நறுக்கு செய்திகள்

நறுக்கு செய்திகள்: ஜூன் 10, 2024

சமாகி ஜன பலவேகய ஆட்சியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்போது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“சட்டப் புத்தகத்தில் இருப்பதை அப்படியே நான் நிறைவேற்றுவேன். அநைத்து மாகாணங்களுக்கும் இதை முறையாக நடைமுறைப்படுத்தும்போது நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அரசியல், சமூக, பொருளாதார, மத, கலாச்சார உரிமைகளுடன் சமத்துவத்துடன் வாழமுடியும். இதையே தான் நான் மே தினத்தன்றும் கூறியிருந்தேன். இதர அரசியல்வாதிகளைப் போல் 13 ஆவது திருத்தத்தின் பின்னால் நின்று நாடகமாடிவிட்டு எதையுமே செய்யாமல் போவது பால் நான் செய்யமாட்டேன்” என பிரேமதாச இந்நிகழ்வின்போது தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி மக்றோனின் கட்சி படுதோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இம்மாத முடிவில் பொதுத் தேர்தலை நடத்தவிருப்பதாக மக்றோன் நேற்று திடீர் அறிவிப்பொன்றைச் செய்திருக்கிறார். ஐரோப்பிய பாரளுமன்றத் தேர்தலில் மொறீ லெ பென்னின் அதி வலது கட்சி கட்சியான ‘நஷநல் ரலி’ 32% வாக்குகளையும் மக்றோனின் கட்சி 15%, சோசலிசக் கட்சி 14% வாக்குகளையும் எடுக்கலாமென்று முடிவுகள் எதிர்வுகூறுகின்றன.

இவ்வருடம் செப்டம்பர் மாத அளவில் பாரிஸ் ஒலிம்பிக் விலீஅயாட்டுகள் நடைபெறவுள்ளதால் அதற்கு முன், ஜூன் 30 இல் தேர்தல் அறிறிக்கப்பட்டு ஜூலை 7 கீழ் சபைக்கான தேர்தல்களை நடத்த ஜனாதிபதி மக்றோன் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கீழ்ச்சபைத் தேர்தலில் மகாராஷ்டிரம் பீட் மாவட்டத்தில் பா.ஜ.க. தரப்பில் களமிறங்கிய பங்கஜ முண்டே தேர்தலில் தோற்றால் தான் உயிரோடு இருக்கமாட்டேன் என வலையொளி மூலம் சபதமெடுத்த 38 வயதுடைய நபரொருவர் பஸ் வண்டியின் சக்கரத்தினடியில் மாட்டி உயிரிழந்தார். இத்தேர்தலில் பங்கஜ முண்டே காங்கிரஸ் வேட்பாளரான பாஜ்ராங் சோனவானே யிடம் 6,553 வாக்குகளினால் தோற்றுப்போயிருந்தார்.

இறந்தவர் அஹ்மெட்பூரைச் சேர்ந்த 38 வயதுடைய பாரவண்டிச் சாரதியான சச்சின் கொண்டிபா முண்டே எனவும் அவரது மரணம் தற்கொலையாகவிருக்கலாமென பொலிசார் சந்தேகிப்பதாகவும் அறியப்படுகிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் இந்நபர் மனக்குழப்பத்துக்குள்ளாகியதுடன் குடும்பத்தார் எவருடனும் பேசுவதை நிறுத்தியிருந்தார் எனவும் அவரது குடுபத்தினர் கூறி வருகின்றனர். சம்பவம் நடைபெற்றபோது பஸ்வண்டியொன்றின் பின்னால் இந்நபர் நின்றுகொண்டிருந்ததாகவும் பஸ் வண்டி பின்நோக்கி ‘றிவேர்ஸில்’ நகரும்போது அவர் நசிக்கப்பட்டு மரணமானார் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பங்கஜ முண்டேயின் தோல்வியைத் தொடர்ந்து இதுவரை இருவர் தற்கொலை செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.