Sri Lanka

தைப்பொங்கலோடு மேலும் பல தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை – சீ.வி.விக்னேஸ்வரன்

கைதிகளின் உறவினர்கள் நீதியமைச்சர் விஜேதாசா ராஜபக்சவை யாழ்ப்பாணத்தில் சந்திப்பு

எதிர்வரும் தைபொங்கலை முன்னிட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுச் சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பலர் விடுதலைசெய்யப்படலாமென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அக்டோபர 30 அன்று யாழ் சென்ற நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவைச் சந்த்தித்துப் பேசியதன் பின்னர் திரு விக்னேஸ்வரன் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“தமிழ்க் கைதிகள் நீண்டகாலமாகச் சிறையில் வைத்திருப்பது பற்றிய எனது அதிருப்தியை நான் அமைச்சருக்குத் தெரிவித்து அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தேன். தமக்கு அதில் உடன்பாடி இருக்கிறதென்றும் ஆனால் அவர்களை விடுதலை செய்வதில் பல சட்டச் சிக்கல்கள் இருக்கிறதெனவும் அவை பற்றித் தாங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் ஆலோசித்து வருவதாகவும் தைப்பொங்கலை முன்னிட்டு மேலும் பல கணிசமான எண்ணிக்கையினர் விடுதலை செய்யப்படலாமென அமைச்சர் தெரிவித்தார்” என பா.உ. விக்னேஸ்வரன் ‘தி மோர்ணிங்’ பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

கடைசியாக விடுதலை செய்யப்பட்ட கைதிகள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எதுவித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை என அமைச்சர் விஜேதாச தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

“‘அரகாலயா’ போராட்டம் சிங்கள மக்களின் மனநிலையை மாற்றியிருக்கிறது. போர் முடிந்து 13 வருடங்கள் சென்ற பிறகு தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறதென சிங்கள மக்கள் தற்போது புரிந்துகொண்டுவிட்டார்கள். அது வரவேற்கத்தக்கது” எனத் தான் அமைச்சரிடம் தெரிவித்ததாக திரு விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறைவைக்கப்பட்டிருக்கும் பல தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் அமைச்சர் ராஜபக்சவை யாழ்ப்பாணத்தில் வைத்துச் சந்தித்திருந்தார்கள். இவர்களில் 16 வயதில் கைதுசெய்யப்பட்டு தற்போது 44 வயதாகும் கைதியொருவரின் சகோதரி ஒருவரும் அடங்கியிருந்தார். 28 வருடங்களாக வெளியுலகத்தைக் காணாமல் தவிக்கும் தனது சகோதரரை விடுதலை செய்யுமாறு அவர் கோரியிருந்தார். 25 வருடங்களாகச் சிறையிலிருது சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட ஒருவர் வவுனியாவிலிருந்து வந்து அமைச்சரைச் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். மேலும் பல கைதிகளின் உறவினர்களும் அமைச்சரைச் சந்தித்திருந்தனர். மிகவும் உணர்வுபூர்வமான முறையில் இச்சந்திப்பு நிகழ்ந்திருந்தது எனக் கூறப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட 8 தமிழ்க் கைதிகள் தொடர்பாக திரு விக்னேஸ்வரன் தன்அது நன்றியை ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்ததுடன் மிகுதியாக உள்ளவர்களையும் விடுதலை செய்யும்படி கோரி அவருக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.