Spread the love

விசாரணைகள் மேற்கொள்ளப்படும் – வட மாகாண ஆளுனர்

யாழ்ப்பாணம் ஜூன்22: நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் பிரகாரத்தினுள் பாதணிகளோடும், துப்பாக்கிகளோடும் பொலிசாரும் இராணுவத்தினரும் சென்று மிக நீண்டகால ஒழுக்கப்பாரம்பரியங்களை அவமதிக்கிறார்கள் என த.தே.கூ. முன்னாள் பா.உ. மாவை சேனாதிராஜா பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆண்கள் தமது மேலாடைகளுடன் கூட உள்ளே செல்லமுடியாது என்ற மிகவும் இறுக்கமான விதிமுறைகளை மிகநீண்டகாலமாகக் கடைப்பிடித்துவரும் சைவக் கோவில்களில் நயினை நாகபூஷணி அம்மனும் ஒன்று. அம்மனைத் தரிசிக்க வருடா வருடம் ஆயிரக்கணக்கில் திரளும் தென்னிலங்கை சிங்கள மக்கள்கூட இவ் விதிமுறைகளுக்கு இணங்கி வணங்கிச் செல்வதுண்டு. பொதுவாக உலகெங்குமுள்ள இந்துக் கோவில்களிலும் பாதணிகளை வெளியே கழற்றிவைத்துவிட்டுப் போவது நடைமுறை.

பொலிஸ், இராணுவத்தினது இந்நடத்தைகள் வேண்டுமென்றே அவமதிப்பதாக இருக்கிறது என மாவை சேனாதிராஜா, தொலைபேசி மூலம் மஹிந்த ராஜபக்சவுக்கு இன்று, முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.



வடமாகாண ஆளுனர் பிஎஸ்எம் சார்ள்ஸ், இச் சம்பவம் குறித்து விசாரணை ஒன்றை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.

சன நெரிசலைக் கட்டுப்படுத்தவேண்டுமானால் உள்ளே போகாமல், பொலிசார் அதை வாசலில் வைத்தே இலகுவாகக் கட்டுப்படுத்த முடியும். அதையும் மீறி உள்ளெ போகவேண்டிய தேவை ஏற்படின், பாதணிகளைக் கழற்றிவிட்டுச் செல்லமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார் (கொலொம்பொ கசெட்)

Print Friendly, PDF & Email
Related:  யாழ்ப்பாணத்தில் சாதனை படைத்துவரும் IMS மருத்துவக் கல்வி நிலையம்