EntertainmentIndia

நடிகை பறவை முனியம்மா மரணம்

தொலைக்காட்சியில் சமையல் கலை பற்றிய நிகழ்ச்சியைச் செய்ததன் மூலம் தமிழ் நாட்டிலும், தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பிரபலம் பெற்ற, நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிவந்த, நடிகை பறவை முனியம்மா சனிக்கிழமையன்று (மார்ச் 28) இயற்கை மரணமெய்தியுள்ளார். இறக்கும்போது அவருக்கு 83 வயது.

2003 இல் வெளிவந்த விக்ரம் நடித்த ‘தூள்‘ படத்தில் துடி துடிப்பான பாட்டியாக நடித்து ரசிகர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார் முனியம்மா. ‘முண்டக்கண்ணி’ என்ற பாத்திரத்தில் நடித்திருந்த அவர் விவேக்கின் நகைச்சுவைக்கு ஈடுகொடுத்து சிறப்பாக நடித்திருந்ததைத் தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட படங்களில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது மிடுக்கானதும், நறுக்கானதுமான வசனங்கள் இன்றும் ரசிகர்களால் மீட்கப்படும் வழக்காகி விட்டது.

‘தூள்’ படத்துக்குப் பிறகு, கோவில் (2004), தேவதையைக் கண்டேன் (2005), சண்டை (2008), தமிழ் படம் (2010) ஆகிய படங்களில் பறவை முனியம்மா நடித்திருந்தார். அவரது கடைசிப் படம், நிஹில் மோகன் மற்றும் இனியா சோடியாக நடித்த சதுர அடி 3500, 2017 இல் வெளியானது.

பிரபல தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் சமையற் கலையைக் கலையுணர்வோடு கற்பித்தவர் முனியம்மா. புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் வீடுகளில் அவரது சமையல் நிகழ்ச்சி மிகவும் விரும்பிப் பார்க்கபடுமொன்று. ருசியான உணவு பற்றி மட்டுமல்லாது அதன் ஆரோக்கியக் கூறுகளையும் மிக எளிமையாக விளக்கி வந்தவர் அவர். சமையல் நிகழ்ச்சிகளின்போது இடைக்கிடையே தனது நாட்டார் பாடல்களை இயல்பான குரல்வளத்துடன் பாடிக்கொள்வார்.

இதற்கு முன்னர் அவர் சுகவீனமுற்றிருந்தபோது, அப்போதய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, எம்.ஜீ.ஆர். தர்ம நிதியத்திலிருந்து, 6 இலட்சம் ரூபா பண உதவியும், மாதம் 6000 ரூபாய்கள் ஓய்வூதியமும் முனியம்மாவுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், சரத்குமார் ஆகியோரும் அவரது மருத்துவ தேவைகளுக்காகப் பண உதவிகளைச் செய்திருந்தனர்.

மதுரையில் பிறந்த பறவை முனியம்மா சில காலங்களாகச் சுகவீனமுற்றிருந்தார். அவருக்கு மிக்க உறுதுணையாகவிருந்த அவரது மருமகள் சுகவீனம் காரணமாக 2015 இல் மரணமாகியிருந்தார். தற்போது அவரது மகனும் இரண்டு பேரப்பிள்ளைகளும் இருக்கின்றார்கள்.