நறுக்கு செய்திகள்

நறுக்கு செய்திகள் – ஏப்ரல் 13, 2024

யாழ். சிறையில் கைதிகளாக இருப்பவர்கள் விடுதலையாகி சமூகத்துடன் இலகுவாக ஐக்கியப்படுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு புனர்வாழ்வு மரும் தொழிற் கல்வியை வழங்குவதற்கு உகந்த வகையில் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) யாழ் சிறையில் தொழிற்கல்விப் பயிற்சிக்கூடம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. கைதிகளின் உளவியல், சமூக, தொழில், பொருளாதார வளம் சம்பந்தமான விடயங்களில் அறிவாற்றலுடன் உடல் மற்றும் உள ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்ளும் வகையில் இங்கு கல்வி புகட்டப்படும். இதன் ஆரம்பமாக தெரிந்தெடுக்கப்பட்ட 50 கைதிகளில் ஆண்களுக்கு உலோகப் பொருத்தல் (welding) பயிற்சியும் பெண்களுக்கு தையல் (sewing) பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி நிலையத்தை அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) உடன் பிரித்தானியாவைச் சேர்ந்த ரட்ணம் அறக்கட்டளையும் இணைந்து மேற்கொள்கின்றன.

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் எதிர்பார்த்த ஈரானிய பழிவாங்கல் முயற்சி நேற்று நிறைவேறியது. நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் ட்றோன்களையும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது எனவும் அவற்றில் பெரும்பாலானவற்றை அமெரிக்க, பிரித்தானிய, இஸ்ரேலிய மற்றும் ஜோர்தானிய ஏவுகணைகள் நடுவானில் தாக்கியழித்துவிட்டன என அறியப்படுகிறது. எதிர்த்தாக்குதலுக்குத் தப்பிய ஏவுகணைகள் இஸ்ரேலிய இலக்குகள் சிலவற்றைத் தாகியிருந்தன எனவும் இச்சம்பவங்களின் போது சில இஸ்ரேலியர் காயமுற்றதாகவும் இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2024 அன்று சிரியாவிலுள்ள ஈரானிய தூதரக அலுவலகம் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் நிகழ்த்தியதில் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் மூத்த அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவதற்காகவே ஈரான் இத்தாக்குதல்களை நிகழ்த்தியது என அந்நாட்டின் தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் நடவடிக்கைகள் காரணமாக அப்பிரந்தியத்திற்கான விமான சேவைகள் பல தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.