தேவாலய தாக்குதல்கள் | மீறப்பட்ட எச்சரிக்கை?

உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் 290, காயமடைந்தவர்கள் 500. தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. உண்மை தெரிந்தவர்களும் சந்தர்ப்பங்களுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கலாம்.

உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்களுக்கு வந்தவர்களுக்கும், ஓட்டல்களில் உணவருந்தப் பசியுடன் காத்திருந்தவர்களுக்கும்,  நியூசீலந்து கிறைஸ்ட் சேர்ச் மசூதியில் தலை குனிந்து வணங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், பிற்ஸ்பேர்க் Tree of Life சினகொக்கில் வழிபட்டுக்கொண்டிருந்த யூதர்களுக்கும் இருந்த ஒரே ஒற்றுமை இனி வரப்போகும் நாளைகளின் மீது கட்டியெழுப்பட்ட கனவுகளாகத்தான் இருந்திருக்கும், நிச்சயமாக சுவர்க்கத்தைச் சென்று சேர்ந்துவிடவேண்டுமென்ற அவசரமாக இருந்திருக்க முடியாது.

கொலைகாரர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம். அவர்கள் மனநோயாளிகள். அவர்களை மனநோயாளிகளாக ஆக்கியதில் மதப்பிரசங்கிகள் காரணமாவாராயின் அவர்களைத் தேடிப்பிடித்துக் கழுவேற்றுவதில் எனக்கு உடன்பாடுண்டு. அது வன்முறையில் அடங்காது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் ஜிகாதிகளினால் மேற்கொள்ளப்பட்டவை. பரதேச ஜிகாதிகளின் ஆளணி, பயிற்சி, பணம், கட்டளை இத்தியாதியாதிகளுடன் உள்ளூர் ஜிகாதிகளால் மத வேள்வி நடத்தப்பட்டிருக்கிறது. நியூசீலந்து படுகொலைகளுக்குப் பதிலளிக்கும் முகமாக இது நடைபெற்றிருக்கலாம். மேற்குலத்தினால் தோற்கடிக்கப்பட்ட ஐசிஸ் பதாங்கங்களின் பழிவாங்கலாக இருக்கலாம். அப்பாவிகளின், குழந்தைகளின் அலறல்களே அவர்களது பிரசங்கங்கள்.

தாக்குதல்கள் மும்முனைக் குறிகளைக் கொண்டவையென நம்புவதற்கான அறிகுறிகள் இங்குண்டு – மேற்குலகம், இந்தியா, சிங்கள-பெளத்த சிறீலங்கா

ஓட்டல்களில் நடைபெற்ற தாக்குதல்கள் மேற்குலகத்தாருக்குரியவை. உல்லாசப் பயணிகள் மீதானவை. அது எகிப்திலும், டூனிசியாவிலும் கூட நடைபெற்றிருக்கிறது. ஜிகாதிகளுக்குப் பணம் தரும் நாடுகளைவிட வேறெந்த நாடுகளிலும் அது நடைபெறலாம். தாக்குதல்கள் மேற்கு நாடுகளில் நடக்காதவரை மேற்கு நாடுகள் தம் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்பது ஜிகாதிகளுக்கு நன்றாகவே தெரியும். கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் ஒரு வகையில் மேற்குலகத்தினர் மீதான தாக்குதல்கள் தான். கிறிஸ்தவம் மேற்குலகின் அடையாளம். ‘இந்த உலகம் எங்களுக்காகவே படைக்கப்பட்டது. நாங்கள் ஆளப்பிறந்தவர்கள். நாங்கள் எங்கேயும் போய்விடவில்லை என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்’ என்ற செய்தி இத் தாக்குதல்களில் இணைக்கப்பட்டிருக்கிறது.

