நட்ட ஈட்டை ஏற்றுக்கொள்ள காணாமலாக்கப்பட்டோர் குடும்பங்கள் மறுப்பு
காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவிருந்த ரூ.100,000 நட்ட ஈட்டைப் பெறுவதற்கு அவர்களின் உறவினர்கள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இரு தரப்பினரிடையேயும் நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்துவரும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசாங்கம் இந்நட்ட ஈட்டை இருமடங்காக (ரூ 200,000) அதிகரிக்க முயன்றபோதும் இவ்வுறவினர்கள் அதற்குச் சம்மதிக்க மறுத்துவிட்டனர்.
இது தொடர்பாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் முல்லைத்தீவுக் கிளைத் தலைவர் மரியசுரேஷ் ஈஸ்வரி நேற்று (அக்டோபர் 11) பேசுகையில் இந்நட்ட ஈட்டினால் எமது கேள்விகளுக்கு விடைகள் காணப்படப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
“காணாமற் போனதற்கான அத்தாட்சி கோரலை அரசாங்கம் மீளப்பெற்றுக்கொண்டாலும் நட்ட ஈட்டை ஏற்றுக்கொள்வதால் நாம் அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாகவே அது பார்க்கப்படும். எனவே நாம் அரசாங்கத்தின் இந்நட்ட ஈட்டை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதுவரைகாலமும் ஆட்சியிலிருந்த அரசுகளால் எமது பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முடியவில்லை அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. சர்வதேச தலையீடு மட்டுமே இந்த நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தர முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மார்ச் 14, 2022 இல் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ரூ. 100,000 நட்ட ஈட்டை வழங்குவதென அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்நட்ட ஈட்டைப் பெற எவரும் முன்வராத காரணத்தாலும், ஒரு இலட்சம் ரூபா போதுமானதாக இல்லை என்ற காரணத்தாலும் அதை ரூ. 200,000 ஆக அதிகரிக்க கடந்த வாரம் அமைச்சரவை முடிவெடுத்திருந்தது. இருப்பினும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இப்பணத்தை தற்போது நிராகரித்துள்ளன.