த.தே.கூ. சீரமைப்பு | புளோட், ரெலோ தலைவர்களுக்கு முக்கிய பதவிகள்!


நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல்களின்போது கூட்டமைப்புக்குள் எழுந்த இழுபறிகளைச் சமாளிக்கும் முகமாக அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான புளோட் சித்தார்த்தனுக்கும், ரெலோ செல்வம் அடைக்கலநாதனுக்கும், அமைப்பிற்குள் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இதன் பிரகாரம், ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட பா.உ.வுமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் அப்பதவியை வகித்துவந்த பா.உ. எம்.ஏ.சுமந்திரன் அப்பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

புளோட் தலைவர் தர்மலிங்கம் சித்தர்த்தன் கூட்டமைப்பின் பிரதம ஒழுங்கமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பா.உ. சிவஞானம் சிறீதரன் தற்போது இப்பதவியை வகித்து வருகிறார்.

கடந்த வெள்ளியன்று, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிபிரமாண நிகழ்வுகளைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் இம் முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அழைக்கப்பட்டிருந்த போதிலும், பா.உ. சுமந்திரன் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிகிறது.

தேசியப்பட்டியலுக்கான இடம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தவராசா கலையரசனுக்கு வழங்கப்படுவதைப் புளோட்டும், ரெலோவும் கடுமையாக எதிர்த்தபோதிலும், தலைவர் சம்பந்தனும் பா.உ. சுமந்திரனும், மத்திய குழுவை ஆலோசிக்காது, தன்னிச்சையாக அத் தீர்மானத்தை எட்த்திருந்தனர் எனவும், பங்காளிக் கட்சிகள் குற்றச்சாட்டை வைத்திருந்தன.

2018 உள்ளூராட்சித் தேர்தல்களின்போதும், மத்திய குழுவை ஆலோசிக்காது இலங்கைத் தமிழராசுக்கட்சியின் தலைவர்கள் பல முடிவுகளை எடுத்திருந்ததாகவும் அதைப் புளோட், ரெலோ ஆகிய கட்சிகள் வன்மையாக எதிர்த்திருந்தன எனவும் அப்போது கூறப்பட்டது. வவுனியாவிலும், மன்னாரிலும் பல உள்ளூராட்சி சபை நியமனங்களில் தமிழரசுக்கட்சி நடந்துகொண்ட முறையையிட்டு ஏனைய இரண்டு கட்சிகளும் கூட்டமைப்பிலிருந்து விலகிப்போக முடிவுசெய்திருந்தன. சமூகத் தலைவர்களின் தலையீட்டினால் அது தவிர்க்கப்பட்டிருந்தது. கலையரசனின் நியமனத்துடன் இப் பிளவு மேலும் விரிவடைந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.



இதே வேளை, கடந்த சில நாட்களில், த.தே.கூட்டமைப்பைச் சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர், கூட்டமைப்பினர் ஒற்றுமையைப் பேணவேண்டுமென்று கேட்டுக்கொண்டதாகவும் செய்தியொன்று வெளிவந்திருந்தது. அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை மாற்றியமைத்து 20வதை உருவாக்கும்போது, அல்லது முற்றாகப் புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கும்போது, இலங்கை-இந்திய உடன்படிக்கையின் மூலம் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தம் முற்றாக நீக்கப்படுமானால், இந்தியாவின் மார்றுத் திட்டங்களைச் செயற்படுத்த ஒற்றுமையான தமிழர் பிரசன்னம் தேவை என்பதை இந்தியா உணர்ந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.