சிறீலங்காவில் முஸ்லிம்கள் மீதான பெளத்தர்களின் அதிருப்தி அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 1915 ம் ஆண்டு நடைபெற்ற சிங்கள -முஸ்லிம் கலவரத்துக்குப் பிறகு சிறு சிறு கலவரங்கள் ஆங்காங்கே நடைபெற்றாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட எதிர்த்தாக்குதலை முஸ்லிம்கள் ஒருபோதும் மேற்கொண்டிருக்கவில்லை. மாறி வரும் உலக ஒழுங்கில் உலக ஜிகாதிகளின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது என்கின்ற தினவு எடுக்கும் நிகழ்வுகளாக நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் பார்க்கப்படுமாயின் அது சிங்களவர்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்தி.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் இன முரண்பாடுகளை இந்து-முஸ்லிம் மத முரண்பாடுகளாக ஆக்குவதில் இந்துத்துவ இந்தியா களப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்துத்வ இந்தியாவில் முஸ்லிம்களின் இருத்தல் மீதான அச்சங்களைத் தணிக்கும் எந்த முயற்சிகளையும் மோடியின் இந்தியா செய்யாத நிலையில், காஷ்மீர் பிரச்சினை இன்னும் கொதி நிலையில் இருக்கின்ற இக் களநிலையில், ஜிகாதிகளுக்கு ஒரு தென் களம் மிகவும் அவசியமாகிறது. பாகிஸ்தானிலிருந்து மும்பாய் தாக்குதல்களை மேற்கொண்ட ஜிகாதிகளுக்கு பாக்குநீரிணை ஒரு பொருட்டல்ல என்பது இந்தியாவுக்கான செய்தி.

செய்திகள் சொல்லியாகிவிட்டது. தேவாலயங்களும் அப்பாவிப் பொதுமக்களும் ஏன் பலிகொடுக்கப்பட்டார்கள்?

உள்ளூர் ஜிகாதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட தேவாலயங்கள் எல்லாமே பெருந்தொகையான தமிழர்கள் வழிபடும் தேவாலயங்கள். ஜிகாதிகள் சிங்கள கிறிஸ்தவர்கள் வழிபடும் தேவாலயங்களைத் தாக்கவில்லை. அது நடைபெற்றிருப்பின் பல முஸ்லிம் கிராமங்கள் பல இப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும். திருப்பித் தாக்கும் நிலையில் தமிழர்களும் இல்லை. முஸ்லிம்கள் இன்னும் தமது சகோதரர்கள் என்ற நம்பிக்கையை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். முள்ளிவாய்க்கால் படுகொலையால் அசைக்கமுடியாத உலகின் இதயத்தை சில நூறு உயிரிழப்புக்களினால் அசைத்துவிட முடியாது; உலகம் இன்னும் பான்-கி-மூன் மனநிலையில் தான் இருக்கிறது என்பது ஜிகாதிகளுக்கு மிக நன்றாகவே தெரியும். இது தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியல்ல. விடப்பட்ட செய்தி.

உலக நாடுகள் இதுபற்றி எதுவுமே செய்யப்போவதில்லை என்பதை அவர்களது ‘பியோன்’ களான செய்தி நிறுவனங்கள் சொல்லிவிட்டன. BBC முதல் CBC வரை நாம் மதிக்கும் ஊடகங்களே இன்னும் வெட்டி ஒட்டி, தகவற் பிழைகளுடன் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. நியூசீலந்திற்குப் பறந்த ஊடகர்களால் கொழும்பிற்குப் பறக்க முடியவில்லை, விருப்பமுமில்லை. Arm chair ஆய்வாளர்கள் புலிகளைப் பாராயணம் செய்யாது சிறீலங்கா வரலாற்றை ஒப்புவிக்கத் தெரியாதுள்ளனர். தற்கொலைத் துறையை ஒரு போர்க்கலையாகக் கற்பித்தது புலிகள்தான் என்ற இந்த ஊடகர்களின் அலசல் புராணங்கள் அலுப்புத் தருபவை. அவர்களது அக்கறையின்மை அந்நாட்டு அரசுகளின் அக்கறையின்மையின் வெளிப்பாடுதான். எனவே உலக நாடுகள் எதையும் பண்ணும் புடுங்கும் என நம்புபவர்கள் நல்ல மருத்துவரைப் பார்ப்பது நலம்.

இந்த தாக்குதல்கள் குறித்து இந்தியா சில நாட்களுக்கு முன்னதாகவே தகவல்களை வழங்கியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒத்துக்கொண்டுள்ளார். அதுவும் ஒரு ‘ஓநாய் வருகிறது’ கேஸ் தான். இந்தியாவை சிங்கள சிறீலங்கா ஒருபோதும் நம்புவதில்லை. நம்பும் வகையில் இந்தியா ஒருபோதும் நடந்து கொண்டதில்லை என்றும் சொல்லலாம். இந்திய தேர்தலில் மோடி வெற்றி பெறுவதற்கு ‘முஸ்லிம் எதிர்ப்பு’ பீரங்கியைக் காஷ்மீரில் வெடிக்க வைத்தவர். சிறீலங்காவிலும் ஒரு shot அடிக்க மாட்டார் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இந்தியாவின் எச்சரிக்கையை உதாசீனம் செய்யுமளவிற்கு சிறீலங்காவின் உளவுத்துறைத் தம்மை மொசாட் அளவிற்கு மனதளவில் உயர்த்தி வைத்திருக்கிறது. எனவே intelligent failure என்று ரணில் விக்கிரமசிங்க சொல்வதில் உண்மை இருக்கிறது.

