BusinessScience & Technology

தொழில்நுட்ப நிறுவனங்களில் பெருந்தொகையானவர்கள் பணிநீக்கம்! – கோவிட் விட்டுப்போகும் புதிய கலாச்சாரம்

மாயமான்

Facebook நிறுவனத்தின் தாய் நிறுவனமான Meta 10,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது. தொழில்நுட்பத் துறைக்கு இது புதிதல்ல. கடந்த வருடமே (2022) ஆரம்பித்த பணி நீக்க நிகழ்வு பல முன்னணி நிறுவனங்களிலும் நடைபெற்று வருகிறது. பூகம்பம் நடைபெறுவதற்கு முன்னர் பறவைகளும் விலங்குகளும் அவற்றை முற்கூட்டியே அறிந்து கொள்கின்றன என்பது போல் அமெரிக்க அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை மேற்கொள்ளும் பல நிறுவனங்கள் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அமெரிக்க பொருளாதாரம் மிகவும் இறுக்கமான நிலைக்குத் தள்ளப்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வருகின்றன்றது. இதை உறுதிப்படுத்துவது போல் சில முன்னணி வங்கிகளும் திடீரென்று இழுத்து மூடப்பட்டு வருகின்றன.

2019 இல் ஆரம்பமான கோவிட் பெருந்தொற்று ஒரு வகையில் இதற்கெல்லாம் காரணமாக அமைந்தாலும் அது குறித்து நிபுணர்களின் ஆலோசனைகளை ஏற்று அரசாங்கங்கள் மிதமிஞ்சிய வகையில் எதிர்வினையாற்றிவிட்டதன் விளைவுதான் இதுவோ என்று இன்னுமொரு தரப்பு நிபுணர்கள் இப்போது புகை விட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களில் எவர் சரி எவர் பிழை என்பதை அறிய மூன்றாம் தரப்பு நிபுணர்கள் சந்திக்கு வரும்வரை நாம் காத்திருக்க வேண்டும்.

கோவிட் தொற்றைச் சாதகமாகப் பயன்படுத்தி உலகின் பெரும்பாலான – அல்லது அனைத்து என்றும் கூறலாம் – நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட அரசாங்கங்களிடமிருந்து கொள்ளை கொள்ளையாக வறுவிக் கொண்டன. வியாபாரம் குறைவடைவதால் இந்நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கவேண்டி ஏற்படும்; அதனால் வேலையற்றோர் அதிகரித்து பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும் என்ற நிபுணர்களின் ஆலோசனைகளை ஏற்று அரசுகள் மக்களின் வரிப்பணத்தை அள்ளி இறைத்தன. கோவிட்டின் புண்ணியத்தில் பலர் மாதாந்த உதவிப்பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலைகளை விட்டுவிட்டு அதே நிறுவனங்களில் ‘கைக்காசுக்கு’ வேலை செய்ய ஆரம்பித்தார்கள். தொழிற்சாலைகளின் உற்பத்திக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கங்கள் அள்ளிக் கொடுத்தன. பணம் போதாவிட்டல் மத்திய அரசுகள் தேவையான அளவுக்குப் பணத்தை அச்சடித்தன. பணவீக்கம் அதிகரித்தமைக்கு இது ஒரு முக்கிய காரணம்.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் பணியாளர்களை வீடுகளில் இருந்து வேலை செய்யும்படி பணித்தன. மாணவர்களும் ஆசிரியர்களும் வீடுகளிலிருந்தே கற்க, கற்பிக்கப் பணிக்கப்பட்டனர். இதன் காரணமாக தொலைத் தொடர்பு சாதனங்கள், கணனிகள், இணையத் தொடர்புக்கான கருவிகள் ஆகியவற்றின் தேவைகள் உச்சத்துக்குச் சென்றன. இவற்றில் பெரும்பாலானவற்றை உற்பத்தி செய்யும் சீனாவோ கோவிட்டால் முடக்கப்பட்டிருந்தது. இதனால் உலகம் முழுவதும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது உற்பத்திகளைப் பெருக்கவேண்டி ஏற்பட்டது. சேவைகளை அதிகரிக்கவேண்டி ஏற்பட்டது. ஏராளமான பணியாளர்களைச் சேர்க்கவேண்டி ஏற்பட்டது. பணியாளர் போதாமையால் அவர்களை ஈர்ப்பதற்காகச் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டன. ‘யூ.எஸ்.ஏ. ருடே’ பத்திரிகைச் செய்தியின்படி 2020 பிற்பகுதியில் மட்டும் அமசோன் நிறுவனத்தின் பணியாளர்கள் 93% த்தாலும், மைக்கிரோசொஃப்ட் நிறுவனத்தின் பணியாளர்கள் 53% த்தாலும், மெற்றா நிறுவனத்தின் பணியாளர்கள் 92% த்தாலும் அப்பிள் நிறுவனத்தின் பணியாளர்கள் 20% த்தாலும் அல்ஃபபெட் (கூகிள்) நிறுவனத்தின் பணியாளர்கள் 60% த்தாலும் அதிகரிக்கப்பட்டனர்.

