நடிகர் பிரகாஷ் ராஜை மாட்டிவைத்த சந்திராயன்
பிரகாஷ் ராஜ் மீது இந்து அமைப்புக்கள் வழக்கு!

நாளை சந்திரனில் இறங்க / மோத இந்திய விண்கலம் தயாராகிவரும் நிலையில் பூமியில் சில இந்து அமைப்புக்கள் நடிகர் பிரகாஜ் ராஜுடன் மோத ஆரம்பித்திருக்கின்றன. எல்லாம் நம்மூர் ‘தேத்தண்ணிக் கடை’ ஜோக்கினால் தான்.
சந்திராயன்-3 நிலவுப் பயணம் தொடர்பாக ஞாயிறன்று பிரகாஷ் ராஜ் தனது ருவிட்டரில் ஒரு நையாண்டிப் பதிவைப் போட்டிருந்தார். மலையாளி (இதில் நீங்கள் விரும்பிய எவரையும் போட்டுக்கொள்ளலாம்) ஒருவர் தேனீரை இழுத்து ஆற்றும் ஒரு கார்ட்டூன் படத்தைப் போட்டு “சந்திராயன் அனுப்பிய முதல் படம்” என அதில் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு விடயத்தை அவர் கேலி செய்ததாகக் கூறி சில இந்து அமைப்புக்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளன. அது மட்டுமல்லாது சமூக வலைத் தளங்களில் பிரகாஜ் ராஜுக்கு பலத்த எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ் “இது ஒரு ஆம்ஸ்ட்றோங் காலத்துப் பகிடி. ஒரு கேரளா சாய்வாலாவைக் கொண்டாடுவதாகப் புனையப்பட்டது. இதை எதிர்ப்பவர்கள் யாராவது சாய்வாலாவைப் பார்த்ததுண்டா?. இப்பகிடியைப் புரிந்துகொள்ளாதவர்கள் நீங்களே உங்களைப் பகிடிக்குள்ளாக்குகிறீர்கள். முதிர்ச்சியடையுங்கள்!” எனத் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்று (23) மாலை 6:04 இற்கு சந்திராயன்-3 விண்கலம் சந்திரனின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கவிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருக்கிறது. இது வெற்றிகரமாக நிகழும் பட்சத்தில் நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா பெருமை பெறும். மிகவும் சீரற்ற தெந்துருவத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்குவதில் அதிக சிரமங்களுள்ளன. ஆனாலும் இத்துருவப் பகுதியில் பெருமளவு கனிமவளம் இருப்பதாகவும் இவற்றைத்தை அள்ளிக்கொண்டுவர உலக வல்லரசுகளுடன் இந்தியாவும் போட்டியில் இறங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இப்போட்டிகளின் மத்தியில் அங்கு ஏற்கெனவே மலையாளி ஒருவரின் தேனீர்க்கடை இருப்பதாக பிரகாஷ் ராஜின் கார்ட்டூன் படம் நையாண்டி செய்கிறது.