தோல்வி நிலையென நினைத்தால்…

. . ஒரு அலசலின் அலசல்
கனடா மூர்த்தி
கனடா மூர்த்தி
தமிழர் தகவல் திருச்செல்வம்

வார இறுதியில் கனடாவின் தமிழ்  ஊடகவியலாளர்களை அழைத்து ஒரு நிகழ்வு நடந்தது.  (தமிழ் மக்கள் குடிமையியல் நடவடிக்கைக்கான கனடிய மையத்தின் Tamil Canadian Centre for Civic Action‎) “நிமிர்வு”) அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த  – TheTamilJournal செய்தி இணையத்தளத்தின் நிர்வாகி – நண்பன் சுகு போன் செய்தான்.   “தேசியம் பத்திரிகையில்  நீ எழுதின ஒரு அரசியல் ஆய்வுக் கட்டுரையைப்பற்றி பாராட்டி தமிழர் தகவல் திருச்செல்வம் மேடையில் சொல்லிக் கொண்டிருந்தார்” என்றான்.  (கனடாவின் மத்திய அரசிற்கான 2019 தேர்தல்  முடிந்த கையோடு,  போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் குறித்து அலசப்பட்ட கட்டுரை அது: “தோல்வியே நிலையென நினைத்தால்… ” )

தமிழ் ஜேர்ணல் சுகு பாலசுப்ரமணியம்
தேசியம் லங்கதாஸ் பத்மநாதன்

மூத்த பத்திரிகையாளர் தமிழர் தகவல் திருச் செல்வம் அவர்கள் நான் மிகவும் மதிக்கும் Journalist. கொண்ட கொள்கையில் பிடிவாதம் மிக்கவர். இலங்கையில் ‘முரசொலி’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். பத்திரிகையாளராக இருந்த ஓரே  ஒரு காரணத்தாலேயே தனது மகனை இயக்கக்காறரிடம் பலி கொடுத்தவர்.  சுட்டுப் போட்டாங்கள். கனடாவில் ‘தமிழர்தகவல்’ சஞ்சிகை ஆசிரியராக மட்டுமல்ல, ‘உலகத்தமிழர்’ வார இதழிலும் அவர் பங்களிப்பு உண்டென அறிவேன். பொதுவாக அவர் பாராட்ட மாட்டாராம்.

 எழுத்தை அல்ல எழுதப்பட்டதன்  சாராம்சத்தை உணர்ந்த காரணத்தால்தான் பாராட்டு கிட்டியிருக்கும் என்றே நினைக்கிறேன். (தேசியம் சஞ்சிகையில் பிரசுரமாகியிருந்த அக் கட்டுரை “தோல்வியே நிலையென நினைத்தால்… ” கீழே:)


தோல்வியே நிலையென நினைத்தால்…

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் நாம் கண்ட “வரலாற்றுத் தோல்வி” யில் தமிழ் மக்கள் எவ்வாறு பங்களித்தார்கள் என்பது குறித்து தனியாக விரிவாக பிறிதொரு முறை பார்க்கலாம். இக் கட்டுரையில் கனடாவின் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் மூவர்  எவ்வாறு “வரலாற்றுத் தோல்வி” யடைந்தார்கள் என்பதைப் பார்ப்போம்.

கரி ஆனந்த சங்கரி MP

இம்முறை 2019 தேர்தலில் களத்திற்கு வந்த தமிழர்களில் மூவர் புதியவர்கள். அவர்களில் இருவர் கொன்சவேடிவ் கட்சியின் புது நியமனங்கள். லிபரல் கட்சியோ, என்டிபி கட்சியோ புதிதாக தமிழர்களை களத்தில் இறக்கவில்லை. வழக்கமாக ஓடுபவருமான நீதன் சான்கூட இம்முறை இல்லை. எங்கோ இருந்து புதிதாக வந்து, பீப்பிள்ஸ் பார்ட்டி என்ற புதுக்கட்சி ஒரு தமிழரை தேடிப்பிடித்து போட்டியிடச் செய்திருந்தது.

