நடிகர் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீட் தேர்வு குறித்த கருத்து காரணம்!

“நீட் தேர்வுக்கான பரீட்சைகள், கல்லூரி அனுமதிக்காகத் தவிக்கும் மாணவர்கள் மீது சுமத்தப்படுவது அநீதி, அவை ‘மனு நீதிப் பரீட்சைகள்’ ” என நடிகர் சூர்யா நேற்று கடுமையாகச் சாடியிருந்தார். அவரது கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிக்கின்றன எனவும், அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி ஏபி சாஹியைக் கேட்டுள்ளார்.
நேற்று (ஞாயிறு) நாடெங்கிலும் நீட் தேர்வுக்கான அனுமதிப் பரீட்சைகள் நடைபெற்றன. இதற்கு முதல நாள் தமிழ்நாட்டில் மூன்று மாணவர்கள் இப் பரீட்சை தொடர்பாகத் தற்கிஒலை செய்திருந்தனர். தமிழ்நாடெங்கும் இப் பரீட்சை தொடர்பாக எதிர்ப்புகள் வலுத்துவரும் இவ்வேளையில், நடிகர் சூர்யாவும் இப் பரீட்சையின் தேவை பற்றியும், நீதிமன்றங்களின் நடவடிக்கை பற்றியும் நேற்றுக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இப் பரீட்சையை நிறுத்தும்படி சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
“நீதிபதிகள் தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொண்டு, மாணவர்களின் உயிர்களைப் பற்றிக் கவலையேதுமில்லாமல், வீடியோ இணைப்புகளின் மூலம் “மாணவர்களே நீங்கள் நேரடியாகச் சென்று மண்டபங்களில் பரீட்சைகளை எழுதுங்கள் என்று கூறுகிறார்கள்” எனச் சூரியா நீதிபதிகளைச் சாடியிருந்தார். அத்தோடு, இப் பரீட்சை ஒரு “மனுநீதிப் பரீட்சை” எனவும் கூறியிருந்தார். அவரது கருத்துக்கள் தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் காணொளிகள் வாயிலாகப் பரவலாக மக்களிடம் சென்றிருந்தன.
” நடிகர் சூர்யாவின் இக் கருத்துக்கள், எனது பார்வையில், இச் சிறப்பான தேசத்தின் நீதித் துறையையும், கெளரவ நீதிமான்களின் நேர்மையையும், அர்ப்பணிப்பையும் அவமதிப்பதாகிறது. இது நீதித்துறையில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைத் தகர்ப்பதற்கு வழிவகுக்கும். எனவே நடிகர் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆரம்பிக்கப்பட்டு, இந்திய நீதித்துறையின் மேலாண்மை பாதுகாக்கப்படவேண்டும்” என நீதிபதி எச்.எம்.சுப்ரமணியம் முதன்மை நீதிபதிக்கு எழுதியிருக்கிறார்.
நீட் தேர்வுக்கான பரீட்சை ஞாயிறன்று நடைபெற்றது. நாடு பூராவும் 16 இலட்சம் பேர் இப் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்து அவர்களில் 85-90% மானோர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இதில் சித்தி பெறுபவர்கள், மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் தரப்படும் 68,000 இடங்களுக்குத் தெரிவாகுவார்கள்.
