நறுக்கு செய்திகள்

நறுக்கு செய்திகள்: டிசம்பர் 28, 2024

கவுன்சிலர் குமாரசாமி கிரிதரன்

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கனடிய-இலங்கை உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்த இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கனடிய வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு வருவித்து அரச அதிகாரிகள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க வைக்கும் முயற்சியை அரசு முன்னெடுக்கவுள்ளதாக அறியப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் கனடிய உலகவிவகார அமைச்சினால் நடத்தப்பட்ட விருந்துபசார வைபவத்தில் இலங்கை தூதுவராலய அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர். பல்வேறு கலாச்சாரங்களைப் பிரதிபலித்த இவ்விருந்துபசார நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தின் குழுவின் தலைவராக குமாரசாமி கிரிதரன் பங்குபற்றியிருந்தார்.

ஆப்கானிஸ்தான் படையெடுப்பு

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் போர் தொடுப்பதாக அறிவித்திருக்கிறதெனவும் பெருமளவு ஆப்கானிஸ்தான் படைகள் ஏற்கெனவே பாகிஸ்தானிற்குள் ஊடுருவி நிலைகொண்டுள்ளதெனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி கொடுப்பதுடன் பாகிஸ்தானின் எல்லைப் பிரதேசங்களில் கெரில்லாத் தாக்குதல்களையும் தலிபான்கள் நிகழ்த்தி வருகின்றனர். ஆனாலும் அமெரிக்க ஆதரவுடன் பாகிஸ்தானிய அரசு ஆப்கானிஸ்தான் – சீன உறவுகளைப் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே பூசலுக்கு முக்கிய காரணம் எனப்படுகிறது. பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி இம்ரான் கான் சீனாவுடன் நெருக்கத்தைப் பேண முற்பட்டதையடுத்து அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்.


ஃபிரான்ஸிஸ்கா அல்பனீஸ்

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களுக்கான ஐ.நா. வின் சிறப்பு பிரதிநிதியும் துணிச்சல் மிக்க சர்வதேச வழக்கறிஞருமான ஃபிரான்ஸிஸ்கா அல்பனீசை இவ்வருடத்திற்கான உலகின் சிறந்த மனிதர் என அறிவித்து ஐ.நா. பெருமைப்படுத்தியிருக்கிறது. பாலஸ்தீனிய பிரதேசங்களில் இஸ்ரேல் மேற்கொள்ளும் உரிமை மீறல்கள், இனப்படுகொலை ஆகியவற்றைத் தொடர்ச்சியாகக் கண்டித்துவரும் அல்பனீஸ் இவை தொடர்பாக மேற்கு நாடுகள் காட்டிவரும் பாராமுகத்துக்கு எதிராக வன்மையாகக் குரலும் எழுப்பி வருகிறார். “எனது வார்த்தைகளுக்கு நான் தான் பொறுப்பு. மற்றவர்கள் அவற்றை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதற்கல்ல” எனக்கூறும் ஃபிரான்ஸிஸ்கா அல்பனீஸ் இக்கெளரவத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்.

சிரியாவில் அணுக்குண்டு வீச்சு?

சிரியாவின் மீதான படையெடுப்பின்போது அதன் ரார்ட்டஸ் நகர் மீது இஸ்ரேல் சிறிய அளவிலான அணுக்குண்டைப் பரீட்சித்துப் பார்த்தது என்ற சந்தேகம் பலராலும் எழுப்பப்பட்டது. இக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அயல் பிரதேசங்களிலுள்ள அணுக்கதிரியக்க முகர்வுக் கருவிகள் மேலதிக கதிரியக்கத்தைப் பதிவுசெய்தன என்ற செய்தி பெரும்பாலான பிரதான ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தது. தற்போது சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் இஸ்ரேலினால் பாவிக்கப்பட்ட குண்டு அணுக்குண்டு தான் என நிரூபித்துள்ளார். இக்குண்டு வெடிப்பின்போது 200 அடி அகலமான மலையொன்று புஅகையாகப் போனதெனவும் ஒரு கி.மீ. வட்டத்திலுள்ள மரங்கள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிட்டதெனவும் கூறப்பட்டது.

விஞ்ஞானி ஜெஃப்றி ஹின்ரன்

அடுத்த 30 வருடங்களுக்குள் மனித குலம் முற்றாக அழிக்கப்பட்டுவிடுவதற்கான சந்தர்ப்பம் மேலும் அதிகரித்துள்ளதாக செயற்கை விவேகத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் விஞ்ஞானியும், 2024 இல் பெளதீகவியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவருமான ஜெப்றி ஹின்ரன் எச்சரித்துள்ளார். கூகிள் நிறுவனத்தில் பணியாற்றி சென்ற வருடம் ஓய்வு பெற்ற கனடியரான பேராசிரியர் ஹின்ரன் பி.பி.சி. 4 வானொலிக்கு அளித்த பேட்டியின்போது மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார். “எங்கள் விவேகத்துக்கு மீறிய விவேகமொன்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எமக்குத் தெரிந்திருக்கவில்லை” என அவர் தெரிவித்திருக்கிறார்.