நடிகர் விவேக்கின் இறுதிப் பயணம்

சாலிக்கிராமத்திலிருந்து புறப்பட்ட நடிகர் விவேக்கின் இறுதிப் பயணம் இன்று (சனி) மாலை மேட்டுக்குப்பத்திலுள்ள கிரியை நிலையத்தில் முடிவடைந்தது. பல்லாயிரக் கணக்கான அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க, மாநில அரசு மரியாதைகளுடன் அவரை அனுப்பி வைத்தனர்.

சாலிக்கிராமத்திலுள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்ட அவரது உடலைத் தாங்கிய ஊர்தி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், பல திரையுலகப் பிரமுகர்கள் சூழ மேட்டுக்குப்பத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு இரண்டு வரிசைகளில் அணிவகுத்து நின்று பொலிஸார் 72 வேட்டுக்களைத் தீர்த்து அவருக்கு இறுதி மரியாதையைச் செலுத்தினர்.

நடிகர் விவேக்கின் சமூகப்பணிகள் காரணமாக அவருக்கு அரச மரியாதை கொடுக்கலாமென இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு மாநில அரசுக்கு அனுமதி கொடுத்திருந்தது.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் காலத்தின் தீவிர சீடனாகிய பத்மசிறீ விவேக், மாரடைப்பு காரணமாக சனியன்று சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருதயநாடியில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அவருக்கு அஞ்சியோபிளாஸ்ரி செய்யப்பட்டதாயினும் அது பலனளிக்காமையால் மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்தார். பிரதமர் நரேந்திரமோடி, உள்ளக அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. தலைவர் எம்.கே.ஸ்டாலின், நா.த.க. ஒருங்கிணைப்பாள்ர் சீமான், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், மோஹன்லால், வடிவேலு உட்படப் பலரும் தமது இரங்கல் செய்தியைத் தெரிவித்துள்ளார்கள்.

நடிகர்களிலேயே மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர், ஒளிவு மறைவில்லாமல் எப்போதுமே உண்மையைப் பேசுபவர் தனது நணப்ர் விவேக் என நடிகர் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.