பிரியதர்சன்

தோல்வியில் முடிந்த யுகம் | பிரியதர்சன் பக்கங்கள்

பிரியதர்சன் பக்கங்கள் – 9

சின்னவளுக்கும் பெரியவளுக்கும் பள்ளிக்கூடம் கிடையாது. எனக்கும் வேலை ஏதும் இல்லை. நீச்சலுக்கும் வேறெந்த வகுப்புக்கும் ஏத்தி இறக்கவேண்டிய தேவையும் கிடையாது. புலம்பெயர் வாழ்வில் வீட்டில் எல்லோரும் சும்மா இருக்க கிடைப்பது எப்போதாவது நடக்கிற குட்டி அதிசயம். கொரோனாவின் புண்ணியத்தில் அது இன்றைக்கு வாய்த்திருக்கிறது.  

குட்டி  அதிசயங்கள் எப்படியும் நிகழலாம். வட்ஸ்அப்பின் புண்ணியத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னம் அது நடந்தது.  சின்ன வயதில் பள்ளியில்  கூடப் படித்து எண்பதுகளின் மத்தியில் தொலைந்துபோன நண்பர்கள் சிலர் கனடாவில் கிடைத்தார்கள்.  

தேடி அலைந்த நாளொன்றில் கொஞ்ச தாடியோடும் நிறைய புதிய சொற்களோடும் தேவர்கள்  கண்ணில் பட்டார்கள். எல்லா சிக்கலுக்கும் ஈழமும் மாக்சீசமும் மருந்தென்றார்கள்.  கைக்கு எட்டிய தூரத்தில் எங்கள் நாடு  இருப்பதை காட்டினார்கள் .   முழுவதுமாக  நம்பினோம். வீடு மறந்து போனது. பள்ளிநேரம் பாதியாகிப் போனது.  மீதி நேரம் வாசிகசாலைகளிலும் கோயில்களிலும் அவர்களின் உபதேசம் கேட்டோம். அவர்கள் சொல்வது வேத வாக்காகியது.

சின்ன வயது முகங்களும் ஒரு தொகை சம்பவங்களும் பத்திரமாகவே இருந்தது. பார்த்த மனிதர்களோடு  பொருத்தி பார்த்தேன். சிலருக்கு சாயல் தெரிந்தது. சிலர் வேறு ஒன்றாக தெரிந்தார்கள். நல்ல வேளையாக யாருக்கும் கொம்பு முளைக்காமல் இருந்தது.சில தமிழ் படங்களில் பார்த்திருப்போம். சின்ன வயதில் இருப்பார்கள் . ஒரு பாடல் வரும். பெரியவர்களாக மாறிப்போவார்கள் . கதை மீண்டும் அங்கிருந்து நகரும்.முப்பது வருடங்களுக்கு பிறகான சந்திப்பு. கிட்டத்தட்ட அப்படியொரு அனுபவம்.விட்ட இடத்திலிருந்து பேசுவதட்கும் சிரிப்பதட்கும் பலதும் பத்தும்  மிஞ்சியிருந்தது.   இப்போதெல்லாம் நேரம் கிடைக்கும்போது சின்ன வயதுக்கு போய்வர முடிகிறது.

எங்கள் வீடு. அது இருந்த குட்டி ஒழுங்கை. ஊர் பள்ளிக்கூடம். இதுதான் ஹாட்லிக்கு போகிறவரை எனக்கு தெரிந்த உலகம்.

ஒழுங்கை தொடக்கத்தில் சங்கக்கடை இருந்தது. கூப்பனுக்கு அரிசி வாங்க நாலு  பேர் வந்து போவார்கள்.

ஒழுங்கை முடிவில் பொதுகிணறு இருந்தது. தேவைப்படுகிறவர்கள் குளிப்பார்கள். மற்றவர்கள் அங்கிருந்து   ஊர்  புதினம் பேசுவார்கள் யாருடைய வீட்டில் ஆடு குட்டி போட்டதில் தொடங்கி மீன்சந்தையில் விளைமீனின்   அன்றைய   விலை   வரை அங்கு போகிறவர்  தெரிந்து வரலாம்.  