பண வீக்கத்துக்கு முக்கிய காரணம் மக்களின் பைகளில் அதிக பணம் புழங்க ஆரம்பிப்பது. பொருளாதாரம் சுமுகமாக, சமநிலையில் இயங்கவேண்டுமானால் பண வீக்கம் 2% மாகவும் வேலையற்றோர் வீதம் 6% த்தை அண்டியும் இருந்தால் போதுமானது என கனடா வரையறுத்து இருக்கிறது. கோவிட்டைக் காரணம் காட்டி, நிபுணர்களின் ஆலோசனைகளோடு அரசாங்கங்கள் எடுத்த நடவடிக்கைகளால் பண வீக்கம் 8% த்தைத் தாண்டியது. இதைக் குறைக்க மீண்டும் நிபுணர்களின் ஆலோசனைகளோடு மத்திய அரசு வட்டி வீதத்தை அரை வீதத்திலிருந்து 6% வீதம் வரை அதிகரித்தது. அதன்விளைவாக பணவீக்கம் இப்போது 6% த்திற்குக் குறைந்திருக்கிறது. ஆனால் பணவீக்க அதிகரிப்பிற்கு கோவிட் மட்டும் காரணமாக இருக்கவில்லை, யூக்கிரெய்ன் போரும் அதன் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பும்தான் முக்கிய காரணம் என்பதை அரசுகள் அமத்தி வாசிக்கின்றன. எரிபொருள் விலை அதிகரிப்பால் விவசாய உற்பத்திகளும், அவற்றை ஏற்றி இறக்குவது (transport) போன்றவற்றுக்கான செலவுகளும் அதிகரித்தமையே தற்போதைய பணவீக்கத்தின் அடிப்படைக் காரணங்கள்.

எப்படியாகினும் பண வீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வட்டி வீதம் உயர்த்தப்படத் தான் வேண்டும். இதனால் வங்கிக் கடன்களில் ஓடும் தொழில்துறைகள் பாதிக்கப்படுவதும் புதிய தொழில்துறைகள் ஆரம்பிக்க முடியாமலிருப்பதும் உண்மைதான். ஆனால் இதற்கும் கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கும் மெற்றா, கூகிள் போன்ற நிறுவனங்கள் தமது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கும் என்ன சம்பந்தம்?

காரணம் இதுதான். கோவிட் இப்போது மக்களுடன் சமரசம் செய்து வாழப் பழகிக்கொண்டுவிட்டது. வீடுகளில் இருந்து பணிசெய்ய (remote work) அனுமதிக்கப்பட்டவர்களின் செயற்திறன் மிகவும் குறைந்துபோனதை அவதானித்த பல நிறுவனங்கள் (குறிப்பாக வங்கிகள்) தமது பணியாளர்களை இப்போது வேலைத் தலங்களுக்கு வருமாறு பணித்துவிட்டன. இனிமேல் zoom மூலமான சந்திப்புகளுக்கு அவசியமில்லை. தொலைத் தொடர்புத் தொழில்நுட்பத் தேவைகளும் குறைந்துவிடும். வட்டிவீத அதிகரிப்பால் மக்கள் பைகளில் பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் முதலில் அடி வாங்கியவர்கள் தொழில்நுட்பத் துறையினர்.

