Science & Technology

தொலைபேசியைக் கண்டுபிடித்தது யார்? -அலெக்சாண்டர் கிரஹம் பெல் அல்ல என்கிறார் ஒரு ஆய்வாளர்

சிவதாசன்

பல வருடங்களுக்கு முன் நான் லண்டன் பல்கலைக்கழகமொன்றில் எனது எலெக்றோணிக்ஸ் எஞ்சினியரிங் படிப்பை முடித்துக்கொண்டு வெளியேறுவதற்கு முன் பல்கலைக்கழகத்தினால் ஒரு ‘பிரியாவிடைக்’ கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டது. அதில் பிரதான பேச்சாளராக வந்தவர் ஒரு நாசா எஞ்சினியர்.

அவர் சொன்ன விடயம் “நீங்கள் ஏதாவது புதிய தொழில்நுட்பத்தையோ அல்லது கருவிகளையோ கண்டுபிடிப்பதற்கான எண்ணம் கருக்கொண்டால் அதை மதுபான நிலையங்களிலோ அல்லது பார்ட்டிகளிலோ நண்பர்களிடம் உரையாடிவிடாதீர்கள்” என்று கூறிவிட்டு ஒரு கதையைச் சொன்னார். ஒரு பொறியியலாளர் தான் ஒரு புதிய சாதனத்தை உருவாக்க எண்ணியுள்ளதாகக்கூறி அதுபற்றிய செயற்பாடு மற்றும் அதன் பயன்பாடு பற்றியும் நண்பர் ஒருவருக்கு விளக்கிக்கூறி அவரது அபிப்பிராயத்தைக் கேட்டிருக்கிறார். இவ்வுரையாடல் நடைபெற்ற இடம் ஒரு மதுபான நிலையம் (Pub).

இவ்வுரையாடல் நடைபெற்று சில நாட்களில் தனது எண்ணத்தை லண்டனிலுள்ள உரிமப் பதிவுகள் அலுவலகத்துக்கு (Patent Office) அப் பொறியியலாளர் அனுப்பியிருக்கிறார். ஆனால் பதிவுகள் அலுவலகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் பல நாட்களுக்கு முன்னரே இப்புதிய கண்டுபிடிப்பு பற்றி இன்னொருவர் உரிமப் பதிவு செய்து விட்டார். பதிவு செய்த திகதி மதுபான நிலையத்தில் மதுவருந்திய நாள். அதைச் செய்தது அவரோடு உரையாடிய ‘நண்பர்’.

அப்போது பதிவுகள் அலுவலகத்தின் விதி – புதிய கண்டுபிடிப்பு பற்றிய குறுந்தகவல்களை ஒரு பேப்பரில் கிறுக்கியாகினும் முதலில் சமர்ப்பிக்க வேண்டும். அதுவே ‘பதிவுத் திகதியாக’க் கருதப்படும். பின்னர் ஆறு மாதங்களுக்குள் முறையாக எழுதப்பட்ட பதிவுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சம்பவம் நடைபெற்ற அன்று பொறியியலாளரின் நண்பர் மதுவருந்திவிட்டு வீடு போகும் போது ‘புதிய கண்டுபிடிப்பு’ பற்றிய தகவலை ஒரு பேப்பரில் எழுதித் தனது பெயரை இணைத்து பூட்டியிருந்த அலுவலகத்தின் தபால் துளையினூடு போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அப் புதிய கண்டுபிடிப்பினால் வந்த இலாபம் அனைத்தும் அந்த நண்பருக்கே கிடைத்தது.

விடயம் முக்கியமானதாக இருந்தாலும் இது உண்மையான கதையா இல்லையா என்பதை நான் பல தடவைகள் யோசித்ததுண்டு. இந்த அலெக்ஸாண்டர் கிரகம் பெல்லின் கதை அதை உண்மையாக்கி இருக்கிறது.

****

நாம் இப்போது பாவிக்கும் தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் ஸ்கொட்லாண்டில் பிறந்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் என்றே எமக்குச் சொல்லித்தரப்பட்டது. அவரே தொலைபேசியில் உரையாடிய முதல் மனிதர். மார்ச் 10, 1876 இல் அவர் மேற்கொண்ட முதல் அழைப்பு அவரது உதவியாளருக்கு. “மிஸ்டர் வட்ஸன், இங்கே வா நான் உன்னைப் பார்க்கவேண்டும்” என்பதுவே அந்த அழைப்பு.

ஆனால் “How the Victorians Took Us to the Moon: The Storey of the 19th-Century Innovators Who Forged Our Future” (Icon Books, 2022) என்ற நூலில் மோறஸ் என்பவர் தொலைபேசி பெல்லின் கண்டுபிடிப்பென்பதை மறுதலிக்கிறார். “19ம் நூற்றாண்டில் மின்சாரத் துறையில் வெளிவந்த கண்டுபிடிப்புகளில் பல, -ஏறத்தாழ அனைத்தும் என்றுகூட என்னால் கூற முடியும் – கேள்விக்குரியவை. இவற்றில் பலவற்றின் பதிவுகளைச் செய்தவர்களைவிட வேறுபலர் உரிமை கோரியிருக்கிறார்கள். பிரித்தானிய, மின்காந்த அலையால் இயங்கும் ரெலிகிராஃபைக் கண்டுபிடித்த வீட்ஸ்ரோன், குக் ஆகியவர்களும்சரி, மோர்ஸ் கோட் எனப்படும் சங்கேத மொழியைக் கண்டுபிடித சாமுவேல் மோர்ஸ் என்பவரும்சரி பிணக்குகளின் பின்னரே கண்டுபிடிப்புகளுக்கு உரிமைகளைப் பெற்றார்கள்.

