நறுக்கு செய்திகள்

நறுக்கு செய்திகள்: ஜூன் 04, 2024

இந்திய மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணுதல் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது எனவும் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 32 தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது எனவும் அறியப்படுகிறது. பா.ஜ. க கூட்டணியிலுள்ள பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தர்மபுரியில் முன்னணியில் உள்ளார் எனவும் பா.ஜ.க. வின் கோயம்புத்தூர் தொகுதி வேட்பாளரான அண்ணாமலை எண்ணிக்கையில் பின்னணியில் உள்ளாரெனவும் இடைநிலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கார்த்திக் சிதம்பரம், மாறன் ஆகியோரும் வெற்றிபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. மொத்தத்தில் பா.ஜ.க.கூட்டணிக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆசனம் மட்டுமே கிடைக்கும் சாத்தியமுண்டெனவும் இதுவரை வெளிவந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மொத்தம் 543 தொகுதிகளில் நடைபெற்ற வாக்களிப்பில் இதுவரை ஒரு தொகுதியில் பா.ஜ.க. வெற்றியீட்டியும் 293 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னணியிலுமுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 181 தொகுதிகளில் முன்னணியிலுள்ளது.

யாழ் நூலக எரிப்பின் 43 ஆவது வருட நினைவு தொடர்பாக நூலகத்தின் கேட்போர் அரங்கில் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், நூலக எரிப்பு தொடர்பாக சோமீ தரன் அவர்களின் இயக்கத்தில் உருவான “எரியும் நினைவுகள் (Burning Memories) ” எனும் ஆவணப்படமொன்றும் அதைத் தொடர்ந்து ஒரு உரையாடலும் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதி நேரத்தில் இலங்கை புலனாய்வுப் பொலிசாரினால் இந்நிகழ்வுக்குத் தடைவிதிக்கப்பட்டது எனவும் இதன் பின்னர் சிவில் சமூக அமைப்பொன்றின் தலையீட்டைத் தொடர்ந்து ஆவணப்படம் திரையிடப்பட்டது எனவும் இத்திரையிடலைத் தொடர்ந்து நடைபெறவிருந்த உரையாடலுக்கான அனுமதி மறுக்கப்பட்டது எனவும் அறியப்படுகிறது. (படம்)

மே 31, 1981 அன்று யாழ் பொதுசன நூலகம் சிங்கள அரசாங்க குண்டர்களால் தீவைத்துக் கொழுத்தப்பட்டதும் இதன்போது 97,000 அரிய தமிழ் நூல்களும், ஓலைச்சுவடிகளும் நிரந்தரமாக அழிக்கப்பட்டன. திராவிட கட்டிடக்கலையைப் பிரதிபலித்த ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமெனக் கருதப்பட்ட இக்கட்டிடம் இன்றுவரை தமிழரின் நீங்கா நினைவுகளில் ஒன்றாகவிருக்கிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்கும்படி வடக்கு கிழக்கு மக்களைக் கோரும் பிரச்சார நடவடிக்கை ஒன்றை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்னும் அமைப்பு முன்னெடுத்து வருகிறது. நாட்டின் ஒற்றையாட்சி முறைமை இல்லாதொழிக்கப்பட்டு சமஷ்டி ஆட்சி முறைமை செயற்படுத்தும்வரை அனைத்து தேர்தல்களையும் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமெனக் கோரும் துண்டுப்பிரசுரங்களை இவ்வமைப்பினர் விநியோகித்து வருகின்றனர்.

2005 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலைப் பகிஷ்கரித்த காரணத்தினால் தான் ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டார் என சமீபத்தில் யாழ் மாவட்ட பா.உ. சுமந்திரன் கூறியதற்கு எதிர் நடவடிக்கையாக இப்பிரசாரத்தை மேற்கூறிய அமைப்பு செய்துவருகிறது.

சுரேஷ் பிரேமச்சந்திரன், விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரது கட்சிகள் இக்கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.