நறுக்கு செய்திகள்

நறுக்கு செய்திகள்: ஜூலை 08, 2024

செய்தியின் தலைப்பில் தவறொன்றுமில்லை. இச்சம்பவம் இந்தியாவில் நடந்திருக்கிறது. பீகார் மாநிலத்தின் ராஜூலி என்னுமிடத்தில் ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சந்தோஷ் லோஹர் என்பவரது கடியினால் பாம்பு பரிதாபமாக இறந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட சதோஷ் போன்ற பணியாளர்கள் இரவில் தமது கூடாரங்களுக்குள் த்யில்வது வழக்கம். ஒருநாள் அவரது கூடாரத்திற்குள் புகுந்த பாம்பு ஒன்று அவரைத் தீண்டியபோது அவர் அதை அடித்ததுமல்லாது தனது வாயினால் பல தடவைகள் அதைக் கடித்துக் காயப்படுத்தியதாகவும் இக்காயங்கள் காரணமாக குறிப்பிட்ட பாம்பு அந்த இடத்திலேயே துடித்து துடித்து மரணமாகிவிட்டதாகவும் அறியப்படுகிறது. பாம்பைக் கடித்துக் கொல்வது அவ்வூர்ப் பழக்கம் எனவும் இதுவொன்றும் ஆச்சரியம் தரும் விடயமல்ல எனவும் சந்தோஷ் தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது. சந்தோஷ் இப்போது பாம்புக் கடிக்கு சிகிச்சை பெற்றுத் தேறிவருகிறார் எனவும் கூறப்படுகிறது. (Photo by David Clode on Unsplash)

எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பங்கெடுப்பதா இல்லையா என்பதை ஜனாதிபதி விக்க்ரமசிங்க இன்னும் அறிவிக்கவில்லையாயினும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களாகிய சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசநாயக்கா ஆகியோருடன் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அறிவிக்கப்படாத சிறீலங்க பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் ஆகியோரை முன்னிறுத்தி கொழும்பிலிருந்து இயங்கும் ஆரோக்கியமான கொள்கைக்கான நிலையம் (institute for Health Policy (IHP)) என்னும் அமைப்பு தொடர்ச்சியாக மக்களிடம் கருத்துக் கணிப்புகளைப் பெற்று அவர்களின் நிலைப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலையில் அனுரகுமாரவுக்கு 39%, சஜித் பிரேமதாசவுக்கு 38% வாக்குகள் பெறும் சாத்தியமுண்டென இந்நிலையம் அறிவித்திருக்கிறது. இதில் திசநாயக்காவின் ஆதரவு 2% வீழ்ச்சியும் பிரேமதாசவின் ஆதரவில் மாற்றமற்ற நிலையும் இருந்தாலும் விக்கிரமசிங்கவின் ஆதரவு நிலப்பாடு 12% த்திலிருந்து 15% மாக அதிகரித்திருக்கிறது. பொதுஜன பெரமுனவின் அறிவிக்கப்படாத வேட்பாளருக்கான ஆதரவு 9% த்திலிருந்து 7%த்திற்குக் குறைந்திருக்கிறது. பெரமுன சார்பில் தொழில் முனைவரும் தனவந்தருமான தம்மிகா பெரேரா தேர்தலில் குதிக்க விரும்புவதாகவும் ஆனால் விக்கிரமசிங்கவிற்கே பெரமுன ஆதரவு வழங்கவேண்டுமென கட்சிப் பிரமுகர்கள் விரும்புவதாகவும் தெரிகிறது. சமீபத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் 27 வருட சேவையைப் பாராட்டி றோஹித அபயவர்த்தன ஒழுங்கு செய்த பாராட்டு விழாவில் மஹிந்த, கோதாபய ராஜபக்சக்கள் கலந்துகொண்டது பெர்முனவின் ஆதரவை அவர் நாடி நிற்பது தெரிகிறது. இருப்பினும் இது அவருக்கு பாதகமாகவே முடியுமெனப் பலர் கருதுவதால் ‘அனைத்துக் கட்சியின் ஆதரவுடனான பொது வேட்பாளராகவே அவர் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரஞ்சு ஜனாதிபதி திடீரென அறிவித்த பாராளுமன்றத் தேர்தல்களில் மறீன் லுலூபென் சார்ந்த தீவிர வலதுசாரிக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்குமென பல கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வந்தாலும் தேர்தலுக்கு சற்று முன்பாக வசரம் அவசரமாக ஒழுங்குசெய்யப்பட்ட இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகள் எதிர்பாராத அளவுக்கு ஆதரவைபெற்று லுபென்னின் வலதுசாரிக் கட்சியை மூன்றாமிடத்திற்குத் தள்ளக்கூடிய சாத்தியங்கள் உண்டென தேர்தலுக்குப் பின்னான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இக்கருத்துக்கணிப்புகளின்படி 577 ஆசனங்களுக்கான இத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் 184-198 ஆசனங்களையும், மக்றோனின் நடுநிலைக் கட்சி 160-169 ஆசனங்களையும், லூ பென்னின் தேசியவாத, வலதுசாரிக் கட்சியான National Rally 135-143 ஆசனங்களையும் பெறக்கூடுமென தெரியவருகிறது. இது உண்மையாகில் இடதுசாரிகளின் ஆதவுடன் மக்றோன் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்கலாமென நம்பப்படிகிறது. Image Credit:CBC