தொலைபேசியக் கண்டுபிடித்ததாக நாம் கருதிக்கொண்டிருக்கும் அலெக்ஸாண்டர் கிரஹம் பெல்லுக்கும் இதே கதிதான். இன்னொருவருடைய கண்டுபிடிப்பை மோசடி பண்ணித் தன்னுடையதாக பெல் ஆக்கினார் என புரூக்லின் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த கிறிஸ்தோபர் போச்சாம்ப் தனது 2010 கட்டுரையில் ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார். உண்மையில் தொலைபேசியின் பின்னாலுள்ள கருத்துருவாக்கத்துக்கும் செயற்பாட்டுக்குமான உரிமை அமெரிக்க பொறியியலாளர் எலிஷா கிறே மற்றும் ஜேர்மானிய பெளதீகவியலாளர் ஃபிலிப் றீஸ் ஆகியோருக்கே போகவேண்டும். அவர்களே 1861 இல் சத்தத்தை முதலில் மின்காந்த அலைத் துண்டுகளாக (make and break) மாற்றி மின்னிணைப்புகள் மூலம் இன்னுமொரு இடத்துக்கு அனுப்பி அங்கு அந்த அலைத்துண்டுகளை மீளுருவாக்கம் செய்து காட்டியவர்கள். இந்த அலைத்துண்டுகள் (மின் துடிப்புகள்) மூலம் தொடர்ச்சியான ஒலி அலையை அனுப்பமுடியாமல் இருந்ததால் அது தொலைபேசியாகப் பரிணாமிக்க முடியாமல் போனது. இத் தொழில்நுட்பத்தை எடுத்து தொடர்ச்சியான அலைப் பரிவர்த்தனை செய்யும் (waves) கருவியை உருவாக்கியவரே பெல்.

ஆனால் உண்மையில் தொலைபேசியின் கண்டுபிடிப்புக்கான பதிவுகளை (patents) பெல்லும், கிறேயும் ஒரே நாளில் – பெப்ரவரி 14, 1876 இல் – செய்ததாக போஷாம்ப் கூறுகிறார். கிறேயின் உரிமப் பதிவு பற்றிய தகவல்கள் பெல்லினுடையதைவிட காலத்தால் முந்தியே அலுவலகத்தை அடைந்திருந்தாலும், பெல்லின் பலமிக்க வழக்கறிஞர்கள் புத்திசாதுரியத்துடன் தமது பதிவுக்கான கட்டணத்தை முதலில் செலுத்தியதன் மூலம் கிறேயைத் தோற்கடித்துவிட்டார்கள் என போஷாம்ப் கூறுகிறார். 1880 இல் நடைபெற்ற மிகவும் பிரபலமான உரிம வழக்கென அறியப்படும் இவ்வழக்கில் கிறே தோற்கடிக்கப்பட்ட விதம் தவறு என்கிறார் போஷாம்ப். பெல்லின் சட்ட அறிஞர்கள் குழு மார்ச் 7 அன்றே உரிமப் பதிவுக்கான கட்டணத்தைச் செலுத்தியிருந்தார்கள். கிறேயின் பதிவு முன்னரே பெறப்பட்டிருந்தாலும் கட்டணம் செலுத்தியவர் பெல் ஆகையால் ‘அனைத்து தொலை உரையாடல் தொழில்நுட்பத்துக்குமான கண்டுபிடிப்பு உரிமம்’ பெல்லுக்கே சேரவேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. வரலாறும் அப்படியே தொடர்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் மார்ச் 10 அன்றே, மூன்று நாட்கள் கழித்து, பெல் தனது உதவியாளர் வட்சனுக்கு எடுத்த தொலைபேசி அழைப்பு நிகழ்கிறது. பணமும் அதிகார பலமும் இங்கே வரலாற்றை மாற்றி அமைத்திருக்கின்றன. இருப்பினும் மின்காந்த அலைகளை அதிர்வுகளாக்கி தெளிவான ஒலி அலைகளை மறு இடத்தில் மீளுருவாக்கம் செய்யும் விடயத்தில் கிறே /றீஸ் ஆகியோருடைய கண்டுபிடிப்பை விட பெல்லின் தொழில்நுட்பம் சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. பெல் தனது உரிமப் பதிவைப் பெற்று ஒரு வருடத்தில் அவரது மனைவியின் தந்தையார் கார்டினர் கிரீன் ஹப்பர்ட் பெல் ரெலிஃபோன் கம்பனியை ஆரம்பித்தார். அது இன்றுவரை உலகம் பூராவும் வியாபித்து நிற்கிறது. ஆனால் இக் கண்டுபிடிப்புக்கு அடித்தளமிட்டவர்கள் கிறே / றீஸ் ஆகியோரே.

இக் கட்டுரையை எழுதுவதற்குக் காரணம் உரிமப்பதிவுகள் பற்றிய விழிப்புணர்வு எமது இளைய சந்ததிகளுக்குச் சென்றடையவேண்டும் என்பதற்காகவே. நமது இளைய தலைமுறையினருக்கு பல்கலைக்கழகங்களில் உரிமப்பதிவுகள் பற்றிய கற்கை முறையாக அளிக்கப்படுவதாகத் தெரியவில்லை. பல திறமைசாலிகள் தமது கண்டுபிடிப்புகளை தாம் பணிபுரியும் நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுத்து விடுகிறார்கள்.

Photo by Anna Jiménez Calaf on Unsplash