Sri Lanka

த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவாகச் செயற்படுகிறார் எனக் குற்றச்சாட்டு – வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி பறிபோகலாம்?


ஆகஸ்ட் 30, 2020: வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவியைத் துஷ்பிரயோகம் செய்கின்றார் எனப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

வட மாகாணத்தில் ஆளுனர் சார்ள்ஸ் செய்த பணிகளை முன்னிட்டு தற்போதய அரசு அவருக்கு இப் பதவியை வழங்கியிருந்தது. இருப்பினும், பதவியேற்றதிலிருந்து இப் பிரதேசத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் காத்திரமாக எதையும் செய்யவில்லை எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆளுனர் சார்ள்ஸ், பல விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார் என ஆளும் கட்சிக்குச் சார்பான அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகின்றமையும் இதற்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றது.

தனக்குத் தெரிந்தவர்களுக்குக் காணிகளைக் குத்தகைக்குக் கொடுத்தார்; முறையான விண்ணப்ப படிமுறைகள் ஏதுமின்றி எட்டு பெற்றோல் நிலையங்களைத் தனக்கு நெருங்கிய வியாபாரி நண்பர்களுக்கு வழங்கினார்; தனது மகளை ரூ 80,000 சம்பளத்தில் ஊடக செயலாளராக நியமித்தார் ஆனால் ஒரு நாளாவது அவர் வேலைக்குச் சமூகமளிக்கவில்லை; சார்ள்ஸ் வேலைக்கு வருவது, போவது பற்றிய பதிவுகள் எதுவும் பேணப்படுவதில்லை எனப் பல குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்படுகின்றன.

இதே வேளை, கொழும்பு, பத்தரமுல்லவில் இருந்த அவரது அலுவலகம், இல். 05, மவுண்ட் அவெனியூ, மவுண்ட் லவினியாவிற்கு மாற்றம் செய்யப்பட்டதென்றும், அது அவரது உறவினர் ஒருவருக்குச் சொந்தமான இடமென்றும், செப்டெம்பர் 1 இல் ஆரம்பிக்கும் அதன் குத்தகை 5 வருடத்துக்கு எழுதப்பட்டுள்ளதென்றும் கூறப்படுகின்றது.



இக்குற்றச்சாட்டுகளெல்லாம் ஆளும் கட்சித் தரப்பினாலேயே முன்வைக்கப்படுகின்றன. வடமாகாண மக்கள் அல்லது குடிமைச் சமூகங்கள், பொது அமைப்புகள் போன்றவற்றிலிருந்து குற்றச்சாடுகள் எதுவும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சார்ள்ஸ் தமிழராக இருப்பதும், வடமாகாணம் பொதுவாக அரசு சார்பாக இருப்பதில்லை என்ற காரணத்திற்காகவும் தென்னிலங்கை தீவிரவாத சக்திகளும், அதே வேளை வட இலங்கையில் தமது ஊழல் அரசியலை முன்னெடுக்க விரும்பும் அரசியல்வாதிகளுக்கு ஆளுனர் துணைபோவதில்லை என்ற காரணங்களுக்காகவும் இக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கலாம்.