தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நாடெங்கும் பணி முடக்கம் (ஹர்த்தால்)
தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணிகளுடன் நாடெங்கும் கடையடைப்புக்களும் பணிநிறுத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் மக்களமைப்புக்கள் இணைந்து ராஜகிரியவில் ஆரம்பித்த ஊர்வலமொன்று இப்போது பாராளுமன்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு ஏற்கெனவே நிலைகொண்டிருக்கும் பலகலைக்கழக மாணவர் போராட்டத்தோடு அது இணைந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடெங்கும் பரவலாகப் பல நகரங்களிலும் ஏக காலத்தில் இவ்வூர்வலங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதே வேளை தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கோட்டை புகையிரத நிலையத்தில் இன்று மதியம் 12:00 மணிக்கும், அதே வேளை இன்னுமொரு ஆர்ப்பாட்டம் பொரளை சந்தியிலும் ஆரம்பமாகவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கத்தின் ஆதரவில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மனிதச் சங்கிலி ஒன்று காலிமுக கோத்தாகோகமவில் ஆரம்பித்து கொள்ளுப்பிட்டியிலுள்ள மைனாகோகமவரைக்கும் செல்லுமென அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நீர்கொழும்பு மீனவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று இன்று காலை 9 மணிக்கு, தெல்வத்தைச் சந்தியில் ஆரமபமாகவுள்ளது. அதே வேளை, கட்டுநாயக்கா, அவிசாவளை மற்றும்பல தொழிற்பேட்டைகளிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிப்பு
இதே வேளை ஜனாதிபதியின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக மேலதிக இராணுவதினர் அழைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உதவிப் பொலிஸ் மா அதிபர் மர்றும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் ஜனாதிபதி இல்லத்துக்குச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக மேலதிக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.