பிரியதர்சன்

நகர மறுக்கும் சமூகம் | பிரியதர்சன் பக்கங்கள்


பிரியதர்சன் பக்கங்கள் -11

இலங்கையில்  தேர்தல் திருவிழா  முடிந்து போனது . இனியாவது  அரசியல்  பற்றி ஏதாவது  எழுதலாமே என்று நண்பர் ஒருவர் ஆதங்கப்பட்டார். குளியல் அறைக்குள் பாடுகிறவரை சந்தியில்  பாடச்சொன்னால் என்ன செய்வது?

நான் அரசியல் பேசுவதும் எழுதுவதும் மிக சின்ன வட்டம். அது என் பள்ளி நண்பர்களும் பிறகு பல்கலைக்கழக WhatsApp குழுமமும் என்று மிக  நெருங்கிய  எல்லையை  தாண்டியதில்லை.

அங்கிருந்து  யாருக்கும் கல் எறியலாம். யாரையும் தூக்கி கொண்டாடலாம். நெஞ்சில் நினைப்பதை வடிகட்டாமல் எழுத்தில் பதியலாம்.  சின்ன சிக்கலும் வந்து சேராது.

பொதுவெளியிலும் சமூகவலைதளத்திலும்  அது சாத்தியமில்லை. பூதக்கண்ணாடி போட்டு பார்கிறவர்கள் உலாவுவார்கள்.  தங்கள் தலைவர்களுக்கும்  கட்சிக்கும்   மெல்லிய கீறல் விழுந்தாலும் கொடுக்கு கட்டி கொண்டு வந்து நிப்பார்கள்.  

வேட்டியை மடிச்சுகட்டி அவர்களோடு மல்லுகட்டுவது  சரிப்பட்டு வராது. யாருக்கும் நோகாமல் எல்லா சுவர்களுக்கும் வெள்ளை அடிக்கிற மந்திரமும் தெரியாது. அப்படி இருக்க எப்படித்தான் அரசியல் எழுதுவது? வழமையை போலவே ஞாபகங்களை பதிவதோடு நிறுத்திக்கொள்வோம் என்கிறது மனது.  

அப்போது பெரியவளுக்கு சின்ன வயது. நாங்கள் ஸ்காபரோவில் குடியிருந்தோம். அவளுக்கு  சாப்பாடு தீத்துகிறபோது எப்போதும்  வீட்டில் கலவரம் வெடிக்கும்.

சாப்பிட மாட்டேன் என்று  அடம் பிடிப்பாள்.  ஒரு கரண்டியோடு சாப்பாட்டை வாய்க்குள் திணிக்காமல் விடமாட்டேன் என்று மனைவி ஒற்றை காலில்  நிப்பாள்.
அவள் அழுவதற்கு  வாயை திறக்கிற இடைவெளியில்  சாப்பாடும் கரண்டியும் வாய்க்கு போகும். சாப்பாட்டை துப்பினால் மனைவி  கத்துவாள். சாப்பாடு தொண்டைக்குள் போனால் மகள் கத்துவாள்.



இந்த கலவரத்தில் எதையாவாது வாசிப்பதற்கு எனக்கு குறைந்த பட்சம் அரை ஞானி பக்குமாவது வேண்டும். இந்த தொல்லைக்கு முடிவு கட்டுவதக்கு வழி தேடியபோது அந்த வைத்தியரிடம் போகும்படி  பக்கத்து வீட்டுக்காரர்  சொன்னார்.

அவரிடம் போனோம். குத்துமதிப்பாக அறுபது வயதுக்கு மேல் இருக்கும் . இத்தாலிய வைத்தியர்.   சொல்லு கேக்காத  பஞ்சு போன்ற வெள்ளை தலை மயிர்கள். கண்ணாடி போட்டிருந்தார். தலையை கொஞ்சம் சரித்து கண்ணாடிக்கு மேலால் பார்த்தார்.  நாங்கள் சொல்வதை  மிக பொறுமையாக கேட்டார். பிறகு வாயில் தொடங்கி எல்லாவற்றையும் பரிசோதித்து பார்த்தார்.

அவளுக்கு வருத்தம் ஒன்றும் கிடையாது. பிள்ளைகளுக்கு சாப்பாட்டைத் திணிக்கிற உங்கள் பழக்கத்தை நிறுத்துங்கள்.  பசிக்கிறபோது பிள்ளைகள் சாப்பிடுவார்கள்.
விரும்பினால் பிள்ளையைக் கவர்கிறமாதிரி உணவின் வடிவத்தையும் நிறத்தையும் மாற்றி கொடுக்கும்படி சொல்லியனுப்பினார்.

