நகருலா | ஹா…ஹா.. இலவச நடைபாதை, திங்கள் – ஞாயிறு வரை!

ரொறோண்டோவின் வீதிக் கலம்பகம்

மாயமான்

உலகிலேயே உன்னதமான கலைஞர்களும் சிந்தனாவாதிகளும் ரொறோண்டோவில்தான் வாழ்கிறார்கள் போல.

அல்லது ரொறோண்டோ தெருக்கள் சாதாரண மனிதர்களையும் கற்பனாவதிகளாக மாற்றிவிடுகிறதா? (நமது முகநூற் பதிவுகளை வைத்து நான் இந்த முடிவுக்கு வந்தேன் என நினைக்க வேண்டாம்).

அல்லது நமது கொறோணேஸ்வரியின் அற்புதத்தால் விளைந்த நடமாட்ட முடக்கம் சிந்தனை ஓட்டமாகத் தெருக்களில் ஓடுகிறதா?

என்னவோ, ரொறோண்டோ தெருக்களில் அதிசயமான ‘வீதிப் பதாகைகள்’ (street signs) திடீர் திடீரென்று தோன்றி மறைகின்றன. தெரு ஓவியர்கள், மதில் ஓவியர்களது படைப்புகள் போல இவற்றையும் கலைத்துவத்தின் இன்னுமொரு பரிமாணமாகவே பார்க்க வேண்டும்.

சமீபத்தில் நடைபாதையில் கவனித்த – நகரசபையால் இன்னும் கவனிக்கப்படாத- ஒன்று, இந்த வீதிப் பதாகை.

நீங்கள் நினைப்பதுபோல், கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிகொண்டு “ஏலுமானால் வாங்கிப் பார்” என்று சவால் விடும் நமது ‘றியல் எஸ்டேட்’ விற்பனாவதிகளது பதாகைகளை நான் சொல்லவில்லை. இது பாதசாரிகளுக்கு இடையூறு இல்லாது (அவர்களுக்கு உதவி செய்வதற்காக) ‘நிரந்தரமாக’ வீதிக் கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் சிறிய பதாகைகள் (signs).

இந்த பதாகை Roncesvalles Avenue, south of Geoffrey Street இல் ஒரு விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டிருக்கிறது. சாதாரண வீதியோர வாகனத் தரிப்பாளருக்கென அமைக்கப்படும் – இந்த இடத்தில் வாகனம் தரிக்க முடியுமா, வாரத்தின் எந்த நாட்களில், எந்த நேரங்களில் இலவசம் என்பது போன்ற விடயங்களைத் தாங்கியிருக்கும் அசல் பதாகைகளை- ஒத்தவை. இந்த போலி பதாகைகள் பாதசாரிகளை மனதில் வைத்து செய்யப்பட்டவை. திங்கள் முதல் ஞாயிறு வரை இப் பாதையில் இலவசமாக நடக்கலாம் என இந்த பதாகை சொல்கிறது.

இதை அமைத்த கலைஞரின் கற்பனையைப் புகழாமலும், வாழ்த்தாமலும் இருக்க முடியாது. நம்ம ஊர் ‘சர்பத் கடை விளம்பரங்கள்’ போலல்லாமல், அசலான பதாகைகளில் காணப்படும் எழுத்துக்களின் வடிவம், அளவு, நிறம், தோற்றம் என அச்சொட்டாகப் பிரதியெடுத்து அழகாகச் செய்திருக்கிறார்(கள்).

fake street sign toronto
றொண்செஸ்வேல்ஸ் வீதிக் கம்பத்தில் காணப்படும் போலிப் பதாகை

இப் பதாகையில் காணப்படும் W எழுத்திருக்கும் வட்டத்துள் இதைச் செய்தது “Time and Desire” என்று ஒரு பதிவு உள்ளது. வாட்டர்லூ, ஒன்ராறியோவைச் சேர்ந்த கலைஞர்களான டெனிஸ் செயின் மேறி மற்றும் ரிமோதி வாக்கெர் ஆகியோரது நிறுவனம் Time and Desire.

fake street signs toronto
ரொறோண்டோ பார்க்டேலில் அமைந்துள்ள பதாகை

ஆச்சரியம் என்னவென்றால், இப் பதாகை இவ்விடத்தில் பல வருடங்களாக இருக்கிறது. நகரசபையினருக்கு ஊர்ச் சோலி அதிகமாகையால் இதைக் கவனிக்கவில்லையோ அல்லது உள்ளூர்க் கவுன்சிலரது ஆதரவுடன் இது நிறுவப்பட்டதாகவோ இருக்கலாம். ரொறோண்டோ மாநகரசபையின் கவுன்சிலர்களில் பெரும்பாலோர் இடதுசாரிகளும், செயற்பாட்டாளர்களும். இவர்களுக்கும் கலைஞர்களுக்கும் நெருங்கிய உறவுண்டு.

இப் பதாகையை உருவாக்கிய கலைஞர்கள் வேறு பல ‘வீதிப் பதாகைகளையும்’ செய்திருக்கிறார்கள். The Pedestrian Series, என்ற பெயரில்் 2012 முதல் 2014 வரை அவர்கள் உருவாக்கிய பல பதாகைகள் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல நகரங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று ‘Black lIves Matter’.