நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து

சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவிப்பு

18 வருட மணவாழ்வுக்குப் பிறகு நடிகர் தனுஷ் மற்றும் அவர் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் தம்வழிகளில் பிரிந்துசெல்வதாகநேற்று (ஜன் 17) சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்துள்ளனர். இவர்களுக்கு யாத்ரா (15), லிங்கா (11) ஆகிய இரு மகன்கள் உண்டு.

“18 வருட மணவாழ்க்கையின்போது நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும், பரஸ்பர நலம் விரும்பிகளாகவும் இருந்திருக்கிறோம். இப் பயணம் வளர்ச்சியையும், புரிதலையும், அனுசரிப்பையும், மாற்றத்தையும் கொண்டதாக இருந்தது” என அவர்களின் ருவிட்டர் பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“எங்கள் பாதைகள் பிரிகின்ற இடத்தில் இன்று நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் பிரிந்து செல்வதோடு எங்களை நாங்கள் புரிந்துகொள்ள கால அவகாசத்தைத் தேடுபவர்களாக இருக்கிறோம். எங்கள் தீமானத்தைப் புரிந்துகொண்டு எங்கள் பிரத்தியேகத்தை மதித்து உதவுமாறு நாங்கள் எங்கள் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்” என தனுஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “தலைப்பு தேவையில்லை. உங்கள் புரிதலும் அன்புமே எமக்குத் தேவை” என ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.

2004 இல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் இருவரும் பிரபல திரைக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். ஐஸ்வர்யா, நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளாவார். தனுஷ், தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜாவின் மகனாவார்.