Spread the love

மிகவும் மோசமான இரத்த அழுத்த மாறுதல் (severe blood pressure fluctuations) காரணமாக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை (வெள்ளி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 10 நாட்களாக அவர் ‘அண்ணாத்தே’ படப்பிடிப்பில் பணியாற்றி வந்தாரென்றும் அப் படப்பிடிப்புக் குழுவிலுள்ள சிலர் கொறோணாவைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தார்களெனவும் இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தது எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் ரஜினிகாந் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது அவருக்கு தொற்று இருக்கவில்லையென அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஐதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு கோவிட் தொற்று இல்லையெனவும் ஆனால் அவரது இரத்த அழுத்தம் நிலையற்றதாக இருக்கிறதென்றும் மேலும் பரிசோதனைகள் செய்யப்படவேண்டுமெனவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரத்த அழுத்த வேறுபாடுகள் மற்றும் உடற் களைப்பு என்பவற்றைத் தவிர அவருக்கு வேறு நோயறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

‘அண்ணாத்தே’ படப்பிடிப்பு 40% நிறைவேறிய நிலையில் அதை விரைவில் முடித்துவிட்டு கட்சியை ஸ்தாபிக்கும் பணிகளை ஆரம்பிக்கவேண்டுமென அவர் மிகவும் கடுமையாகப் பணியாற்றிவந்தார் எனக் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து விசேட விமானமூலம் நடிகர் ரஜினிகாந்த் அவரது மகளின் உதவியுடன் ஐதராபாத்துக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Print Friendly, PDF & Email
Related:  'வா தலைவா' | முடிவை மாற்றும்படி ரஜினியைக் கோரி ரசிகர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்