EnvironmentIndia

நம்மாழ்வார் தூதர்கள் | தமிழ்நாட்டில் பரவும் முருங்கை விவசாயம்


நோயெதிர்ப்பை அதிகரிக்கும் இயற்கை உணவு

கொறோணாவைரஸினால் முன்னேற்றமடையும் கிராமங்கள்

கொறோணாவைரஸ் உலகுக்குத் தந்த பல நல்ல விடயங்களில் இதுவும் ஒன்று. வைரஸ் இன்னும் தன் கடமையை முடித்துக்கொள்ளாத நிலையில், நோயெதிர்ப்பு ஆற்றலைப் பலமாக்கும் பல உத்திகளைக் கண்டறியுமாறு அது தமிழ்நாட்டு விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் நம்மாழ்வார் மிகநீண்டகாலமாகப் போதித்துவந்த முருங்கை விவசாயம்.

கொறோணாவைரஸ் படு வேகமாகப் பரவ ஆரம்பித்ததிலிருந்து, தமிழ்நாட்டில் நோயெதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவுகளான முருங்கை, மஞ்சள் போன்ற உணவுகளுக்கான கிராக்கியும் படு வேகமாக வளர்ந்து வருகிறது. இச் சந்தர்ப்பத்தைப் பயனபடுத்தி முருங்கை விவசாயத்தில் ஈடுபட்டு இலாபமீட்டுவது மட்டுமல்லாது மாநிலம் பூராவும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது கரூர் மாவட்டம், லிங்கமணயாக்கன்பட்டியைச் சேர்ந்த கரூர் முருங்கை உணவு விவசாயிகளின் தயாரிப்பு கம்பனி லிமிட்டட். இது, இந்தியா முழுவதும் முருங்கையின் பாவனையை ஊக்குவிக்கவென உருவாக்கப்பட்ட ஒரு விவசாயிகள் கூட்டுறவு நிறுவனம்.

முருங்கை உணவு மட்டுமல்ல, சீந்தில், மஞ்சள் போன்ற பல்வேறு நோய்த்தடுப்பு உணவுகளையும் இன் நிறுவனம் தயாரிக்கிறது. கோவிட்-19 நோய்தடுப்புக்காக மக்கள் இவ்வுணவுகளைப் பெருமளவு வாங்கிப் பாவிப்பதால் இவ்விவசாயிகளின் வருமானமும் பல மடங்குகள் உயர்ந்திருக்கிறது.

நிறுவனத்தின் வெற்றி

கொறோணாவைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்ததைப் போலவே, இந் நிறுவனத்தின் நோய்த்தடுப்பு உணவுகளின் கிராக்கியும் அதிகரித்தது. தற்போது சமூக வலைத்தளங்களின் மூலம் இந் நிறுவனம் தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்தி வருகிறது. “குடற் புண்கள், ஈழை, இனப்பெருக்கம் சார்ந்த பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு முருங்கை ஒரு சிறந்த நிவாரணி” என்கிறார் ஒரு காலத்தில் பொறியியலாளராக இருந்து தற்போது இன் நிறுவனத்தை நிர்வகிக்கும் முதன்மை நிர்வாகி கார்த்திகேயன் மெய்வாணன்.

“இளமையை மீட்கும் சருமப் பூச்சுக்களின் (anti-ageing cosmetics) தயாரிப்பில் முருங்கை எண்ணை மிக முக்கியமான ஒரு மூலப்பொருள். உலகம் பூராவும் அரசாங்கங்கள் நோய்த் தடுப்பாற்றலை ஊக்குவிக்கும் இக் காலத்தில் எமது தயாரிப்புகள், ஊர் முடக்கங்களையும் தாண்டிப் பயணமாகின்றன” என்கிறார் 26 வயதுடைய மெய்வாணன்.நம்மாழ்வார்

இக் கூட்டுறவு நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரான 53 வயதுடைய சரோஜா குமார், ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். “ஒரு காலத்தில் கரூர் விவசாயிகள் தினை, சோளம் போந்ற பயிர்களையே பயிரிட்டு வந்தனர். நீர்ப்பஞ்சம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அநேகமான விவசாயிகள் வரட்சியைச் சமாளிக்கக்கூடிய முருங்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றுக்கு மாறிக்கொண்டார்கள்” என்கிறார் சரோஜா.

“சரியாகப் 10 வருடங்களுக்கு முன்பு, நிலக்கீழ் நீர் வரலாறு காணாத அளவுக்கு வற்றிப்போனது. எங்கள் அயலிலுள்ள பல விவசாயிகள் விவசாயத்தை அடியோடு கைவிட்ட்டார்கள். அப்போதுதான் நான் முருங்கை விவசாயத்தைக் கையிலெடுத்தேன். விவசாய விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஆலோசனையின்படி கரிமை வேளாண்மை (organic farming) முறையை மேற்கொண்டு வரண்ட என் நிலத்தில் இவ்விவசாயத்தை ஆரம்பித்தேன்” என மேலும் அவர் தெரிவித்தார்.


