Health

நரம்பு வியாதி ஆராய்ச்சியில் மருத்துவர் ரூபிகா பாலேந்திராவுக்கு தங்கப் பதக்கம் பரிசு

அம்ய்லோட்றோஃபிக் லற்றெறல் ச்கெலொறோஸிஸ் (Amyotrophic lateral sclerosis (ALS)) எனப்படும் நரம்பு வியாதிக்கு சிகிச்சை காணும் ஆராய்ச்சியில் உழைத்துவரும் டாக்டர் ரூபிகா பாலேந்திராவிற்கு 2024 ஆம் ஆண்டிற்கான இளம் ஆராய்ச்சியாளர் விருது வழங்கி என்கல்ஸ் (ENCALS) எனும் நிறுவனம் கெளரவித்திருக்கிறது.

European Network to Cure ALS (ENCALS) என்னும் அமைப்பு ALS வியாதிக்கு சிகிச்சை தேடி ஆராய்ந்துவருபவர்களுக்கு வருடா வருடம் விருது வழங்கிக் கெளரவித்து வருகிறது. அந்த வகையில் ஸ்ரொக்ஹோம், சுவீடனில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் வைபவத்தில் இளம் ஆராய்ச்சியாளருக்கான தங்கப் பதக்கம் டாக்டர் ரூபிகா பாலேந்திராவிற்கும் டாக்டர் றற்கோ றடகோவிச்சிற்கு வெள்ளிப் பதங்கமும் வழங்கப்பட்டன. ALS வியாதி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் ரூபிகா மற்றும் றட்கோ ஆகியோரை என்கல்ஸ் அமைப்பின் விருதுக் குழுவின் தலைவரான பேராசிரியர் அம்மார் அல்-சலாபி பாராட்டியதுடன் இவ்விருதுகளை வழங்கிக் கெளரவித்துமிருந்தார்.


லண்டன் பல்கலைக்கழகக்கல்லூரி, குயீன்ஸ் ஸ்குயர் நியூறோலொக் இன்ஸ்டிடியூட்டில் விரிவுரையாளராகவும் லண்டன் பல்கலைக்கழகக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் மற்றும் நரம்பு அறுவைச்சிகிச்சை ஆகிய துறகளின் பதிவாளராகவும் கடமையாற்றி வருகிறார். ரூபிகா தனது மருத்துவப்படிப்பை கேம்பிறிட்ஜ் மற்றும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றில் மேற்கொண்டிருந்தார். ALS வியாதியினாற் பீடிக்கப்பட்ட நோயாளிகளின் அனுபவங்களை நேரடியாக அறிந்த அவர் இத்துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டுமென விரும்பி இத்துறையில் கவனம் செலுத்தினார்.

ALS என சுருக்கமாக அழைக்கப்படும் Amyotrophic Lateral Sclerosis இவ்வியாதி மூளையிலும் முள்ளந்தண்டிலும் இருக்கும் நரம்புக்கலங்களைப் பாதிக்கிறது. இதன் மூலம் சில தசைகளின் கட்டுப்பாடு செயலிழந்து போகிறது. சிறிது சிறிதாக இவ்வியாதி பரவலடைந்து உணவை விழுங்குவ மற்றும் சுவாசிப்பதில் சிரமம், கால் கைகளின் தசைகள் செயலிழப்பதால் இயக்கமில்லாமற் போதல் போன்ற சிரமங்களுக்கு உள்ளாகி இறுதியில் மரணத்தில் முடிகிறது. இவ்வியாதி பீடித்த நோயாளியாக முதன் முதலில் அறியப்பட்டவர் அமெரிக்க பேஸ் போல் விளையாட்டுக்காரரான லூ கெறிக் என்பதனால் இவ்வியாதியை ‘லூ கெறிக் வியாதி’ எனவும் அழைக்கிறார்கள். தசைகள் துடிப்பது போன்ற அறிகுறிகளுடன் இவ்வியாதி ஆரம்பிக்கிறது எனவும் அதைத் தொடர்ந்து தசைகள் பலவீனமடைவதுடன் உணவு விழுங்குதல் சுவாசித்தல் போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன எனவும் அறிய முடிகிறது.

இவியாதிக்குக் காரணமான நரம்புக்கலங்களில் ஏற்படும் பாதிப்பை ஆராய்வதற்கு ரூபிகாவும் இதர ஆராய்ச்சியாளர்களும் மனிதக் கலங்களிந் கட்டமைப்பின் மூல உறுப்புகளான RNA மற்றும் அமிணோ அமிலங்கள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். (Image Courtesy: ENCALS)