நறுக்கு செய்திகள்

நறுக்கு செய்திகள்: ஜூலை 17, 2025

யாழ்ப்பாணம், செம்மணி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலை அகழ்வுகள் தொடர்பான இடைக்கால அறிக்கையொன்றை தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்கள் யாழ்ப்பாணம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜூலை 15 அன்று சமர்ப்பித்துள்ளார். இவ்வறிக்கையின் முக்கிய சாராம்சங்கள்: 1). குறிக்கப்பட்ட படுகுழிகளிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களை ஆராய்ந்தபோது அவற்றில் குற்றநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. 2). அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் சாதாரண இயற்கை மரணத்தின் பின்னான புதையல் தடயங்களிலிருந்து வேறுபடுகிறது. 3). இவ்விடயம் தொடர்பாக மேலதீக துலாம்பரமான விசாரணைகள் மேற்கொள்ளப்ப்டவேண்டும். (மூலம்: குமணன் X-பதிவு)


இலங்கைக்கான கடவுச்சீட்டுகளைப் பெற விரும்பும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இனிமேல் அவறறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாகச் சமர்ப்பித்துக்கொள்ள முடியுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. குடிபெயர்விற்கான சர்வதேச அமைப்பு (International Organisation for Migration (IOM) மற்றும் குடிவரவு, குடிபெயர்வுத் திணைக்களம் (Department of Immigration and Emigration) இணைந்து முன்னெடுத்த இம்முயற்சிக்கு இலங்கை அமைச்சரவை நேற்று (ஜூலை 16, 2025) அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றை குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பு வழங்கவுள்ளது. தற்போதைக்கு 20 தூதுவராலயங்களில் மட்டுமே இதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை குடிவரவு, குடிபெயர்வு திணைக்களத்தின் கணனியுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் விண்ணப்பதாரியின் தகவல்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு காலதாமதமின்றி விண்ணப்பங்கள் கையாளப்படும் எனக் கூறப்படுகிறது.

இத்திட்டம் சீராக நடைமுறைப்படுவதைக் கண்காணிக்க வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் திணைக்களம் மற்றும் பொதுப்பாதுகாப்பு, பாராளுமன்ற விவகார அமைச்சு ஆகியயன இணைந்து செயற்படவுள்ளன. (மூலம்: LNM).

பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் வேட்டுவம் படத்திற்காக ஜூலை 13அன்று, வாகன விபத்தொன்றை நிகழ்த்தும் காட்சியைப் படம்பிடித்துக்கொண்டிருந்தபோது அதில் பங்குபற்றிய ஸ்டண்ட் நடிகர் எஸ்.மோஹன் ராஜு என்பவர் மரணமாகியதைத் தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித், நீலம் புரட்க்‌ஷன்ஸ் மனேஜர் ராஜ்கமல் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் பிரபாகரன் ஆகியோரை கீழையூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படப்பிடிப்பின்போது கவலையீனமாக இருந்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

நாகபட்டினம் மாவட்டத்திலுள்ள விழுந்தமாவடி என்னுமிடத்தில் இப்படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தது. இதன் போது மோஹன் ராஜு இயக்கிய SUV 10-20 மீட்டர் உயரத்தில் காற்றில் பறந்து இரண்டு தடவை சுழன்று நிலத்தில் பக்கவாட்டாக விழுந்தது. ஏற்கெனவே தயார் நிலையிலிருந்த அம்புலன்ஸ் வண்டி மூலம் ஓரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போதும் அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்துவிட்டிருந்தது எனக் கூறப்படுகிறது. (மூலம்: TNM).