கிணற்றுக்கு பக்கத்தில் வெள்ளவாய்க்கால் இருந்தது. மழைக்காலத்தில் வெள்ளம் நிரம்பி ஓடும். மற்றைய நாட்களில் வெறும் பள்ளம். அதற்கு அப்பால் பெரிய பனங்காணியும் மூன்று இலந்தை பழமரமும்  நடுவில் சுந்தரத்தின் கொட்டில் வீடும் இருந்தது.பள்ளிக்கூடம் முடிந்ததும் இலந்தை பழம் பொறுக்கலாம்.  கீழே பழம் இல்லாதபோது கல்லை எடுத்து வீசினால் பழம் வந்து சேரும்.  
சிலசமயம் கல்லு சுந்தரத்தின் கொட்டிலை பதம் பார்க்கும். அங்கு இருந்து யாரேனும் ஒரு கிழவி சன்னதம் ஆடும். திரும்பி பார்க்காமல் அங்கிருந்து வீட்டுக்கு ஓடி வருவேன். சும்மா படுத்திருக்கிற யாருடைய நாயாவது சேர்ந்து துரத்தும். கையில் நாலு ஐந்து இலந்தை பழமும் காலில இரண்டு மூன்று முள்ளும் மிஞ்சும். ஐந்தாம் வகுப்பு வரை அதுதான் நான் நிகழ்திய ஆகப்பெரும் சாகசம்.

ஹாட்லிக்கு போன பிறகு  வாழ்கை இன்னொரு வட்டத்துக்குள் இடம் மாறியது.  வடமராச்சியில் இருந்த எல்லா கிராமங்களும் நகரங்களும் எங்கள் வகுப்புக்குள்  வந்து சேர்ந்தது. பார்வையும் பழகிற நண்பர்களும் மெல்ல மெல்ல  விரிந்தார்கள்.  படிப்புக்கு வெளியே எதையாவது தேடுகிற மனிதர்களும் நண்பர்களானார்கள். வகுப்புக்குள் கம்பராமாயணம் படிப்போம். வெளியில் புது கவிதையை பற்றி பேசுவோம்.

எண்பத்துமூன்றில்  நிலவரம்  வேறாக மாறியது. ஆங்கிலம் கலந்த சொற்களோடும் சப்பாத்தோடும் புதியவர்கள் வந்து சேர்ந்தார்கள். நாற்பதாக இருந்த வகுப்பு ஐம்பத்தைதாக உருப்பெருத்தது. வந்தவர்கள் கொழும்பில் வீடு இழந்த கதை சொன்னார்கள். வெறும் கையோடு கப்பல் ஏறியதும் சொன்னார்கள். BBC இல் ஆனந்தி மீதம் நடந்தது  சொன்னார். பத்திரிகை பார்த்தால் ஆத்திரம் மட்டும்  மிஞ்சியது.  படிப்பில் மனம் இருப்புகொள்ள மறுத்தது. எங்கிருந்தாயினும் மீட்பர்கள் வருவார்களா என தேடினோம்.தேடி அலைந்த நாளொன்றில் கொஞ்ச தாடியோடும் நிறைய புதிய சொற்களோடும் தேவர்கள்  கண்ணில் பட்டார்கள். எல்லா சிக்கலுக்கும் ஈழமும் மாக்சீசமும் மருந்தென்றார்கள்.  கைக்கு எட்டிய தூரத்தில் எங்கள் நாடு  இருப்பதை காட்டினார்கள் .   முழுவதுமாக  நம்பினோம். வீடு மறந்து போனது. பள்ளிநேரம் பாதியாகிப் போனது.  மீதி நேரம் வாசிகசாலைகளிலும் கோயில்களிலும் அவர்களின் உபதேசம் கேட்டோம். அவர்கள் சொல்வது வேத வாக்காகியது.

சுவர்களை சிவப்பு மை பூசிய போஸ்டர்களால் நிரப்பினோம். அவர்கள் சொன்ன செய்தியை காவி கிராமங்களுக்கு போனோம். பாவப்பட்ட மக்கள் எங்களை தேவ தூதுவர்களாகப் பார்த்தார்கள்.  சாப்பாடு தந்தார்கள். கூட்டம் போட தங்கள் கொல்லை புறத்தை தந்தார்கள். நம்பியதை வகுப்பெடுத்தோம். சிலர் தங்கள் பிள்ளைகளையும் சேர்த்தே அனுப்பினர். நம்பிக்கையில் வளர்ந்த யுகமொன்று தோல்வியில் முடிந்தது.

தூரதேசங்களில்  இவை பற்றி பேசி கழிக்கிற கடைசி சந்ததியாக நாங்கள் இருக்கக்கூடும்.