தேவையேற்படின் இன்னுமொரு ஆயுதப்போராட்டத்திற்கு நான் தயார் – லால் காந்தா
“தேவையேற்படின் இன்னுமொரு ஆயுதப் போராட்டமொன்றிற்கு நான் தயார்” என தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் முன்னாள் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினருமாகிய கே.டி. லால் காந்தா கூறியிருப்பது தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
“எங்கள் நோக்கம் ஒரு நல்ல நாட்டை உருவாக்குவது. இதைச் சாதிக்கவேண்டுமானால் ஆட்சி அதிகாரம் எங்களிடம் இருக்க வேண்டும். 1931 இலிருந்து இலங்கை மக்கள், இப்பிராந்தியத்தில் இருக்கும் இதர நாடுகளை விட அதிகமாகவே தமது வாக்குகளின் பலத்தால் அரசுகளைத் தேர்ந்துவந்திருக்கிறார்கள். அதே வேளை இங்கு பல ஆயுதப் போராட்டங்களும் இதர முயற்சிகளும் கூடவே நடைபெற்றுள்ளன. இப்படியான இயக்கங்களில் நான் முன்னர் பங்கு கொண்டிருக்கிறேன். சூழல் வற்புறுத்துமாயின் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தில் நான் பங்குபற்றத் தயாராகவுள்ளேன். ஆனால் அது இன்னுமொரு கலந்துரையாடலுக்கானது” என நேற்று கண்டியில் நடைபெற்ற கட்சி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசும்போது லால் காந்தா தெரிவித்துள்ளார்.
“உள்ளூராட்சி தேர்தல்கள் பின்போடப்பட்டதனால் மக்கள் சலிப்படைந்திருந்தார்கள். இப்போது ஆகஸ்ட் 2024 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறப் போகிறது என்பதை நினைத்து அவர்கள் மீண்டும் உருக்கொண்டுள்ளார்கள். இதற்கு காரணம் 75 வருட சாபத்தைப் புறந்தள்ளி தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறுவதைப் பார்க்கவேண்டுமென்ற மக்களின் ஆவல் தான்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவில் தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை எதிர்க்க வேண்டுமென ராஜஜபக்ச குடும்பத்தின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் இடதுசாரியும் தற்போது சுயாதீன உறுப்பினராக இருப்பவருமான வாசுதேவ நாணயக்கார கூறியதாகவும் இலங்கையில் இதைவிட வேறெந்தத் தீர்வும் இருக்கவில்லை எனவும் லால் காந்தா தெரிவித்துள்ளார்.
“இங்கு ஜே.வி.பி. கட்சியை அல்ல தேசிய மக்கள் சக்தியையே நாம் முன்னிலைப் படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி பன்முகத்தன்மை கொண்ட உறுப்பினர்களை உள்வாங்க விரும்புகிறது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் பிரதான நோக்கமாக இருக்கவேண்டும். பன்முகத் தன்மையை நான் பெரிதும் விரும்புபவன். இருப்பினும் நாம் எமது பிரதான நோக்கமே எப்போதும் முதன்மையானது” என அவர் மேலும் தெரிவித்தார்.
மிகவும் உயர்ந்த ஒழுக்கத்தையுடைய கட்சி எனப் பெயர் பெற்ற ஜே.வி.பி. மேலும் மாற்றமடைந்து மேலும் பலரை உள்வாங்கி பன்முகத்தன்மையுள்ள கட்சியாக வளர வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றியை ஈட்ட முடியும் எனவும் இதற்காக பல தியாகங்களைச் சந்திக்க மக்கள் தயாராக இருக்கவேண்டுமெனவும் லால் காந்தா மேலும் தெரிவித்தார்.