தை மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள் (Tamil Heritage Month)’ எனப் பிரகடனப்படுத்தும்படி லண்டன் மாநகரசபை உறுப்பினர்கள் ஏகமனதாகக் கோரிக்கை
தை மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள்’ எனப் பிரகடனப்படுத்தும்படி நகரபிதாவைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானமொன்றை லண்டன் மாநகரசபை உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளனர். இத் தீர்மானத்தை கன்சர்வேட்டிவ் நகரசபை உறுப்பினரான நிக்கொலஸ் றோஜர்ஸ் முன்மொழிந்திருந்தார்.
இத் தீர்மானத்தையடுத்து லண்டன் மாநகரம் மற்றும் அதன் சிறுநகரங்களிலெல்லாம் தை மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்களாகப்’ பிரகடனப்படுத்தும் பொறுப்பு நகரபிதா சாதிக் கானிடம் விடப்பட்டிருக்கிறது.
இக் கோரிக்கையை முன்மொழிந்து , உறுப்பினர் நிக்கொலஸ் றோஜெர்ஸ் பேசும்போது ” இந் நகரின் வாழ்வுக்கு தமிழர்கள் பல பாரிய, முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள். அது பாடசாலைகளிலாகவிருந்தாலும் சரி, எங்கள் மருத்துவமனைகளிலாகவிருந்தாலுஞ்சரி, எங்கள் முதியோர் பராமரிப்பு இல்லங்களிலாகவிருந்தாலுஞ்சரி, ஆச்சரியப்படவல்ல அஸ்ட்றாசெனிக்கா தடுப்பூசியாகவிருந்தாலும் சரி, அவர்கள் தமது நெறிமுறைகளை எமது பொதுச்சேவைகளில் பிரயோகப்படுத்துகிறார்கள். அவர்கள் ‘வெளிநாட்டில்’ ஒடுக்கப்பட்டுவரும்போதும்கூட அவர்களால் நமது பொதுச்சேவைக்கு இப்பங்களிப்பைச் செய்ய முடிகிறது” எனத் தெரிவித்தார்.
உறுப்பினர் உன்மேஷ் தேசாய் பேசும்போது ” 1984 இல் லண்டன் நகருக்கு முதல் தமிழ் அகதிகள் வருகை நடைபெற்றபோது ஈஸ்ட் ஹாம் நகரில் நடைபெற்ற தமிழர் ஒருமைப்பாட்டு அமைப்பினாம் நடத்தப்பட்ட ஆதரவு ஊர்வலத்தில் தான் பங்குபற்றியமை பற்றியும் அப்போது யாழ்ப்பாணத்தில் அரச படைகளின் குண்டுவீச்சுக்களுக்கு இரண்டு வீட்டுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மக்கள் இறந்தமை பற்றிக் குறிப்பிட்டார்.
கன்சர்வேட்டிவ் உறுப்பினரான ஷோன் பெய்லி, ‘கறுப்பபின வரலாற்று மாதம் (Black History Month)’ எப்படித் தனது கலாச்சார, தனிப்பட்ட, பொருளாதார, உளவள, ஆன்மீக விழுமியங்களை மேம்படுத்தியது எனக் கூறியதுடன் தமிழர்கள் உலகில் மிக மோசமான ஒடுக்குமுறைகளைக் கண்ட இனம் எனவும், இப் பிரகடனத்தின் மூலம் உலகத்தில் எங்கிருந்து வருபவரையும் வரவேற்கும் நகர் லண்டன் என்ற பெருமையைப் பெறும் எனவும் தெரிவித்தார்.
உறுப்பினர் டாக்டர் ஒன்கார் சஹோட்டா, உறுப்பினர் கிருபேஷ் ஹிரானி ஆகியோர் உட்படப் பலரும் தமிழரது பங்களிப்பு பற்றியும் தமிழ் மரபுத் திங்களின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார்கள்.
இத் தீர்மானம் குறித்து பிரித்தானிய தமிழ் கன்சர்வேட்டிவ் ஆதரவாளர்கள் மற்றும் ‘தொழிற்கட்சிக்கான தமிழர்கள்’ அமைப்பு ஆகியோரும் கருது தெரிவிக்கையில் லண்டன் தமிழ் மக்களின் பங்களிப்புக்களைக் கொண்டாடும் வகையில் மாநகரம் இத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமெனத் தாம் நம்புவதாகத் தெரிவித்தனர்.
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் லண்டனில் வாழ்கிறார்கள். இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் மட்டும், டாக்டர்கள், தாதிமார், முன்னரங்க சுகாதார சேவையாளர்கள் எனச் சுமார் 15,000 பணியாளர்கள் சேவை செய்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நிலையங்களைத் தமிழர் நடத்தி வருகின்றனர். இரண்டாம் உலக யுத்தத்தில் விமான ஓட்டிகளாகப் பணிபுரிந்தது முதல் அஸ்ட்றாசெனிக்கா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தது வரை தமிழர்களின் பங்களிப்புத் தொடர்கிறது.