நறுக்கு செய்திகள்: ஜூலை 14, 2025
றட்ணம் அறக்கட்டளையின் (Ratnam Foundation) திறன் வகுப்பறைகள்

கணிதம் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளில் பத்தாம், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு இப்பாடங்களைப் போதிக்க கணனி வழிக் கற்றலைப் பெறும் வகையில் திறன் பலகைகளை (Smart Boards) நிறுவித் தந்திருக்கிறது றட்ணம் அறக்கட்டளை. அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) (IMHO-USA) அமைப்பின் அனுசரணையில் இலங்கையில் வாழ்வாதாரம் பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு கல்வி, ஆரோக்கியம், சுகவாழ்வு ஆகிய துறைகளில் பல தரப்பட்ட நற்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இலங்கையிலும், இதர உலக நாடுகளிலும் நலிவுறும் மக்களுக்கு பலதரப்பட்ட வாழ்வாதார, அவசரகாலப் பணிகளை அனைத்துலக மருத்துவ நல அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை இனம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய முன்வரும் புலம்பெயர் தன்னார்வ தொண்டரமைப்புகள், தனியார் குடும்ப நற்பணி அறக்கட்டளைகள் போன்றவற்றுடன் தொடர்புகளை மேற்கொண்டு அனைத்துலக மருத்துவ நல அமைப்பு இத்திட்டங்களை வெற்றிகரமாக முடித்துவைக்கிறது. அந்த வகையில் றட்ணம் அறக்கட்டளை மலையக மற்றும் வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு பல அரிய கல்விப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த தடவை மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள 10 பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்து அங்கு கல்வி கற்கும் 10ம் , 11ம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் வகுப்பறைகளை அறிமுகம் செய்திருக்கிறது. ஆசிரியர்கள் இல்லாத போதிலும் இத்திறன் பலகைகள் மூலம் மாணவர்கள் தமது போதனைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். இத்திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதை 6ஆம் வகுப்பு வரை விஸ்தரிக்க உத்தேசித்துள்ளதாக IMHO-Ratnam Foundation அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகை சரோஜாதேவி மரணம்

‘கன்னடத்துப் பைங்கிளி’ என அழைக்கப்பட்ட பிரபல நடிகை சரோஜாதேவி தனது 87 ஆவது வயதில் இன்று (ஜூலை 14) பங்களூரில் காலமானார். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்த நடிகை சரோஜாதேவிக்கு ‘பத்ம சிறீ’, ‘பத்ம பூஷன்’ ஆகிய விருதுகளைக் கொடுத்து இந்திய அரசு கெளரவித்திருந்தது.
ஜனவரி 07, 1938 இல் மைசூரில் பிறந்த சரோஜாதேவி நடித்த முதலாவது படம் மஹாகவி காளிதாச (1955) ஆகும். இதைத் தொடர்ந்து கன்னட திரை உலகில் பிரபலமாகிய அவர் ஜெமினி கணேசனின் ஜோடியாக திருமணம் (1956) மூலம் தமிழ்த்திரையுலகில் அடியெடுத்து வைத்தார். பின்னர் தங்கமலை இரகசியம் (1957) என்ற படத்தில் சிவாஜி கணேசனின் ஜோடியாகவும், நாடோடி மன்னன் (1958) என்ற படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாகவும் நடித்திருந்தார். அத்தோடு பிரபல தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவ் (பாண்டுரங்க மஹாத்யம் (1957) உடனும், இந்தி நடிகர் திலிப் குமாருடனும் (பாய்கம் (1959)) நடித்திருக்கிறார். இந்திய சினிமாவில் அதிக காலம் முன்னணிப் பாத்திரங்களில் நடித்த நடிகை சரோஜாதேவியாகும். அவரது இறுதிப்படம் கன்னட மொழியில் வெளிவந்த நடசார்வபோமா (2019) ஆகும். தமிழில் அவர் நடித்த இறுதியான படம் ஆதவன் (2009).
114 வயது இந்திய மரதன் ஓட்ட வீரர் விபத்தில் மரணம்

இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவரும் சிறந்த மரத ஓட்ட வீரருமான ஃபோஜா சிங்க் வாகன விபத்தில் சிக்கித் தனது 114 ஆவது வயதில் மரணமானார். அவரது கிராமமான தெருவைக் கடந்துகொண்டிருக்கும்போது அடையாளம் காணப்படாத வாகனமொன்றினால் மோதப்பட்டு இன்று (ஜுலை 14) 3:30 மணியளவில் காலமானார். ‘The Turbaned Tornado’ என்ற பெயரில் இவருடைய வாழ்க்கைச் சரிதத்தை பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்க் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரை மோதிய வாகன ஓட்டி தப்பியோடி விட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிங் சிகிச்சை பலனளிக்காமையால் மரணித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
