நகைப்புக்குள்ளாகும் சஜித் பிரேமதாசவின் ஆங்கிலப் புலமை!

நகைப்புக்குள்ளாகும் சஜித் பிரேமதாசவின் ஆங்கிலப் புலமை!

Spread the love

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆங்கிலப் புலமை பற்றி சமூக வலைத் தளங்கள் பரிகசித்து வருகின்றன. அதற்கு அவர் அளித்து வரும் பதில் மிகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது.

சஜித் பிரேமதாச கடுமையான ஆங்கிலச் சொற்களைத் தனது சமூகவலைத் தளங்களில் பிரயோகித்து வருவதாகவும், அது எளிய மக்களுக்கு மட்டுமல்ல இங்கிலாந்தின் மகாராணியாருக்கோ அல்லது அமெரிக்க ஜனாதிபதிக்கோ புரியுமோ தெரியாது எனவும், அவரைக் கேலி செய்து கடந்த வாரம் முதல் வலைத் தளங்களில் செய்திகள் வந்த வண்ணமுள்ளன.

இருப்பினும், இப்படியான ஒரு எதிர்வினையைப் பிரேமதாச எதிர்பார்த்திருந்ததாகவும், தனது ஆங்கில மொழிப்பிரயோகம் சாதாரண மக்களின் அறிவித்தளத்துக்கு அப்பாற்பட்டது எனத் தனக்குத் தெரியுமெனவும், அதன் பின்னால் ஒரு காரணமிருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்.

“உண்மையில், ஒருவர் அகராதியைப் பாவிக்க ஆரம்பித்தாரானால், அவர் பல விடயங்களை அதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். எனது செய்திகளைப் பார்த்துச் சிலர் கேலி செய்யலாம் ஆனால் அதன் மூலம் ஒருவர் இரண்டொரு சொற்களைக் கற்றுக்கொண்டால் அதையிட்டு நான் பெருமை கொள்வேன்.

“இப்படித்தான் நான் எனது ஆங்கில அறிவைப் பெருக்கிக் கொண்டேன். எனது தந்தையாரின் ஆரம்பகாலப் பாராளுமன்ற நாட்களில், அவர் ஆங்கிலம் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அதனால் அவர் ஒரு நாளைக்குப் பத்துப் புதிய ஆங்கிலச் சொற்களைக் கற்றுக்கொள்ள முடிவெடுத்தார்.

“யோசித்துப் பாருங்கள். ஊரடங்கின் போது மக்கள் ஒன்றரை மாதத்துக்கு மேலாக வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்குப் பத்து சொற்களைக் கற்றிருந்தால், அதன் வெற்றி அமோகமாக இருந்திருக்கும்.

“சமூக வலைத் தளங்களில் என்னைப் பரிகசிப்பவர்கள் தொடர்ந்தும் பரிகசிக்கவே செய்வார்கள். நான் க.பொ.த சா/தரமே சித்திபெறவில்லை, எனக்கு ஆங்கிலம் தெரியாது என்றெல்லாம் முன்னர் பரிகசிக்கப்பட்டேன். இப்போது அவர்களுக்குப் புரியாத ஆங்கிலத்தைப் பேசுகிறேன் என்று பரிகசிக்கிறார்கள். அப்ப்டித்தான் இங்கு காரியங்கள் நடைபெற்று வருகின்றன. இது இல்லாவிட்டால் அவர்கள் இன்னுமொன்றைப் பிடித்துக்கொண்டு வருவார்கள். இப்படித்தான் இலங்கையில் ஊடகங்களும், அரசியலும் செயற்படுகின்றன” ” என்கிறார் பிரேமதாச.

Print Friendly, PDF & Email