நரை நிலை வாழ்க்கை
அசை சிவதாசன்
அதுவும் இதுவும் இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத வரையறைக்குள் இல்லாதது உலகில் எதுவும் இல்லை.
எல்லை என்று ஒன்று இருக்கவே முடியாது. ஒளி எங்கு முடிகின்றது, இருள் எங்கு தொடங்குகின்றது என்று யாராலும் சொல்லிவிட முடிகிறதா? வைகறையாயினும் அந்தி வானமாயினும் இருளும் ஒளியும் இரண்டறக் கலந்த நிலைகள் தானே. மனித வாழ்வின் சுகல இயக்க நிலைகளிலும் இந்த இரண்டறக் கலந்த தன்மையே பரந்து காணப்படுகிறது. இந்தக் கறுப்பு வெள்ளை என்று பிரிக்க முடியாத பிரதேசத்தை நரை நிலை (grey area) என்கிறார்கள்.
மனித இயல்புகளையும், குணாதிசயங்களையும் நாம் அறுதியிட்டு வரைவு செய்வது என்னவோ எனக்கு குழப்பமாகவே இருப்பதுண்டு. ஒருவனை மேதை என்றும் இன்னொருவனை முட்டாள் என்றும் யார் வைத்த அளவுகோலின் பிரகாரம் வரையறை செய்து கொள்ள முடியும்? மேதைக்கும் முட்டாளுக்குமிடையில் யாருமே இருக்க முடியாதா? தெய்வ நிலையில் வாழ்ந்த மனிதரும் மனித நிலையில் வாழ்ந்த தெய்வங்களும் நமது சமய நூல்களில் பரந்து காணப்பட்டவர்கள். யார் எப்போ எந்த நிலையிலிருந்தார் என்று எவராலும் சொல்லிக்கொள்ள முடியாது.
மானிடத்துவம் எங்கு முடிகின்றது தெய்வத்துவம் எங்கு தொடங்குகின்றது என்று பிரித்துச் சொல்ல முடியாத உயர்வு பொருந்திய உத்தம சீலர்கள் பலர் நம்முள் வாழ்ந்தனர். புத்தர், யேசு, காந்த போன்ற மகான்கள் இந்த நரை நிலைகளில் எங்கெங்கோ இனங்காணப்பட வேண்டியவர்கள்.
மெய்ஞானம், விஞ்ஞானம் என்ற சகல ஞானங்களும் இந்த உலகியல் யதார்த்தத்தில் அடக்கம் பெறுபவை. நீரிலிருந்து பாலைப் பிரித்துண்ணும் அன்னப் பறவைகள் போல இந்த உலகியல் நரை நிலையில் மறைந்துறங்கும் ஞானத்தைப் பிரித்துக் கிரகித்துக் கொள்பவன் ஞானியாகிறான். புவியின் ஈர்ப்பு விசையை நியூட்டன் புதிதாகக் கண்டுபிடித்துத் தந்தவரில்லை. ஏற்கெனவே இருந்த ஒரு விடயத்தை அவரால் கிரகித்துக் கொள்ள முடிந்தது. இதனால் இவர் விஞ்ஞானியானார்.
உலகியலின் அனாத்ம மாயைகளினின்றும் ஆத்ம ஞானத்தைப் பிரித்துண்டு ஞானியானவர் புத்தர். சாத்திரங்கள் சொல்கின்ற அவதாரங்கள் எல்லாம் ஒரு வகையில் இந்த இரண்டறக் கலந்த இரண்டும் கெட்ட நிலையானதுகளே. மகிமையோடு எளிமையையும் இனம் காட்டி நிற்கும் இவர்கள் ஒரு வகையில் நாம் மதித்து மரியாதை செய்யும் தெய்வீக மேன்மையையும் இன்னொரு வகையில் நாமும் உறவு கொண்டாடக்கூடிய மானிட எளிமையையும் கொண்டிருந்தவர்கள். மானிடமும் தெய்வீகமும் இவர்களினூடுதான் இரண்டறக் கலந்தது.
ஆட்டிசம் (autism) என்றொரு வியாதி இருக்கின்றது. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் விருத்திப் பிறழ்வுகளின் காரணமாக சில குழந்தைகள் மற்றவர்களின் பார்வைக்கு அசாதாரணமானவையாகப் படுகிறார்கள். இதை ஒரு வரிப்பட்டை (spectrum disorder) வியாதி எனப் பொதுவாக அழைப்பார்கள். ஞானிக்கும் பித்தனுக்கும் உள்ள ஒரு நரை நிலையே இந்த வரிப்பட்டை என்று நான் நினைக்கிறேன். பல ஆத்ம ஞானிகளும் விஞ்ஞானிகளும் நடந்து கொள்ளும் முறைகளையிட்டு நாம் அதிசயித்திருக்கிறோம். இவர்களில் பலருக்கும் இந்த ஆட்டிசம் வியாதி இருந்திருக்கலாம்.
சீனக் கலாச்சாரத்தில் இருக்கும் யின் யான் தத்துவமும், இந்து மரபு முன்வைக்கும் சக்தி சிவம் தத்துவமும் அருவமும் உருவமுமில்லாத அந்த நரை நிலையினூடே உலக இயக்கத்தைப் பார்க்கின்றன. எவரையும் சுட்டி இவர் இன்னவர் இவர் அவரில்லை என்று அறுதியாகக் கூறிவிட எமக்கு அளவுகள் தரப்படவில்லை. கூர்மை பெற்ற ஞானி ஒருவனால் சிலவேளைகளில் இந்த நிறப் பிரிக்கை சாத்தியமாகலாம்.
அசை – தாயகம் 10-12-93