Sri Lanka

நறுக்குச் செய்திகள்: மே 17, 2024

தமிழ்நாடு, நாகபட்டினத்திற்கும் காங்கேசந்துறைக்குமிடையே மே 13 அன்று ஆரம்பமாகவிருந்த பயணப்படகுச் சேவை மீண்டும் காலவரையின்றிப் பின்போடப்பட்டிருக்கிறது என விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். இதற்கு காரணம் ‘தொழில்நுட்பப் போதாமை’ என அவர் அறிவித்தாலும் இதன் பின்னால் பலத்த அர்சியல் காரணங்கள் இருப்பதாகவே உணரப்படுகிறது. இலங்கை சமீபத்தய பொருளாதார முடக்கத்திலிருந்து மீண்டெழ இந்தியா பெருமளவில் உதவிகளைச் செய்திருப்பினும் இந்திய – இலங்கை உறவுகள் விஸ்தரிக்கப்படுவதை சிங்கள தேசிய சக்திகள் ஒருபோதும் விரும்பவில்லை எனவும், குறிப்பாக இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் சூழலில் இந்நடவடிக்கைகள் ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களுக்கு சாதகமாக இருக்கப்போவதில்லை என்னும் கருத்தின் அடிப்படையில் இப்படகுச் சேவை தாமதப்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவதானிகள் கருதுகிறார்கள்.

சம்பூரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வின்போது பொலிசாரினால் காட்டுமிராண்டித்தனமாகக் கைதுசெய்யப்பட்ட பொதுமக்கள் மூதூர் மாஜிஸ்திரேட்டினால் விடுதலை செய்யப்பட்டதுடன் கஞ்சி வழங்குதல் மீது பொலிசாரினால் போடப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் திரு கனகரத்தினம் சுகாஷ் தலைமையில் பல சட்டத்தரணிகள் கைதுசெய்யப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றம் சென்றிருந்தனர். இதன் பேறாக நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்தே நீதிபதி மேற்குறிப்பிட்ட தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். இவ்விசாரணையின்போது 10 க்கும் மேற்பட்ட முஸ்லிம் வழக்கறிஞர்கள் திரு கனகரத்தினம் அவர்களுடன் நீதிமன்றம் சென்று தமது ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கியிருந்தனர். வழக்கு முடிவுற்றதும் நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கறிஞர் திரு கனகரத்தினம் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் மஆதரவு தந்த முஸ்லிம் வழக்கறிஞர்களுக்கு விசேடமாக நன்றியைத் தெரிவித்தார்.

‘திருப்பு முனை’ (Turning Point) என்னும் சுலோகத்துடன் மே 17, 18 ஆகிய திகதிகளில் கொழும்பிலிம் வவுனியாவிலும் இரண்டு சர்வமத நிகழ்வுகள் நடைபெற்றன. பெளத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் தலைவர்கள் நினைவுத் தீபமேற்றி போரின் காரணமாக இறந்தவர்களை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.

“வடக்கிலும், தெற்கிலும் இந்த எங்கள் தாய்நாட்டில் எங்கள் மக்கள் இறந்து போனார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு அமைதி வணக்கத்தைத் தெரிவிக்க நாம் எமது கரங்களால் இணைவோம். அவர்கள் மறக்கப்படவில்லை. நாங்கள் மாறிவிட்டோம் என்று அவர்களுக்குச் சத்தியம் செய்கிறோம். அதற்காகத் தீபங்களை ஏற்றுங்கள். எம்முள் இருக்கும் மனிதத்தை மீளவும் எழச் செய்யுங்கள். எமது சகோதரர்களது துயருறும் இதயங்களை ஆசுவாசப்படுத்த எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்” என இவ்வமைப்பு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதன் பிரகாரம் மே 17 அன்று மாலை 6:00 மணிக்கு கொழும்பிலுள்ள விகாரமாதேவி பூங்காவிலுள்ள புத்தர் சிலைக்கு முன்பாக இந்நிக்ழ்வு நடைபெற்றது. மதத் தலைவர்களுடன் பேராசிரியர் ஜெகன் பெரேரா உட்பட்ட பல சிவில் சமூகத் தலைவர்கள், மனோ கணேசன், பா.உ. ஆகியோர் உரையாற்றினர்.

நாளை, மே 18, இதன் இரண்டாவது நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

IRES, GTF, One Sri Lanka Dialogue-YMBA, Darmashakthi Organization ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தன. இந்நிகழ்வுகள் Facebook Live நேரடி வலையொளி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது (https://www.facebook.com/events/1093368461740560/)