருக்கின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒலிவ் கிளை, பாலஸ்தீனிய சால்வையான கெஃபியே அடையாளம் மர்றும் “எல்லோருக்கும் விடுதலை” என்ற சுலோகத்தோடு இப்பானம் சந்தைப்படுத்தப்படுகிறது.

பல அமெரிக்க நிறுவனங்கள் இஸ்ரேல் நாட்டுடன் வணிக தொடர்புகளைப் பேணி வருவதால் அந்நிறுவனங்கள் தயாரிக்கும் பண்டங்களைப் பலர் புறக்கணித்து வருகின்றனர். கொகோ கோலா நிறுவனத்தின் ஒரு ஆலை பாலஸ்தீனிய மேற்குக்கரையில் அத்துமீறிப் பிடித்த நிலத்தில் இயங்கி வருகிறது. 2018 இல் பெப்சி கோலா இஸ்ரேலிய தயாரிப்பு நிறுவனமான சோடா ஸ்ட்றீம் வியாபாரத்தை முழுமையாக வாங்கியிருந்தது.

கனடாவிற்குள் நுழையும் ‘ஆபத்தான’ அகதி கோரிக்கையாளர்களை மத்திய சிறைகளில் தங்கவைக்கும் திட்டமொன்று கனடிய அரசின் இவ்வருட வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தமைய மறுபரிசீலனை செய்யும்படி இரண்டு முன்னாள் பிரபல லிபரல் அமைச்சர்கள் உட்பட 85 கனடிய மற்றும் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. கனடாவின் 10 மாகாணங்கள் இணைந்து அகதிக் கோரிக்கையாளர்களுக்குத் தமது கட்டுப்பாட்டிலிருக்கும் சிறைகளில் இனிமேல் இடம்தர முடியாது என அறிவித்தமையைத் தொடர்ந்து அவர்களை மத்திய சிறைகளில் தங்கவைக்க ட்றூடோ அரசு தீர்மானித்துள்ளது. இதை எதிர்த்து 85 கனடிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து சில தனிமனிதர்களும் அறிக்கைகள் விடுத்துள்ளனர்.

“பொதுமக்கள் பாதுகாப்பு என்ற நிரூபிக்க முடியாத அச்சம் போன்ற விடயங்களை முன்வைத்து மனித உரிமைகளை மீறி நாம் செயலாற்ற முடியாது. அகதிக் கோரிக்கையாளர்களையும், குடிவரவாளர்களையும் மரியாதை கொடுத்து வரவேற்கவேண்டுமே தவிர மனிதாபிமானமற்ற முறையில் நடத்தக்கூடாது” எனக்கூறி முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லொய்ட் அக்ஸ்வேர்தி மற்றும் முன்னாள் நீதியமைச்சர் அலன் றொக் ஆகியோர் ட்றூடோ அரசுக்கு திறந்த கடிதமொன்றை எழுதியிருக்கின்றனர்.

2000 ஆம் ஆண்டிலிருந்து ‘ஆபத்தானவர்கள்’ என அடையாளமிடப்பட்ட பல அகதிக்கோரிக்கையாளர்களைச் சிறைகளில் தடுத்துவைக்கும் நடைமுறை இருந்துவருகிறது. இவர்களில் இதுவரை 17 பேர் சிறைகளில் மரணமடைந்திருக்கிறார்கள். இக்காரணங்களைக் காட்டி அக்ஸ்வேர்தி மற்றும் றொக் ஆகியோர் மத்திய அரசின் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டிருக்கின்றனர்.