இந்திய உளவு நிறுவனம் ஏப்ரல் 4ம் திகதி சிறீலங்காவிற்குக் கொடுத்திருந்த தகவலின் சாரம்:

இத் தாக்குதல்களின் உள்ளூர் ஜிகாதியும் சூத்திரதாரியுமான சாஹ்ரன் ஹாசிம் ஒரு மத போதகர். ‘தேசிய தாவ்ஹீத் ஜமாஅத்’ தின் தலைவர். தூய இஸ்லாம் பற்றிய போதனைகளை இவர் செய்து வந்தார். சிறீலங்காவின் பல இடங்களில் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ள இவரும் இவரது சகாக்களும் திட்டமிட்டிருந்தனர். ஏப்ரல் 16ம் திகதி காத்தான்குடியிலுள்ள பால்முனையில் வெடிமருந்துகளைப் பொருத்திய மோட்டார் சைக்கிளைக் களப்பரிசோதனை செய்திருந்தனர். ஏப்ரல் 22ம் திகதிக்கு முன்னர் தாக்குதலை நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. அதற்காக எட்டு இடங்களை அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அதிகளவு இந்தியர்கள் கூடும் இடமாக ஒரு ஓட்டலும் ஒரு தேவாலயமும் அவர்கள் தெரிவாக இருந்தன. 

கிடைத்த செய்திகளின் பிரகாரம் சிறீலங்காவின் தலைமை பொலிஸ் அதிகாரி புஜுத் ஜயசுந்தர தாக்குதல் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னரே நாடு தழுவிய எச்சரிக்கையை வழங்கியிருந்தார்.  “தேசிய தவ்ஹீத் ஜமா’அத் தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயம் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிடுகிறது என ஒரு அன்னிய நாட்டின் உளவு நிறுவனம் தெரிவித்திருக்கிறது” என்பதே அந்த எச்சரிக்கை.

தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் அனைவரும் உள்நாட்டினர் எனத் தான் நம்புவதாக விக்கிரமசிங்க கூறுகிறார். அவர்களுக்கு வெளினாடுகளிலிருன்து உதவிகள் கிடைத்தனவா என்பதை அறிய முயற்சிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களது பெயர்களை பொலிசார் விரைவில் வெளியிடுவார்கள் என்கிறார் அவர். அதே வேளை இத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட விசாரணை சபை ஒன்றை நியமித்துள்ளார். இச் சபையில் பல நீதிபதிகளும் இடம்பெறுகிறார்கள். இரண்டு வாரங்களில் முடிவுகள் தெரிவிக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி.

விசாரணைகள் இன்னும் பல உண்மைகளைக் கொண்டு வரலாம். பிரதமர்-ஜனாதிபதி பகைமையை இது மேலும் விரிவாக்கலாம். சிங்கள அரசியல்வாதிகள் இதை ஒரு சிறந்த அரசியல் ஆயுதமாகப் பாவித்து விக்கிரமசிங்கவைப் பழிவாங்க முயற்சிக்கலாம். ராஜபக்சக்கள் உலகின் மிகச் சிறந்த spin doctors. எதையும் எப்போதும் எப்படியும் மாற்றிக்கொள்ளலம். அது ஆட்சியாக இருந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. சாசனத் திருத்தம் தீர்வினைத் தரும் என்ற தமிழர் நம்பிக்கை தவிடுபொடியாகலாம்.

தமிழர்களது தோல்வி எப்போதும் இரண்டாம் விளைவாகவே (collateral damage) நடந்து வருகிறது. எப்படி ஒரு இரட்டைக் கோபுரத் தாக்குதல் விடுதலைப் புலிகளின் கனவுகளையும் சேர்ந்தே தகர்த்ததோ அது போலவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தீர்வுக் கனவுகளையும் தகர்த்து விடலாம். இன்னுமொரு collateral damage. இதுவென்ன புதிதா?. இலகுவில் கடந்து போகும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. ஆனால் குற்றவாளிகள் இலகுவாகத் தப்பிவிடுவார்கள் என்பதை மட்டும் என் மனம் நம்பச் சொல்கிறது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மனமார்ந்த ஆறுதல்கள். பிரார்த்தனைகளில் நம்பிக்கை போய்விட்டது.

ஆமென்.

சிவதாசன்