ObituariesSri Lanka

த.தே.கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் மறைவு

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான திரு. இரா. சம்பந்தன் அவர்கள் தனது 91 ஆவது வயதில், ஜூன் 30, 2024 அன்று கொழும்பில் காலமானார். கடந்த சில நாட்களாக அவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்ததாகவும் அது பலனளிக்காமையால் நேற்று அவர் மரணமாகிவிட்டாரெனவும் அறியப்படுகிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராகிய திரு. சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக 1977 முதல் தொடர்ச்சியாகப் பணியாற்றி வந்திருக்கிறார்.


சட்டத்துறைக் கல்வியைப் பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றிய அவர் தமிழரசுக்கட்சி மூலம் அரசியலில் பிரவேசித்தார். 2001 முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகப் பணியாற்றி வந்திருக்கிறார். செப்டம்பர் 2015 முதல் டிசம்பர் 2018 வரை நடைபெற்ற நல்லாட்சி அரசாங்கத்தின் போது இலங்கைப் பாராளுமன்றத்தின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றும் சந்தர்ப்பமும் அவருக்குக் கிடைத்திருந்தது.

பெப்ரவரி 05, 1933 இல் திருகோணமலையில் பிறந்த அவர் திருகோணமலை முன்னாள் பா.உ. க்களாகிய என்.ஆர். இராஜவரோதயம் மற்றும் எஸ்.சிவபாலன் ஆகியோரின் உறவினராவார். யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி, குருநாகலை சென். ஆன்ஸ் கல்லூரி, திருகோணமலை செந்.ஜோசப்ஸ் கல்லூரி, மொறட்டுவ சென். செபஸ்ரியன்ஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராகிய அவர் பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாகக் கடமையாற்றத் தொடங்கினார்.

பி.கே. ருத்ரா அவர்களின் புதல்வியான லீலாதேவியை மணம் புரிந்த அவருக்கு சஞ்சீவன், செந்தூரன் என இரண்டு மகன்மாரும் கிரிஷாந்தினி என்னும் பெயருடைய ஒரு மகளும் இருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களாக முதுமை, சுகவீனமுற்றிருந்த அவருக்கு இலங்கை பாராளுமன்றம் மூன்றுமாத விடுமுறை அளித்திருந்தது.

இரா.சம்பந்தன் அவர்களுடைய மரணம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா, பா.உ. எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *