Newsநறுக்கு செய்திகள்

நறுக்கு செய்திகள்: ஜனவரி 08, 2025

விடுமுறைக்கெனெ விசா எடுத்து இலங்கை வரும் வெளிநாட்டுக்காரர் இலங்கையில் வியாபார முயற்சிகளில் ஈடுபட முடியாது எனவும் இதற்கான பொறிமுறையொன்றைத் தாம் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரியா தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டவர்கள் இலங்கையில் வியாபார முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் அவர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்படி விடயத்தைத் தெரிவித்தார். இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் இலங்கையின் பல பகுதிகளிலும் இஸ்ரேலிய மத, கலாச்சார நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவற்றுக்கு பொலிஸ் மற்றும் விசேட பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியிந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் வதியும் இலங்கையர் இனிமேல் இணையவழியாகத் தமது பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான பரீட்சார்த்த செயற்திட்டமொன்றை பதிவாளர் நாயக அலுவலகத்துடன் இணைந்து வெளிவிவகாரம், வெளி வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆரம்பித்து வைத்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தமது தூதரகங்கள் மூலம் இலங்கை பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் தரவு வங்கியிலிருந்து இச்சேவைகளைப் பெறமுடியும். ஆரம்பத்தில் யப்பான், குவெய்த், கட்டார், இத்தாலி, கனடா, அவுஸ்திரேலியா, துபாய் ஆகிய நாடுகளில் வாழ்பவர்கள் மட்டுமே இச்சேவைகளைப் பெறமுடியும் எனவும் இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் இதர நாடுகளுக்கும் அது விஸ்தரிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. சான்றிதழ்களுக்கான விண்ணப்பம் கிடைக்கப்பெறறதும் அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் இலங்கையிலுள்ள e-BMD தரவு வங்கியிலிருந்து சான்றிதழ்களைப் பெற்று விண்ண்ப்பதாரிகளுக்கு விநியோகிக்கும்.


திங்களன்று தமிழ்நாடு சட்டசபை அலுவல்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்திய தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற காரணத்தினால் சபையை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்காமல் ஆளுனர் ரவி வெளிநடப்பு செய்திருக்கிறார். இந்திய தேசிய கீதத்திற்குப் பதிலாக சபையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுதற்கு ஆளுனர் ரவி தொடர்ந்தும் எதிர்ப்பைக் காட்டி வருகிறார். ஆளுனரின் தமிழ்த்தாய் எதிர்ப்பு குழந்தைத் தனமானது எனத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவரது நடவடிக்கைகளைக் கண்டித்து திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையில் மாநில ரீதியாக கண்டனக்கூட்டங்களை நடத்த தும்படி உத்தரவிட்டுள்ளார்.