நறுக்கு செய்திகள்

நறுக்கு செய்திகள் – ஏப்ரல் 12, 2024

மட்டக்களப்பு சிறைச்சாலையில் நிலவும் வசதிக்குறைவுகளைச் சீர்செய்யவென IMHO USA 14 காற்றாடிகள், 10 கரம் பலகைகள், 10 சதுரங்கப் பலகைகள், 5 தொலைக்காட்சிப் பெட்டிகள் ஆகியவற்றைத் தானம் செய்திருக்கிறது. இதைவிடவும் இச்சிறைச்சாலையில் கைதிகள் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 3 வாளிகள் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறதெனவும் இவ்விடயத்தில் அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் உதவியை சிறைச்சாலை அத்தியட்சகர் கோரியிருக்கிறார் எனவும் அறியப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்லாறு பிரதேசத்திலுள்ள உதயபுரம் தமிழ் மகாவித்தியாலயத்தின் கட்டிடம் சீர்குலைந்து இருப்பதுடன் அங்கு ஒரே ஒரு வெளிப்புற கழிவறையும் சுவர்கள், கதவு ஏதுமின்றிக் காணப்பட்டதையடுத்து சுமார் US$ 40,000.00 செலவில் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு 7 கட்டிடங்களுக்கான கூரைகள், கழிப்பறைகள், நீர் வழங்கல், நீர்ப்பாசன வசதிகள், குடிநீர்த் தொட்டி, விளையாட்டுத் திடலைச்சுற்றி அணை மதில், விளையாட்டு உபகரணங்கள், கணனிகள் மற்றும் தளபாடங்களுடனான கணனி அறை ஆகியவற்றை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

சப்ரகமுவா மாகாணத்திலுள்ள நிவித்திகல தமிழ் மகா வித்யாலயத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) குழாய்க்கிணறு ஒன்றை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் அங்கு கல்வி கற்கும் 475 மாணவர்களும், 20 ஆசிரியர்களும் பலன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைப்பின் தலைவர் Dr.ராஜம் தெய்வேந்திரன் நிவித்திகல வலய அதிபர்களைச் சந்தித்து அவரவர் பாடசாலைகளில் இருக்கும் நிலைமைகளையும் கேட்டறிந்தார் (ஏப்ரல் 09, 2024)April 9th. 2024