நறுக்கு செய்திகள்: ஜூலை 30, 2024
‘மொட்டைச்’ செய்தி: உதிர்ந்துபோன முடியை மீண்டும் பெறவேண்டுமா?

இதுவரை காலத்திற்கும் ‘ பாதுகாப்பான மருந்தொன்றும்’ கண்டுபிடிக்காத வியாதி என்றால் அது தலை முடி உதிர்வதுதான். இது ஒரு ‘வியாதி’ அல்ல எனச் சிலர் வாதிடலாம் ஆனால், உடற் பருமன் முதல் பல் உதிர்வு வரை இயற்கையான உடம்பை உருமாற்றம் செய்யும் எல்லாக் காரணிகளையும் நாம் வியாதி என்று சொல்வதில் தப்பில்லை. தலைமுடி உதிர்வுக்கு மருந்து கண்டுபிடிப்பவர் ஒரே நாளில் கோடீஸ்வரராகிவிட முடியுமெனத் தெரிந்தும் அது நடைபெறவில்லையெனில் இங்கு ஏதோ மர்மம் இருக்கிறது. தலைமுடி உதிர்வுக்கென அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் (FDA) அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் உலகில் இரண்டே இரண்டுதான் உள்ளன. இவற்றில் ‘மினொக்சிடில்’ (Minoxidil) ஒன்று. ஆனால் அவற்றின் வெற்றி இதுவரை நிரூபிக்கப்படாத ஒன்று. அத்தோடு அவற்றினால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றிய எச்சரிக்கைகளும் பரவலாக இருக்கிறது. முழுமையான கட்டுரைக்கு https://tamilnalam.com/
கனடா: $100,000 பரிசை உதறித் தள்ளும் எழுத்தாளர்கள்….

கனடாவில் வருடா வருடம் நடைபெறும் எழுத்தாளர் பரிசு விழாக்களில் ஸ்கோஷியா வங்கியின் ஆதரவில் நடைபெறும் ‘கில்லெர் பரிசு’ (Giller Prize) முக்கியமானது. கனடாவை மையப்படுத்தி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது வேறு மொழிகளில் எழுதப்பட்டு ஆங்கில மொழி மாற்றம் செய்யப்பட்ட நூல்களில் சிறந்ததென ஜூரர்களால் தெரிவுசெய்யப்படும் நாவல், சிறுகதைத் தொகுப்பு அல்லது சித்திரக் கதை வடிவிலான நூலின் படைப்பாளிக்கு $100,000 கனடிய டொலர்களை கில்லெர் அமைப்பு வழங்குகிறது. தெரிவில் பங்குபற்றிய இதர நூலாசிரியர்களுக்கு தலா $10,000 டொலர் வழன்கப்படுகிறது. பரிசுக்கான சிறந்த படைப்புகளை ஐந்து ஜூரர்கள் ஆய்ந்து பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. ஆனால் இந்த வருடம் ஜூரர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து ஜூரர்களில் இருவர் ஸ்கோஷியா வங்கியின் இஸ்ரேல் முதலீட்டைக் காரணம் காட்டி தாம் இக்குழுவிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள். இப்பரிசை அளிக்கும் ஸ்கோஷியா வங்கி தனது முதலீடுகளின் பெரும்பங்கை இஸ்ரேலின் ஆயுத தயாரிப்பு நிறுவனனங்களில் முதலீடு செய்கின்றது எனவும் இந்த அறமற்ற செயலுக்கு தாங்கள் உடந்தையாக இருக்கக்கூடாது எனவும் அவர்கள் கூறுகிறார்கள். இம்முதலீட்டிலிருந்து விலகிக்கொள்ளாதவரை ஸ்கோோஷியா வங்கியின் பரிசுப்பணத்தை நிராகரிக்கும்படி இவர்கள் கோரிக்கை விடுத்ததாகவும் இதற்கு கில்லெர் இணங்க மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.. இந்த இரு ஜூரர்களில் ஒருவர் இந்திய நாவலாசிரியர் மேகா மஜும்தார், மற்றவர் எதியோப்பிய பூர்வீகத்தைக் கொண்ட அமெரிக்க நாவலாசிரியர் டினோ மெங்கெஸ்து. இன்னும் விலகாது இருக்கும் மூன்று ஜூரர்கள் எழுத்தாளர்கள் நோவா றிச்லெர், கெவின் சங் மற்றும் பாடகர் மொலி ஜோன்சன்.
மொட்டுக் கட்சியிலிருந்தும் ஜனாதிபதி வேட்பாளர்?

ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் மொட்டுக் கட்சி (SLPP) தனது பிரதிநிதி ஒருவரை நிறுத்தப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து கட்சிக்குள்பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் அதன் அங்கத்தவர்களில் கணிசமானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கவிருக்கிறார்கள் எனவும் அறியப்படுகிறது. நேற்று (29) மொட்டுக் கட்சியின் பொலிற் பீறோ அங்கத்தவர்கள் சந்தித்து தமக்குள் தகுதியான ஒருவரை விரைவில் தேர்ந்தெடுத்து ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப் போவதாக முடிவெடுத்திருந்தனர் என அக்கடசியின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அக்கட்சியின் பல அங்கத்தவர்கள் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து தமது ஆதரவைத் தருவதாக உறுதியளித்திருக்கின்றனர் என ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார். இவ்வேளை நீதியமைச்சர் விஜேதாச தனது அமைச்சர் பதவியைத் துறந்துவிட்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