ஆனால் மெற்றா, கூகிள் போன்ற நிறுவனங்களின் சேவைகள் மேற்குறிப்பிட்ட விடயங்களினால் அதிகம் பாவிக்கப்படவில்லை. அவர்களது பிரதான வருமானம் சேவைகளை அடிப்படையாகக் கொண்டது. சமூக வலைத்தளங்களுக்கான தேவைகளில் பெரிதாக மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. அப்படியிருந்தும் மெற்றா 10,000 பேரையும், கூகிள் 12,000 பேரையும் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது.

காரணம் இதுதான். சோழியன் குடுமி சும்மா ஆடாது. சமூக வலைத்தளங்களும், ஸ்மார்ட் ஃபோன்களும் மக்களது வாழ்வை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும் பாரம்பரிய செய்தி நிறுவனங்கள் பெருமளவில் தமது வருவாயை இழந்துவந்தன. அவர்கள் உற்பத்தி செய்யும் செய்திகளை சமூக வலைத்தளங்கள் ‘திருடி’ இலவசமாகப் பிரசுரித்து வந்தன. விளம்பரதாரர்களும் சமூகவலைத்தளங்களை நாடிச் சென்றுவிட்டனர். இதனால் பத்திரிகை, செய்தி ஊடகங்கள் இணைந்து தத்தம் நாடுகளின் அரசாங்கங்களிடம் முறையிட்டன. இதன் பிரகாரம் சமூக ஊடகங்களில் ஒருவர் செய்தியொன்றைக் ‘கிளிக்’ செய்தால் அதற்கான கட்டணத்தையும், அச்செய்தியில் தோற்றும் விளம்பரத்தினால் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கையும் சம்பந்தப்பட்ட சமூக ஊடகம் பெருமூடகத்திற்கு வழஙக்வேண்டும். மெற்றா, கூகிள் போன்ற நிறுவனங்கள் இவ்வூடகங்களின் செய்திகளைப் பிரசுரித்தால் அவற்றுக்கு கட்டணம் வழங்கவேண்டுமெனத் தீர்மானிக்கும் நிலைக்கு அரசுகள் வந்துள்ளன. 2021 இல் அவுஸ்திரேலியா முன்னெடுத்த இந்நடவடிக்கையைத் தொடர்ந்து மெற்றா, கூகிள் ஆகிய நிறுவனங்கள் பெருமூடகங்களுக்கு கட்டணங்களை வழங்குவதற்கு இணங்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் கூகிள் 300 ஊடகங்களுக்கு பணத்தை வழங்கி ஏற்கெனவே வருகிறது. இச்சட்டம் எதிர்பார்த்தபடி பலனைத் தருகிறது என அவுஸ்திரேலியா அறிவித்ததைத் தொடர்ந்து நியூசீலந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளும் சட்டங்களைக் கொண்டுவரத் தயாராகின்றன.

இதனால் மெற்றா, கூகிள் போன்றவற்றின் பங்குகளின் பெறுமதிகள் சரிவடையலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. இதைச் சமாளிக்க பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய ஆரம்பித்திருக்கின்றன இந் நிறுவனங்கள். ஏற்கெனவே கோவிட் முடக்கம் காரணமாக ஊதிப்பெருத்திருந்த மெற்றா, கூகிள் உட்பட்ட பல தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் ‘தமது கொழுப்பை’ அகற்ற எடுக்கும் நடவடிக்கையே தற்போதைய பணி நீக்கங்கள். ஆனாலும் கோவிட் கொண்டுவந்த புதிய கலாச்சாரம் மக்களிடையே தங்கிவிட்டதுவே இவற்றுக்கான முக்கிய காரணம். இது ஒரு ஆரம்பம் மட்டுமே மேலும் பல தொழில்நுட்ப பூகம்பங்களுக்கு உலகம் தயாராகவேண்டிய நிலை வந்திருக்கிறது என நிச்சயமாக நம்பலாம். (Photo by Arthur Osipyan on Unsplash)