கொன்சவேடிவ் கட்சியின் புது நியமனங்களாக வந்த குயின்ரஸ் துரைசிங்கம், தியோடோர் அன்ரனி  ஆகிய இருவரும் பல்லாண்டுகள் தமிழ் சமூகத்துடன் பணி புரிந்தவர்கள். Scarborough Guildwood தொகுதியில் குயின்ரஸ் போட்டியிட்டார். Markham Stouffville தொகுதியில் தியோடோர்  போட்டியிட்டார். பீப்பிள்ஸ் பார்ட்டி தனது வேட்பாளரை Scarborough Centreரில் நிறுத்தியது. ஆனால் இந்தப் புதியவர்கள் மூவரில் எவரும் வெற்றி பெற முடியவில்லை.  ஏன்? ஏன்?? ஏன்???

முதலில் குயின்ரஸ் துரைசிங்கத்தைப் பார்ப்போம்: குயின்ரஸின் தோல்வி அதிர்ச்சி தரவில்லை. ஆரம்பத்திலிருந்தே குயின்ரஸின் வெற்றி குறித்த சந்தேகம் பலர் மனதிலும் இருந்தது. காரணம்? குயின்ரஸ் எதிர்த்துப் போட்டியிட்டது பழுத்த லிபரல் அரசியல்வாதியான ஜோன் மக்கேய்யை! எதிரியின் பலம் தெரிந்தும்  விடாமுயற்சியுடன் குயின்ரஸ் களப்பணியாற்றினார். லிபரல்களுக்கான நாடு தழுவிய ஆதரவில் இம்முறை காணப்பட்ட இறங்குமுகமானது ஒரு கொன்சவேடிவ் அலையை  உருவாக்கக்கூடும் என்பது குயின்ரஸின் எண்ணமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் தோல்வி.

தியோடோர் அன்ரனி

சோகம் என்னவென்றால், தேர்தல் காலத்தில் குயின்ரஸுக்கு உறுதுணையாக இருந்திருக்க  வேண்டிய பலரும் – அமைப்புக்கள் உட்பட – குயின்ரஸைக் கைவிட்டுவிட்டார்கள். அதுமட்டுமல்ல, “தமிழர்கள் நிச்சயமாக தமிழர்களுக்கு வாக்களிப்பார்கள்” என்ற குயின்ரஸின் நம்பிக்கையும் பொய்த்துப் போயிற்று. எதிர்பார்த்ததுபோல தமிழரின் வாக்குகள் குயின்ரஸுக்கு வந்து குவியவில்லை. அதற்கு காரணமாக சக தமிழ் வேட்பாளரான கரி ஆனந்த சங்கரியின் எல்லை தாண்டிய பிரச்சாரத்தை பலர் குறிப்பிடுகிறார்கள்.

“போட்டியிடுபவர் ஒரு தமிழர் என்பதால், தமிழ் வாக்காளர்கள் அந்தத் தமிழருக்கு வாக்களிக்கத் தேவையில்லை.”“தமிழர்கள் கட்சி சார்புநிலை எடுத்தே எப்போதும் வாக்களிக்க வேண்டும்.” என்பன பக்கத்துத் தொகுதி Scarborough – Rouge Park லிபரல் கட்சியின் வேட்பாளர் கரி ஆனந்தசங்கரியின் புதிய நிலைப்பாடாகும். “அந்த நிலைப்பாடு பிரச்சார வடிவத்தில் குயின்ரஸ்ஸுக்கு எதிராக கில்வூட் தொகுதிக்கு விரிவாக்கப்பட்டது” என்று வருந்துகிறார்கள் குயின்ரஸ் ஆதரவாளர்கள். தனது கட்சியின் மூத்த உறுப்பினரான ஜோன் மக்கேயை திருப்திப்படுத்த கரி ஆனந்தசங்கரி எடுத்த முடிவு அதுவாக இருக்கக்கூடும் என்பது என் ஊகம்.

