நடிகர் சிறீகாந்த் மரணம்
ஜெயலலிதாவின் முதல் கதாநாயகன்
தமிழ்த் திரை நட்சத்திரங்களில் முக்கியமான ஒருவரும், ஜெயலலிதாவின் முதல் படமான ‘வெண்ணிற ஆடை’ யில் அவருக்கு இணையாக நடைத்தவருமான நடிகர் சிறீகாந்த் மரணமானார். இறக்கும்போது அவருக்கு வயது 82.

பல தசாப்தங்கள் திரையுலகில் கதாநாயகன், வில்லன், குணசித்திர பாத்திரங்களில் நடித்திருந்த சிறீகாந்த், சி.வி.சிறீதரின் வெண்ணிற ஆடை (1965) மூலம் அறிமுகமானார். திரையுலகத்துக்கு வருவதற்கு முன்னர் அவர் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிக்கொண்டு பல மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார். 1960 களில் இயக்குனர் பாலச்சந்தரது நாடகக் குழுவில் இணைந்து நடித்திருந்தார்.
பாமா விஜயம், நூற்றுக்கு நூறு, எதிர் நீச்சல், பிராப்தம், காசேதான் கடவுளடா உடபடப் பல படங்களில் சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயஷங்கர் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார். பின்னர் ரஜினிகாந்தின் பைரவி போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
விருது
1974 இல், சிறந்த தமிழ்ப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திக்கற்ற பார்வதி என்ற படத்தில் நடிகை லக்ஷ்மியுடன் ஜோடியாக சிறப்பாக நடித்தமைக்காக தேசிய விருது வழங்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டார்.
இருப்பினும், தங்கப் பதக்கம் படமே இவருக்குப் புகழைத் தேடித்தந்த படம். 1975-1985 காலப் பகுதியில் அநேகமாக எல்லாப் படங்களிலுமே சிறிகாந்த் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்.