“நட்சத்திரங்களுக்கு இடம் கொடுப்பதற்காக என்னனைப் பின்வரிசைக்குத் தள்ளிவிடுகிறார்கள்” – வெதும்பும் அபிஷேக் பச்சன்
பொலிவூட் / பொழுதுபோக்கு
மாயமான்
கடந்த 21 வருடங்களாகப் பொலிவூட்டில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் பிரபலம் அபிஷேக் பச்சன். போதாததற்கு அப்பாவின் பெரும்புகழாலும், பெரும்பணத்தாலும் ஈர்க்கப்பட்டுத் தாலி கட்டிய உலக அழகி ஐஸ்வர்யா ராய் இடது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். ஆனாலும் அபிஷேக் பச்சன் வெதும்பிப் புலம்புமளவுக்கு பொலிவூட் அவரை மதிக்காமல் நடந்துகொள்கிறது.
சமீபத்தில் ‘றோலிங் ஸ்டோன்ஸ்’ சஞ்சிகைக்கு அளித்த பேட்டியொன்றில் தன்னை முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களிலிருந்து தூக்குவதும், பெரும் நிகழ்வுகளில் முதல் வரிசையில் இருத்திவிட்டு பின்னர் நட்சத்திர நடிகர்கள் வரும்போது அவர்களுக்கு இடம் கொடுப்பதற்காகத் தன்னைப் பின்வரிசைக்குப் போகும்படி நிர்ப்பந்திக்கப்படுவதும் மனைதை உடைத்து நொருக்கும் விடயங்கள் என அபிஷேக் அழுது கொட்டியிருக்கிறார். நியாயமான அழுகை தான். மும்பாயைப் போலவே அங்கு பிறந்து வளர்ந்த பொலிவூட்டும் ஒரு நரகக் கிடங்கு என்பதில் சந்தேகமில்லை.
2000 ஆம் ஆண்டில் ‘Refugee’ என்ற படத்தின் மூலம் அபிஷேக் திரையுலகில் நுழைந்தார். ஆனாலும் அவரது பயணம் ஒருபோதும் இலகுவானதாக இருக்கவில்லை. தனது 21 வருடப் பயணத்தில் தனக்குக் கிடைத்த உயர்ச்சிகளையும் வீழ்ச்சிகளையும் அவர் மனம் திறந்து பலதடவைகள் பேசியிருக்கிறார். ஆனாலும் நாள் முடிவில் எல்லாமே ‘வியாபாரம்’ என்ற சமாதானத்துடன் தான் அமைதிகொண்டுவிடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
‘றோலிங்க் ஸ்டோன்ஸ்’ சஞ்சிகைக்கு அவர் அளித்த பேட்டியில், தனக்குக் கூறாமலேயே தனக்குப் பதிலாகப் பல தடவைகள் வேறு யாருக்கும் அப்பாத்திரங்களைக் கொடுத்துவிடுவது சாதாரணமாக நடைபெறுகிறது எனவும் ஒரு தடவை தான் படப்பிடிப்பிக்குக் குறித்த நேரத்தில் சென்றடையும்போது அவரது பாத்திரத்தில் இன்னுமொருவர் நடித்துக்கொண்ட படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தது எனக் கூறியிருக்கிறார். “எதுவுமே பேசாமல் திரும்புவதைத் தவிர எனக்கு வேறு வழியே இருக்கவில்லை. பரவாயில்லை எனது தந்தை உட்படப் பல நடிகர்கள் இப்படியான அவமானங்களை எதிர்கொண்டுள்ளார்கள்” என் இலகுவாகக் கடந்து போகிறார் பச்சன்.