காயவிடப்படும் இலைகள்

முருங்கை எண்ணை

கரூர் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு முருங்கை எண்ணை. ஒரு லீட்டர் எண்ணை ரூ.5,000 த்துக்கு, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்கிறது இன்நிறுவனம். இவெண்ணைத் தயாரிப்பு சரோஜா குமாரின் யோசனையில் உதித்த ஒன்று. முருங்கைக் காய்கள் விற்காமல் இருந்ததைப் பார்த்தவுடன் அதன் விதைகளிலிருந்து எண்ணையை உற்பத்திசெய்யும் யோசனை வந்தது என்கிறார் சரோஜா. சமைப்பதற்கு பாம் எண்ணைக்குப் பதிலாக முருங்கை எண்ணையைப் பாவிக்கலாம், அது உடலுக்கு ஆரோக்கியமானது என்கிறார் அவர்.

“ஆரம்பத்தில் மக்கள், இவ்வெண்ணை நஞ்சாக இருக்குமோ என அதன் மீது சந்தேகம் கொண்டிருந்தார்கள். பின்னர் நாங்களே அதை எங்கள் உணவில் சேர்த்து அவர்களுக்கு நிரூபித்தோம்” என்கிறார் சரோஜா.

முருங்கை இலைகளை விவசாயிகள் பின் வளவில் கொடிகளில் காயப்போடுகிறார்கள். நன்றாக உலர்ந்ததும் அவற்றைப் பொடி செய்து, முருங்கைத் தேநீர், முருங்க சூப் பவுடர், முருங்கைச் சர்க்கரை, இட்லிப் பொடி, முருங்கை சவர்க்காரம் எனப் பலவித பண்டங்களைச் செய்து பொதிசெய்து விற்கிறார்கள்.

கொறோணாவைரஸின் இன்னுமொரு நல்ல விடயம், நகரங்களிலுள்ள மக்களை மீண்டும் கிராமங்களை நோக்கி ஓட வைத்தது. இப்படியாகக் குடி பெயர்ந்த பல இளைஞர்கள் இப்போது கிராமங்களில் விவசாயம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். பல வரண்ட நிலங்கள் இப்போது பசுமையாகிக்கொண்டிருக்கின்றன. கரூர் விவசாயக் கூட்டுறவு முயற்சியில் தற்போது 15 கிராமங்களைச் சேர்ந்த 320 விவசாயிகள் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
மோகனா பாலசுப்ரமணியம் பொதிசெய்யப்படும் முறைகளைக் கண்காணிக்கிறார்

கிராமப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு

42 வயதுடைய லலிதா சரவணன் ஒரு விவசாயி. கடந்த இரண்டு வருடங்களாக இந் நிறுவனத்தில் பணிப்பாளராகப் பணிபுரிகிறார். “இப்படியொரு விவசாயிகளின் கூட்டு முயற்சியான நிறுவனம் கிராமியச் சூழலில் விவசாய நிலங்களை அண்டி இருப்பதன் மூலம் பல கிராமப் பெண்களுக்கு, நிலங்களில் வேலை செய்வதற்கு அப்பால் பல வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடியதாகவிருக்கிறது. தமது உற்பத்திகளுக்கு விலைகளை நிர்ணயம் செய்யுமளவுக்கு அவர்கள் அந்தஸ்துகள் உயர்ந்திருக்கின்றன” என்கிறார் லலிதா.

லலிதா, தன் பங்குக்கு, கத்தரிக்காய், முருங்கை, ஆமணக்கு ஆகியவற்றைப் பயிரிடுகிறார். உலக சந்தையின் நிலவரம்பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார். “கபசுர குடிநீர் எனத் தமிழ்நாட்டு அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படும் பதார்த்தத்தின் மூலப்பொருளான சீந்திலுக்கு தமிழ்நாட்டில் கிராக்கி அதிகமாகியிருப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்கிறார் இந்த கிராமத்து விவசாயியான லலிதா.

“எங்களது போன்ற உள்நாட்டு உற்பத்திகளை அரசு ஊக்குவிக்க வேண்டும் ரேசன் கடைகளில் இறக்குமதி செய்யப்பட்ட பாம் எண்ணைகளை விற்பதை நிறுத்தி எமது முருங்கை எண்ணையை விற்க அரசு முன்வரவேண்டும். அது உள்நாட்டுப் பொருளாதாரத்தை வளர்க்கும்” என்கிறார் லலிதா.

மூலம்: VillageSquare.in படங்கள்: கார்த்திகேயன் மெய்வாணன்