Spread the love

நடிகர் ரஜினிகாந்தின் முடிவினால் ஏமாற்றமடைந்த தமிழருவி மணியன் தான் அரசியலிலிருந்து நிரந்தரமாக ஒதுங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

உடல்நிலை காரணமாகத் தான் ஆரம்பிக்கவிருந்த கட்சியை இனிமேல் ஆரம்பிக்கப்போவதில்லை என நேற்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதன் எதிரொலியாக, காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவரும், ரஜினிகாந்த் உத்தேசிதிருந்த கட்சியின் மேற்பார்வையாளருமான தமிழருவி மணியன் இன்று, தனது இம் முடிவை எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.

“சிப்பிக்கும் மரகதத்திற்கும் பேதம் தெரியாத இந்த அரசியலில் சாதிப்பதற்கு எனக்கு எதுவுமில்லை. எனது நேர்மை, தூய்மை, ஒழுக்கம் ஆகியவற்றை அனுசரிக்காத இந்த அரசியல் சூழலிலிருந்து விலகி இருப்பதுவே புத்திசாலித்தனம். கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.விலிருந்து வில்கும்போது நான் “போய் வருகிறேன்” என்று கூறிச் சென்றார். ஆனால் நான் திரும்பி வரப் போவதில்லை” என மணியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கட்சியில் இணைவது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துடன் முதன் முதலாகச் சந்தித்த பின்னர், சமீபத்தில் தினமணி பத்திரிகைக்கு “ரஜினிகாந்த் – எனது கடைசி நம்பிக்கை” என்ற தலைப்புடன் மணியன் எழுதிய கட்டுரை ஒன்றில் ரஜினியின் அடக்கம், அன்பு ஆகியவற்றை யேசு, காந்தி, கிருஷ்ணன் ஆகியோரது பண்புகளுடன் ஒப்பிட்டு “ரஜினி அன்பையும், அடக்கத்தையும் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாதவர். அவரது வருகை தமிழ்நாட்டு அரசியலில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும். எனது அரசியல் வாழ்வில் அவர்தான் கடைசி நம்பிக்கை” எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது தனது அரசியல் துறவு பற்றி எழுதிய கடிதத்தில் ரஜினிகாந்த் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு வந்த தமிழருவி மணியன் “தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டைச் சிதைத்துவிட்டன” எனக் கூறுகிறார்.


Print Friendly, PDF & Email
Related:  நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் - நிலையற்ற இரத்த அழுத்தம் காரணம்?