NewsSri Lanka

தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகப் போவதில்லை – கோதாபய ராஜபக்ச உறுதி!

அடுத்த தடவை போட்டியிடப் போவதில்லையாம்

“தோல்வியடைந்த ஜனாதிபதி என்ற பெயருடன் நான் பதவியிலிருந்து ஒதுங்கப் போவதில்லை. அதே வேளை அடுத்த தடவை நான் தேர்தலில் போட்டியிடப் போவதுமில்லை” என ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘புளூம்பேர்க்’ சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

“நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதே எனது குறிக்கோள். அதுவரை நான் பதவியிலிருந்து விலகப் போவதில்லை. மக்கள் எனக்கு ஐந்து வருட ஆணையைத் தந்திருக்கிறார்கள். அது முடியும்வரை நான் பதவியிலிருந்து விலகப் போவதில்லை. அதே வேளை அடுத்த தடவை நான் ஜனாதிபதி தேர்தலில் நிற்கவும் போவதில்லை” என அவர் தனது பேட்டியில் குறிப்ப்பிட்டுள்ளார்.

இதே வேளை நாட்டை இந்த நிலைக்குக் கொண்டுவந்ததற்காக ராஜபக்ச குடும்பத்தினர் அனைவருமே பதவிகளிலிருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம், மார்ச் மாதம் முதல் இன்றுவரை, ஜனாதிபதியின் உத்தியோக வாசஸ்தலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

ஜனாதிபதி ராஜபக்சவின் இந்த அறிவிப்பு போராட்டக்காரரை மேலும் உக்கிரப்படுத்தவே வழி வகுக்கும். அடுத்த இரண்டு வருடங்களில் அரசியல் நிலவரம் மேலும் குழப்ப நிலைக்குத் தள்ளப்படுவதோடு இதுவரை முன்னெடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள்கூட பின்னடைவுக்குள்ளாக வாய்ப்புண்டு என ரெலிமர் நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் பட்றிக் கரான் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, இய்ற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்துவதில் தான் எடுத்த முயற்சியின் காரணமாக சேதனப் பசளையின் இறக்குமதியைத் தடை செய்தமை தொடர்பாக, அதில் தவறில்லை எனவும் தான் தொடர்ந்தும் அதை வலியுறுத்துகிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதியின் அதிகாரக் குறைப்பு விடயத்தில் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமென நான் நம்பவில்லை. தற்போதுள்ள அரசியல் முறைமை தவறு, ஒன்றில் அதிகாரம் பாராளுமன்றத்திடம் இருக்க வேண்டும் அல்லது ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும், கலப்பாக இருக்கக்கூடாது. அதுவே தான் பிரச்சினை என எனக்கு இப்போது விளங்குகிறது. ஒன்றில் ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படவேண்டும் அல்லது பாராளுமன்றம் ஜனாதிபதி விவகாரங்களில் தலையிடக்கூடாது. இதைக் கூறுவதனால் மக்கள் என்னை வெறுக்கலாம் ஆனால் அதுவேதான் உண்மை” என ‘புளூம்பேர்க்’ பேட்டியில் ஜனாதிபதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.