“சில பொது நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட்டு முன் வரிசையில் அமர்த்திக் கெளரவிக்கப்படும்போது மிகவும் மகிழ்ச்சியுறும் சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்துள்ளன. அதே வேளை ஒரு நட்சத்திர நடிகர் வரும்போது “நீங்கள் இப்போது பின் வரிசைக்குப் போகலாம்” எனக் கட்டளை வரும். “இது ‘ஷோ பிசினஸ்’. இங்கெல்லாம் இது சாதாரணம். இதை நீங்கள் தனிப்பட்ட அவமானமாக எடுத்துக்கொள்ளக்கூடாது” எனக் கூறுவார்கள்.
இந்த ‘முகம் பார்க்கும்’ (nepotism) பழக்கம் பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் பல்வேறு மட்டங்களில் இருக்கும் ஒன்று. அதற்காகவேதான் அவை தொடர்ந்தும் மூன்றாம் உலக நாடுகளாக இருந்து வருகின்றன. பொலிவூட்டில் அது கொஞ்சம் அதிகமாகவிருக்கலாம்.
“எனது 21 வருட பொலிவூட் வாழ்வில் இப்படியான மனதை நோகவைக்கும் அல்லது உடைத்து நொருக்கும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. எவ்வளவு பெரிய பணக்காரராகவும், ஆதிக்கக்காரராகவும் இருந்தும்கூட எனது தந்தை எனக்காகவென்று ஒரு படத்தையும் தயாரிக்கவில்லை. அல்லது தன்னோடு என்னையும் சேர்த்து ஒரு படத்தை எடுக்கும்படி அவர் யாரையும் கேட்டதில்லை. ஆனாலும் அவரது பெயரால் எனக்கு இன்னமும் சில கதவுகள் திறந்திருக்கின்றன” எனப் புழுங்குகிறார் சின்னப் பச்சன்.
“அப்பாவின் பெயர் பெரிது தான். அது எனக்குப் பல சந்தர்ப்பங்களைத் தந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அமிதாப் பச்சனின் மகன் என்பதற்காகத் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்பார்கள் எனச் சிலர் நினைக்கலாம். நிலைமை அப்படியல்ல. ஏறத்தாள ஒவ்வொரு இயக்குனர்களிடமும் நான் பேசியிருக்கிறேன். பலர் என்னுடன் பணியாற்றத் தயாராகவில்லை. அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்”
அபிஷேக் பச்சான் ஐஸ்வர்யா ராயை 2007 இல் திருமணம் செய்திருந்தார். அதற்கு முன்னர் அபிஷேக் ஒரு தடவை அவரது தந்தை பணியாற்றிய படமொன்றில் ‘புறடக்ஷன் போய்’ ஆகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது முதல் தடவையாக ஐஸ்வர்யாவைச் சந்தித்திருந்தார். அப்போது அபிஷேக் பேசுவதைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என ராய் குறிப்பிட்டதாகப் பின்னர் அபிஷேக் கூறியிருக்கிறார். அதற்கு காரணம் அவரது விடுமுறைக் காலங்களில் எல்லாம் தந்தை அவரை சுவிட்சர்லாந்துக்கு சாரணப்பயிற்சிக்காக அனுப்பிவிடுவாராம். பாவம் too westernized?
பாவம் அபிஷேக். இந்தியாவில் பிறந்து மேற்குநாடுகளில் வளர்ந்ததனாலோ என்னவோ மும்பையின் நாற்றக் கலாச்சாரத்துக்கு அவர் இன்னும் தயார்ப்படுத்தப்படவில்லை. இரங்குவதைத் தவிர வேறு வழியில்லை. “பேசாமல் அபிஷேக் கான் என்று பெயரை மாற்றிக்கொண்டு முன்வரிசையில் தாதா போல் இருந்துபார்” என்று சொல்லவேண்டும்போல இருக்கிறது. நமக்கேன் வம்பு?
நம்ம ஊர்களிலும் (ரொலிவூட், யாழ்வூட்….) எத்தனையோ மனதைப் பிழியும் விடயங்கள் இருக்கலாம். யாராவது சொன்னால் தானே…