குயின்ரஸ் துரைசிங்கம்

கரி ஆனந்தசங்கரியின் இந்த புதிய நிலைப்பாடு தவறானது.  இலங்கையில் மட்டுமல்ல.. கனடாவில்கூட ‘கட்சி’யை விடவும் தமிழர் ஒற்றுமைக்கு முதலிடம் கொடுத்து இயங்க வேண்டியதுதான் நமது தலைவர்களின் முதல் கடமையாக இருக்கவேண்டும். இனிவரும் காலத்தில் “தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்களிக்கத் தேவையில்லை” என்ற நிலைப்பாட்டை கரி தனது சொந்தத் தொகுதியில் அமுல்படுத்துவாராயின் அடுத்த தேர்தலிலேயே கவிழ்ந்து விடுவார். (‘என்டிபி & லிபரல் ராதிகா’ தோல்வியைத் தழுவிய கதை இதற்கு நல்லதொரு உதாரணம்.)

இதோ… அடுத்து வருகிறார் தியோ எனப்படும் தியோடோர் அன்ரனி! அவர் போட்டியிட்ட மார்க்கம் ஸ்ரோவில் தொகுதியில் வெற்றிக்கான சகல வாய்ப்புக்களும் கொன்சவேடிவ் கட்சிக்கு இருந்தது.  லிபரல் கட்சியின் வாக்காளர்கள் தம்முள் இரு பிரிவாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்த ஒரே ஒரு தொகுதியாகவேறு அது இருந்தது. அப்படியிருந்தும் முட்டாள்தனமாக தோற்றுப்போயிருக்கிறார் தியோ. வேறு யாராவது ஒருவர் அந்தத் தொகுதியில் போட்டியிட்டிருந்தாலும், அட.. சிவாஜிலிங்கமே வந்து கொன்சவேடிவ் வேட்பாளராகிப்  போட்டியிட்டிருந்தாலும் வென்றிருக்கலாம். அப்படியிருந்த களம் அது.

தியோவின் தோல்விக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. “தனது ஆளுமையை நிரூபிக்கும் விதமாக வாக்காளர்களைக் கவரக்கூடிய வகையில் அவர் தன்னை வெளிக்காட்டவில்லை” என்கிறார்கள் அவதானிகள். “பரப்புரை விவாதங்கள் எதற்கும் தியோடோர் போகவில்லை” என்கிறார்கள் விமர்சகர்கள். “எல்லாரும் தனக்கு கட்டாயம் வாக்குப் போடுவார்கள் என்ற மிதப்பில் தியோ இருந்ததால் தோற்றப் போய்விட்டார்” என்றும் வேறு சிலர் சொல்கிறார்கள். (இந்த மிதப்பு கொணரும் தோல்விக்கும் ‘என்டிபி & லிபரல் ராதிகா’ ஏற்கனவே ஒரு உதாரணமன்றோ)

“தனது பெயர் டிப்பிகல் தமிழ்ப் பெயர்போல இல்லை என்பதை தியோ ஒரு அட்வான்டேஜாகக் கருதியிருக்கலாம். ஆனால் மார்க்கம் ஸ்ரோவில் தமிழர்கள் பலருக்கும் தமது தொகுதியில் ஒரு தமிழர் போட்டியிடுகிறார் என்பது சுத்தமாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் நிச்சயமாக தியோவை ஆதரித்திருப்பார்கள். இத்தாலியரான போல்கலென்ராவிற்கே ஒரு காலத்தில் வாக்குக்களை வாரி வழங்கிய தமிழர்கள் இத் தொகுதித் தமிழர்கள்.” என்கிறார் அத்தொகுதியில் அரசியல் பணிபுரியும் ஒருவர்.

