நறுக்கு செய்திகள்

நறுக்கு செய்திகள்: ஏப்ரல் 26, 2024

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா சம்பந்தனுக்கு பாராளுமன்ற அலுவல்களிலிருந்து 3 மாத கால விடுமுறையை வழங்க இலங்கை பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 91 வயதுள்ள திரு சம்பந்தன் சுகவீனம் காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதில் சிரமப்படுகிறார் என்ற காரணத்தால் எதிர்க்கட்சியின் பாராளுமன்றப் பிரதிநிதி லக்ஸ்மன் கிரியெல்ல முன்வைத்த பிரேரணையை கூட்டமைப்பு பா.உ. சார்ள்ஸ் நிர்மலநாதன் அங்கீகரித்திருந்ததைத் தொடர்ந்து பாராளுமன்றம் இப்பிரேரணையை நிறைவேற்றியிருக்கிறது.

பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்ள்ஸ் அவர்களிந் உடல்நிலை மோசமைந்திருக்கிறதெனவும் அவருடைய மரணச் சடங்குகளுக்கான ஒழுங்குகள் செய்யப்படுகிறதெனவும் செய்திகள் கசிந்துள்ளன. இதுவரை வெளியிடப்படாத புற்றுநோய் வகையொன்றால் பீடிக்கப்பட்ட சார்ள்ஸ் அரசர் தான் புற்றுநோயிலிருந்து தப்பிவிடுவேன் என உறுதியுடன் இருப்பதாகவும் ஆனால் அவரது நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் இல்லையெனவும் அரண்மனைக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாக டெய்லி பீஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபல சமூக ஊடகமான Tik Tok தளத்தைத் தடைசெய்வதற்கான சட்டமொன்றை அங்கீகரித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். சீனர் ஒருவருக்குச் சொந்தமான இந் நிறுவனம் சீன அரசின் தகவல் சேகரிப்பில் பங்குகொள்கிறது எனவும் அதன் இயங்குதளம் வெளிப்படைத்தன்மையற்றது எனவும் குற்றஞ்சாட்டி அமெரிக்கா இத்தளத்தைத் தடைசெய்கிறது. இக்குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த Tik Tok நிறுவனம் இத்தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவிருப்பதாகவும் இதன் மூலம் இத்தடையை பலவருடங்களுக்கு நடைமுறைப்படுத்தாமல் செய்யமுடியுமென அந்நிறுவனம் நம்புவதாகவும் அறியப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 170 மில்லியன் பாவனையாளர்கள் Ti k Tok தளத்தைப் பாவிக்கிறார்கள்.