Sri Lanka

நந்தசேனரின் ஆட்சிக்கு எதிராக விரைவில் மக்கள் புரட்சி வெடிக்கும் – முறெத்தெட்டுவ ஆனந்த தேரர் எச்சரிக்கை!

"இந்த அரசுக்கு எதிராக நாங்களும் மக்களோடு விரைவில் வீதியில் இறங்கவேண்டி வரும்" - முறெத்தெட்டுவ தேரர் எச்சரிக்கை!

“தற்போதய ஆட்சியில் மக்கள் விரைவாக அதிருப்தியடைந்து வருகிறார்கள். அவர்களோடு நாங்களும் வீதிக்கு இறங்குவதற்கு முன்னர் பிரதமர் ராஜபக்ச தலையிட்டு நிலைமையைச் சீராக்க வேண்டும்” என புத்தமகா சங்கத்தின் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான முறெத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்தார்.

நரஹேன்பிட்டியவில் செவ்வாயன்று (09) நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது “நாட்டுக்கு சேவைகளை வழங்குமென நம்பியே இந்த ஆட்சியை அதிகாரத்தில் இருத்தினோம். நாங்கள் செய்யாதது எதுவுமில்லை. ஆனால் இப்போது மக்களுக்கு எங்களால் எதுவும் கூறமுடிவதில்லை.

“டாக்டர் அமால் ஹர்ஷா சில்வா திடீரென்று இன்னுமொரு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார். அது விலங்குணவுத் திணைக்களம். ஏன்? புண்ணாக்கு கரைப்பதற்காகவா? முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க புல் வெட்டும் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

“அன்புள்ள ஜனாதிபதி அவர்களே, மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல எங்களால் முடியாமலிருக்கிறது. இப்படியான ஆட்சியைக் கொண்டுவருவதற்காகவா மகா சங்கம் தலையிட்டது என மக்கள் கேட்கிறார்கள். பிரதமரிடம் இதைபற்றிக் கேட்டபோது அவர் எதுவுமே கூறாமல் அமைதியாக இருக்கிறார். மக்களுக்கு விளக்கம் சொல்லிக் களைத்துப் போனோம். இந்த அரசுக்கு எதிராக மக்களுடன் சேர்ந்து நாங்களும் வீதிக்கு இறங்கக் காட்டாயப்படுத்தப்படுவோம்

“இவ்விடயத்தைச் சொல்லிக்கொள்ள சரியான ஒருவருமில்லை. சுகாதாரச் செயலாளர் என ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எப்போதும் மூடிய கதவுகளின் பின்னாலேயே இருப்பார். அவரை யாரும் தொடர்புகொள்ள முடியாது. இப்படியா ஒரு நாட்டை நிர்வகிப்பது? ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க எவரும் இல்லாதபோது அவர் எப்படி வேலை செய்யலாம்?

“பிரதமர் மஹிந்த ராஜபக்ச!, ஜனாதிபதி உங்களது சகோதரர். அவர் ஜனாதிபதி வேலையைப் பார்க்கட்டும். நீங்கள் மக்கள் தேவைகளை நிறைவேற்றச் சேவை செய்யுங்கள். அல்லாவிடில் இந்த அரசு இப்படியே தொடர முடியாது. மக்களின் அதிருப்தி மெதுவாக வளர்ந்து வருகிறது. புத்த பிரான் ஒரு தடவை கிசகெளதமியிடம் கூறினார் “மரணம் நிகழாத வீடொன்றிலிருந்து கொஞ்சம் கடுகு கொண்டு வா” என்று. இப்போது நாங்கள் இந்த அரசாங்கத்துக்குச் சொல்வது ” அதிருப்தியடையாத ஒருவரைக் கொண்டுவாருங்கள்” என்று. எல்லோருமே அதிருப்தியடந்துள்ளார்கள்” என்று தேரர் கூறினார்.