Last but Not Least என வருகிறார் மக்கள் கட்சி வேட்பாளர். யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்.. அவரது பெயர் மறந்து போய்விட்டது. (ஜெரேமையா விஜயரத்தினம்..? ஆமாம்.. ஆமாம்…) அடுத்த தலைமுறைக்கு ‘உதாரணமாக’ இருக்கவே தான் போட்டியிட வந்ததாக தன்னைப் பற்றிக் குறிப்பிடும் ஜெரேமையா விஜயரத்தினம், கடைசியில் ‘பிழையான உதாரணமாகிக்’ கொண்டார். இனி தொடர்ந்தும் அதே கட்சியில் இருப்பாரா, போட்டியிடும் ஆசை கொண்டு மீண்டு(ம்) வருவாரா என்பதெல்லாம் கேள்விகள்.

இவ்விடத்தில் ஒரு விடயத்தை கவனியுங்கள்.  எந்தத் தேர்தலாக இருந்தாலும்சரி.. நம்மவர்கள் மனுத்தாக்கல் செய்ததிலிருந்து தேர்தல் முடிவுகள் தெரியும்வரை ஒரு தலைவர் ரேஞ்சுக்கு வைத்து தம்மை வெளிக்காட்டுவார்கள்.  பிறகு அந்தத் ‘தலைவர்கள்’ தேர்தலில் தோற்றதும், ‘டுப்’ என்று மறைந்து விடுகிறார்களே. கவனித்தீர்களா? பிறகு அடுத்து தேர்தல் ஏதாவது வந்தால் மட்டும் கரப்பொத்தான் பூச்சி வெளியே வருவதுபோல மெதுவாக மீண்டும் வருகிறார்கள். வாக்காளர்களாக நாம் இதைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இனிவரும் காலங்களில் இத்தகைய ‘கரப்பொத்தான் பூச்சிகள்’ போட்டியிட வரும்போது – அவை தமிழர்களாக இருந்தாலும் – நாம் வாக்களிக்கக் கூடாது!

ஆம். எந்த ஒரு வேட்பாளரும் தனது தோல்வி தெரிந்தபின் உடைந்துபோய்விடக் கூடாது.  முடிவுகள் தெரிந்த  அடுத்த தினத்திலிருந்து தமிழ் சமூகத்திற்கான சேவைகளை தோற்பவர்கள் வெளிப்படையாகத் தொடரவேண்டும்.  அவ்வாறு இல்லையென்றால் மீண்டும் போட்டியிட வருபவரை “சமூகத்திற்கு என்ன செய்தாய் நீ?” என ஊடகங்கள் மட்டுமல்ல வாக்காளர்களும் கேள்வி கேட்கவேண்டும். ‘தோல்வி’ நிலை அல்ல.

மொத்தத்தில், குயின்ரஸ், தியோ, ஜெரேமையா இந்த மூவரதும் ‘தோல்வி’கள் நமக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். “இதுவும் கட ந்து போகும்” என்றாலும், தேர்தல்களில் தமிழர்கள் போட்டியிடுவதும் தோல்வியடைவதுமாக தொடர்ந்தும் நம் சமூக நிலைமை இருக்கக் கூடாது. குறிப்பாக, ‘தமிழர் போட்டியிட்டால் தமிழர்களே வாக்களிக்க மாட்டார்கள்’ என்ற நினைப்பினை பிரதான கட்சிகளிடம் வர வைத்துவிடக் கூடவே கூடாது. சொந்தச் செலவில் சூனியம் வைப்பது என்பது இதுதான்.

தமிழர்கள் தமது கட்சிகளில் போட்டியிட்டால் இனி “தோல்வியே நிலை” என கனடாவின் பிரதான கட்சிகள் நினைத்தால்..? உங்களுக்கு யாரடா பிறகு போட்டியிட இடம் தருவார்கள்?