தோல்வியை ஒப்புக்கொண்ட சஜித் பிரேமதாசவின் அறிக்கை -

தோல்வியை ஒப்புக்கொண்ட சஜித் பிரேமதாசவின் அறிக்கை

Spread the love
ஐ.தே.கட்சியின் உபதலைவர் பதவியிலிருந்து விலகுகிறார்

நவம்பர் 17, 2019

நேற்று நடைபெற்று முடிந்த இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதிக்கான தேர்தலில் கோதபாய ராஜபக்ச வெற்றியீட்டியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச அவர்கள் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு கோதபாய ராஜபக்சவுக்குத் தன் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது:

“மிகவும் கடுமையான உழைப்புடனும், உற்சாகத்துடனும் பங்குபற்றிய தேர்தல் முடிவடைந்திருக்கும் இவ் வேளையில், மக்களின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்வதோடு, சிறீலங்காவின் 7 வது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் கோதபாய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம் தீவின் நாலாபக்கங்களிலுமிருந்து எனக்கு வாக்களித்த அத்தனை குடிமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கையையிட்டு நான் பெருமைப்படுகிறேன். எனது 26 வருட அரசியல் வாழ்வில் நீங்கள் தந்த ஆதரவே எனக்குப் பலமாக அமைந்தது. எனது தேர்தல் பிரச்சாரப் பணிகளில் களைக்காது ஈடுபட்ட அத்தனை பேருக்கும் நன்றியை இத்தால் பதிவு செய்கிறேன். உங்களது அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் நானும் எனது குடும்பத்தினரும் ஒரு போதும் மறவோம்.

சுதந்திரமான எமது தேசத்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு தேர்தல் மிகவும் அமைதியாக நடந்தேறியதை நாம் கண்டிருக்கிறோம். அதற்குக் காரணம் கடந்த ஐந்து வருட ஆட்சியின்போது நாம் செயற்படுத்திய நிறுவன சீர்திருத்தங்கள் எமக்குப் பெற்றுத் தந்த ஜனநாயக அங்கங்களான தேர்தல் ஆணையம் மற்றும் சட்ட ஒழுங்கு என்பனவாகும். இந்த 7வது ஜனாதிபதித் தேர்தலை இவ்வளவு அமைதியாக நடத்தி முடிக்க ஆவன செய்த ஜனநாயக நிறுவனங்களையும் அதன் விழுமியங்களையும் காப்பாற்றி மேலும் பலப்படுத்தி முன்நகர்த்த வேண்டுமென்று புதிதாகப் பதவியேற்கும் ஜனாதிபதியை நான் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், தேர்தலுக்குப் பின்னரான சூழல் அமைதியாக இருக்கவேண்டுமெனவும், நாட்டின் எந்தவொரு குடிமகனோ, அல்லது தேசிய ஜனநாயக முன்னணி ஆதரவாளரோ என்னை ஆதரித்தவர் என்பதற்காகத் துன்புறுத்த வேண்டாமென்பதையும் திரு ராஜபக்ச அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

26 வருடங்களாக, நான் இத் தேசத்தில் செயற்பட்டுவரும் அரசியல்வாதி. இந்தக் காலத்தில், நான் எனது அம்பாந்தோட்டை மாவட்ட மக்களுக்கும் அல்லது எவருக்கு எப்போது உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கும் சேவை செய்வதற்கான முழு முயற்சிகளையும் எடுத்திருக்கிறேன். இந்த அரசில் ஐந்து வருடங்கள் ராஜாங்க அமைச்சராகப் பணிபுரியக் கிடைத்ததையிட்டும், அதன் மூலம் 2025 க்கு முன்னர் வீடுடையார் சமூகமொன்றை உருவாக்குவதை முன்னிலைப்படுதியதையிட்டும் பெருமை கொள்கிறேன். எனது சக குடிமக்களின் வாழ்வை மேம்படுத்த நான் மனதார, நேர்மையாக எடுத்த முயற்சிகள் என்பதை மக்கள் உணர்வார்கள் என்பதை நான் நம்புகிறேன்.

Related:  பெப். 4 இல், இராணுவத்தினருடன் சேர்த்து விடுதலைப் புலி கைதிகளையும் விடுதலை செய்க | ஜனாதிபதியிடம் அஜித் பிரசன்னா வேண்டுகோள்

இன்றய தேர்தல் முடிவுகளின் காரணமாக நான் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகத் தீர்மானித்துள்ளேன்.

இனி வரும் வாரங்களில், எனது ஜனாதிபதித் தேர்தல் வேட்பு விடயத்தில் என்னை ஆதரித்த அத்தனை பேரின் ஆலோசனையோடும், என் அரசியல் பயணத்தில் என்னோடு உடன் நின்ற மக்களினதும், என் குடும்பத்தினரினதும் ஆலோசனையோடும் எனது அரசியல் எதிர்காலத்தைப் பற்றியும், இங்கிருந்து என் வாழ்வை எப்படி நகர்த்தப்போகிறேன் என்பது பற்றியும் சிந்திக்கவுள்ளேன். இன்றும், எப்போதும், சிறிலங்கா மக்களுடன் இறுகப் பிணைந்த உங்கள் நன்றியுள்ள சேவகன்,

சஜித் பிரேமதாச, பா.உ.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *