உங்களுக்கு ‘இந்த’ நோயறிகுறிகள் இருக்கின்றனவா?

இது தைரோயிட் விழிப்புணர்வு மாதம்

அகத்தியன்

இது 2022 ஆம் ஆண்டுக்கான தைராயிட் விழிப்புணர்வு மாதமாகும். தைராயிட் சுரப்பியின் சீரற்ற செயற்பாடு உடலில் பல நோய்களுக்குக் காரணமாகிறது. உடலிலுல்ள ஏனைய சுரப்பிகளைப் போலவே இதுவும் ஒரு வகையான ஹோர்மோனைச் சுரக்கிறது. இரத்தோட்டத்தில் கலக்கும் இந்த ஹோர்மோன் உடலின் பல தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.

கழுத்தின் முற்பகுதியில் தொண்டைக்குழிக்குக் கீழே அமைந்திருக்கும், வண்ணத்துப் பூச்சியின் வடிவிலான இச் சுரப்பியின் முக்கியமான தொழிற்பாடு உடலின் சக்தித் தேவையைப் (உணவைச் சமிபாடடையச் செய்யும்) பூர்த்தி செய்வதாகும். ஒருவரது உடல் வளர்ச்சி மற்றும் உறுப்புகளின் சீரான அபிவிருத்திக்கு தைராயிட் சுரப்பியின் சீரான தொழிற்பாடு அவசியமாகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு ஹோர்மோனைத் தொடர்ச்சியாக இரத்தோட்டத்தில் இடுகை செய்வதன் மூலம் இச் சுரப்பி தனது தொழிற்பாட்டை நிர்வகிக்கிறது. சிறு வயதின்போது குழந்தைகளின் உடல் வளர்ச்சித் தேவைகள், வெளியில் குளிர் அதிகமாகவிருத்தல், பெண்கள் கருத்தரித்திருத்தல் ஆகிய காலங்களில் அதிகரிக்கும் சக்தித் தேவைகளுக்காக இச்சுரப்பி மேலதிகமாத ஹோர்மோன்களைச் சுரக்கவேண்டி ஏற்படுகிறது.



அறிகுறிகள்

அமெரிக்க தைரோயிட் கழகத்தின் தரவுகளின்படி 60% த்துக்கு மேலானோருக்கு தமக்கு தைரொயிட் கோளாறு இருப்பதே தெரிவதில்லை. அதனால் தான் ஜனவரி மாதத்தை ‘தைரோயிட் விழிப்புணர்வு மாதமாக’ அது அறிவித்திருக்கிறது. தைரோயிட் கோளாறு ஆண்களைவிடப் பெரும்பாலும் பெண்களையே பாதிக்கிறது.

பெரும்பாலான தருணங்களில் இச்சுரப்பியின் சுரப்பு போதாமலிருக்கும்போது உடல் தொழிற்பாடுகள் சில பாதிப்புறுகின்றன. இதை ஹைபோதைரோயிடிஸ்ம் (Hypothyroidism) என அழைப்பர். ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகள் அதிகம் தென்படமாட்டாவெனினும் பிந்திய அல்லது முற்றிய நிலையில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கு இது காரணமாகிறது. அவற்றில் சில:

  • சோர்வு (Fatigue)
  • சிறு குளிரையும் தாங்க முடியாதிருத்தல் (Increased sensitivity to cold)
  • மலச்சிக்கல் (Constipation)
  • உலர் சருமம் (Dry skin)
  • உடல் எடை அதிகரிப்பு (Weight gain)
  • முக அதைப்பு (Puffy face)
  • குரல் தடித்தல் (Hoarseness)
  • தசைகள் பலவீனமடைதல் (Muscle weakness)
  • இரத்தத்தில் கொலெஸ்ரெறோல் அதிகரிப்பு (Elevated blood cholesterol level)
  • தசை நோவு, மென்மை, பிடிப்பு (Muscle aches, tenderness and stiffness)
  • மூட்டுகளில் வலி, வீக்கம், பிடிப்பு(Pain, stiffness or swelling in your joints)
  • பெண்களில் சீரற்ற மாதவிடாய் (Heavier than normal or irregular menstrual periods)
  • தலைமுடி அடர்த்தி குறைவடைதல் (Thinning hair)
  • இதயத் துடிப்பின் வேகம் குறைவடைதல் (Slowed heart rate)
  • மன அழுத்தம் (Depression)
  • ஞாபக சக்தி மந்தமடைதல் (Impaired memory)
  • தைரோயிட் சுராப்பி வீக்கமடைதல் (Enlarged thyroid gland (goiter))
  • கருத்தரிக்க முடியாமை (Infertility)
  • இருதய வியாதி (Heart disease)

சிகிச்சை

தைரோயிட் சுரப்பியின் தொழிற்பாட்டைப் பரிசோதிப்பதற்குப் பல பரிசோதனைகள் உள்ளன. வைத்தியர்களின் ஆலோசனைகளுடன், செயற்கையான ஹோர்மோனை ஏற்றுவதன் மூலம் இதைச் சரிசெய்துகொல்ள முடியும்.



யோகாசனம்

செயற்கையான ஹோர்மோன் சிகிச்சைகளை விரும்பாதவர்கள் வைத்தியர்களின் ஆலோசனையுடன் மேலதிகமாக சில யோகாசன அப்பியாசங்களையும் செய்து பார்க்கலாம்.

  1. சர்வாங்காசனம்
This image has an empty alt attribute; its file name is Sarvaangaasanam.jpeg
சர்வாங்காசனம்

நிலத்தில் படுத்துக்கொண்டபடி கழுத்துடன் உடலை 90 பாகையில் வளைத்து மார்பு. வயிறு, இடுப்பு, கால்கள் என உறுப்புகளை மேல்நோக்கி நிலைகுத்தாக வைத்திருப்பது இவ்வப்பியாச முறையாகும். சுமார் 15 நிமிடங்கள் இந்நிலையில் இருக்கும்போது தோள்களும் கழுத்தும் விரித்துக்கொள்ளப்படுவதும் வயிற்றுள் உறுப்புகள் அப்பியாசத்துக்காக்கப்படுவதும் நடைபெறுகிறது. இவ்வப்பியாசத்தின் மூலம் தைரோயிட் சுரப்பு குறைவானவர்களும் (hypo), சுரப்பு அதிகமானவர்களும் (hyper) பலன் பெறுகிறார்கள். பெண்களில் மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற இவ்வப்பியாசம் உதவுகிறது.


2. மத்ஸ்யாசனம்

This image has an empty alt attribute; its file name is MathSyaasanam.jpeg
மத்ஸ்யாசனம்

‘மத்ஸ்ய’ என்றால் வட மொழியில் மீன் என்று பொருள்படும். நிலத்தில் முதுகு படும்படி படுத்துக்கொண்டு, முழங்கைகளில் மார்பைத் தாங்கியபடி கால்களை நீட்டி,மார்பைத் தூக்கி மீன்போல் வளைத்து வைத்துக்கொள்வது இவ்வப்பியாச முறை. சுமார் 10 நிமிடங்களுக்குக் குறையாமல் இருக்கும் இவ்வேளையில் சுவாசத்தை உள்ளே இழுத்து வைத்துக்கொள்தல் வேண்டும். இதன்போது மார்பு, இடுப்பு, கழுத்து ஆகியன விரிவடைகின்றன. தலையிடி, கழுத்து நோவு உள்ளவர்கள் இவ்வப்பியாசத்தைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.






3. உஸ்ட்றாசனம்

This image has an empty alt attribute; its file name is Usdraasanam.jpeg
உஸ்ட்றாசனம்

முழங்கால்களில் நின்றுகொண்டு இடுப்புடன் 90 பாகையில் மார்பை வளைத்து கைகளால் பாதங்களைப் பிடித்துக்கொள்வது இவ்வப்பியாச முறை. சில செக்கண்டுகளின் பின்னர் கைகளை விடுவித்துக் கொள்ளலாம். இதன் மூலம் மார்பு, தோள், கழுத்து வயிறு ஆகியன விரிவடைந்து சுவாசம், சமிபாடு ஆகியன முன்னேற்றம் கானும். தைரோயிட் சுரப்பிக்கான இரத்தோட்டம் அதிகரிக்கும். முதுகெலும்பு விரிவடைந்து அதன் இயக்கம் இலகுவாக்கப்டும். தொடைகளில் சேகரிக்கப்படும் கொழுப்பு கரையும்.






This image has an empty alt attribute; its file name is Bujangaasanam.jpeg
புஜாங்காசனம்

4. புஜாங்காசனம்

வயிற்றில் படுத்தபடி, கைகளைத் தரையில் ஊன்றி, இடுப்புடன் மேலுடலைத் 90 பாகையில் நேராக உயத்திக்கொண்டு சுவாசத்தை உள்ளே இழுத்து, நெற்றியை மேலே உயர்த்திக்கொள்வது இவ்வப்பியாச முறை. சுமார் 5 செக்கண்டுகளுக்கு இந்நிலையில் உடலை வைத்துக்கொள்ளவும். இதன் மூலம் முள்ளந்தண்டு பலமடைதல், மார்பு, வயிறு, தோள்கள், சுவாசப் பைஅகள், விரிவடைதல் ஆகியவற்றுடன் இரத்தச் சுற்றோட்டமும் அதிகரிக்கும். கழுத்தும் தொண்டையும் விரிவடைவதால் தைரோயிட் சுரப்பியும் சீராகச் செயற்பட இது உதவுகிறது.






5. சர்வாசனம் அல்லது சவாசனம்

This image has an empty alt attribute; its file name is Sarvaasanam.jpg
சர்வாசனம்

இது மிகவும் இலகுவான ஒரு ஆசன முறை. கால்களையும், கைகளையும் விரித்துக்கொண்டு முதுகை நிலத்தில் வைத்து உடலைத் தளர்த்திக்கொள்வது இவ்வாசனத்தின் செய்முறை. சாதாரணமாகச் சுவாசித்துக்கொண்டு உடல் தன்பாரத்தைத் தாங்கிக்கொள்வது போன்ற உணர்வுடன் கால் விரல்களிலிருந்து தலையுச்சி வரையுள்ள அத்தனை உறுப்புகளிலும் ஒவ்வொன்றாக மனதை நிறுத்துதல் அவசியம். ஆழமான சுவாசத்தின் மூலம் நரம்புத் தொகுதியை ஓய்வு நிலைக்குக் கொண்டுவரவல்ல இவ்வாசனம் ஒருவரது உடல் வெப்பநிலையை உடனடியாகக் குறைக்க வழிசெய்கிறது. தைரோயிட் சுரப்பியின் உயர் / தாழ் செயற்பாடுகளிலிருந்து நிவாரணம் தரும் இவ்வப்பியாசம் தூக்கக் குறைவானவர்களுக்கு நிறைவான தூக்கத்தைப் பெற்றுக்கொடுக்கும் அதே வேளை உடற்கலங்கள் மீள் புத்துணர்ச்சி பெறவும் உதவுகின்றது.