அங்கிருந்து வருகிறபோது என்னிடம் சொன்னார் “ஐப்பது வருடங்களுக்கு முன்னர் இத்தாலிய  அம்மாக்களும் இதைதான் செய்தார்கள். இப்போது அவர்கள் அப்படி செய்வதில்லை” என்றார்.

மறைமுகமாக நீங்கள் இன்னும் ஐம்பது வருடங்கள் பின்னுக்கு நிப்பதாக சொல்வதாகவே எனக்கு  பட்டது. கொஞ்சம் ஆத்திரம் வந்தாலும் அடக்கிகொண்டே வெளியே வந்தேன்.

சில வருடங்களுக்கு முன்னர்  நடந்த இன்னொரு சம்பவமும் ஞாபகத்தில் இருக்கிறது.  

கனடாவில் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்துகொண்டிருந்த காலம். Bob Rae எதிர்கட்சி தலைவராக இருந்தார். பிரச்சாரத்துக்காக Toronto வந்திருந்தார்.

காரை ஒர் இடத்தில் நிறுத்திவிட்டு நடந்து பிரச்சார கூட்டத்துக்கு போனபிறகு திருப்பிவந்தார். அவருடைய காரின் நான்கு டயர்களுக்கும் காத்து போயிருந்தது. யாருடைய கைவரிசை என்று தெரியாது.  கனடாவில் அப்படி நடப்பது அரிது.

பத்திரிகைகளில் கொட்டை எழுத்துகளில் செய்தியாக வந்தது. எதிர்கட்சி வேட்பாளர்கள் இதை செய்திருக்க கூடுமா?  என பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்.

Bob  Rae சொன்னார்

“அப்படி இருக்காது. கனடிய தேர்தல்களில் அப்படி மோசமான  கட்சிகளும் இல்லை  வேட்பாளர்களும்  இல்லை”.



இந்திய இலங்கை செய்திகளை பார்த்து பழக்கப்பட்ட எனக்கு இதுவொரு ஆச்சரியம்.

இலங்கையை  விட்டு வந்து சில பத்து வருடங்கள் முடிந்திருக்கிறது.   ஒரு கோப்பியும் இலங்கை செய்தியை கணனியில் பார்த்த பிறகும்தான் இப்போதும்  காலைகள் விடிகிறது. புலம்பெயர் வாழ்வில் முழுவதுமாய்  ஒட்டவும் முடியாமல்  வெட்டவும் முடியாதவர்க்கு இதுவொன்றும் புதினமாகாது.

இலங்கை தேர்தல் முடிவுகளை வருகிறபோதும் செய்திகளிலும் சமூகவலைத்தளங்களிலும் கண்கள் மாறிமாறி ஓடிக்கொண்டிருந்தது. யாழ்பாணத்தில் அவர் முந்தினானர்  இவர் பிந்தினார் என்கிற போலி செய்திகள் முகநூல் எங்கும் பரவிகிடந்தது.  

அமளிதுமளிகளோடு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.  

தன்னோடு போட்டியிட்ட சக வேட்பாளர் வாக்கு எண்ணுவதில் மோசடி செய்து வெற்றி பெற்றுவிட்டதாக சொல்கிற பல தலைவர்களை காணமுடிந்தது. இதற்கு மேல் எழுதினால் அரசியல் பேசுவது போலாகிலிடும். நிறுத்திவிடுகிறேன்.  சமூக வலைதளத்தில் சஞ்சரித்தவர்கள்  ஒரு திரில் படத்தை பார்த்திருப்பார்கள்.

எங்களோடு பல்கலைகழகத்தில் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். மிக சிலரே இன்னும் இலங்கையில் இருக்கிறார்கள். அவர்களில் நாலு ஐந்து பேர்  அரசாங்க திணைக்களங்களில் வேலை செய்கிறார்கள். அந்தந்த திணைக்களங்கலில்  உயரங்களில் இருக்கிறார்கள். எந்தவொரு அரசியல் கட்சிகளோடும் இயங்காதவர்கள். தேர்தலில் வாக்கு எண்ணும்  பணிகளில் ஈடுபடுபவர்கள். எல்லோரும் ஒன்றையே சொன்னார்கள்.

“இன்றைக்கு இருக்கிற தேர்தல் நடைமுறைகளில் விருப்பு வாக்குகளை மாற்றுவது மிக மிகக் கடினம் “

எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்கிறபோது அந்த இத்தாலி வைத்தியர் சொன்னதை போல நாங்கள் ஐம்பது வருடங்கள் பின்னுக்கு நிக்கிற ஒரு சமூகமோ என்று எண்ணத்தோன்றுகிறது.