தேர்தல் முறைமை மாற்றப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்கள்- ஊடக அமைச்சர் அழகப்பெருமா
இந்தியாவின் அழுத்தம் உதாசீனம் செய்யப்படுகிறதா?
இலங்கையின் தேர்தல் முறைமை சீர்திருத்தப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படுமெனெ ஊடக அமைச்சர் டல்லஸ் அழகப்பெருமா தெரிவித்துள்ளார். நீண்டகாலமாகப் பின்போடப்பட்டுவரும் இலங்கையின் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்தியா தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்துவந்த போதிலும் இலங்கை அரசாங்கம் அதை மீறித் தேர்தல்களைப் பின்போட்டு வருகிறது.
1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் நடைமுறைக்கு வந்த மாகாணசபைத் தேர்தல்கள் இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வின் ஆரமபமாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. இதனால், ஆரம்பத்திலிருந்தே சிங்களப் பெரும்பானமையினரிடமிருந்த்து அதற்கு எதிர்ப்பு நிலவி வந்தது. இவ்வொப்பந்தத்தை மீளப்பெறமுடியாத நிலையில் சிங்கள தீவிரவாத அரசியல்வாதிகள் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதன் மூலம் அதனைப் பலவீனமாக்க முயன்று வருகின்றனர். சமீப காலமாக இலங்கை வந்துபோகும் அனைத்து இந்திய ராஜதந்திரிகளும் மாகாணசபைத் தேர்தல்களை விரைவில் நடத்தவேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துச் சென்றனர். அரசும் அதற்கு இணங்கியதாகவே அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்தது. இருப்பினும் விமல் வீரவன்ச மற்றும் பெளத்த மகாசபைகள் உள்ளிட்ட சிங்கள தீவிரவாதிகள் தேர்தல் முறைமையை மாற்றியமைக்கும்வரை மாகாணசபைத் தேர்தல்களை நடத்தக்கூடாது என அரசுக்கு அழுத்தம் கொடுத்துவந்தனர். மக்களிடத்து ஆட்சியாளருக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தேர்தல்களை நடத்துவது உசிதமல்ல என்பதாலும், தீவிரவாதிகளைச் சமாளிக்கும் நோக்குடனும் மாகாணசபைத் தேர்தல்களைப் பின்போடுவதாக இப்போது அரசு அறிவித்துள்ளது.
அதே வேளை, சீனாவின் உறவைத் துண்டிக்க இந்தியா எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக, இலங்கை -இந்தியா இடையே நெருக்கம் அதிகரித்துவருவதால் மாகாணசபைத் தேர்தல்கள் விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுக்குமென எதிர்பார்க்கத் தேவையில்லை.
மாகாணசபைகளின் ஆட்சிக்காலம் 2015-2017 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதே வேளை, தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்யும்வரைக்கும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில்லை என 2017 இல் அறிவித்தது. ஆனாலும் அதற்கான பாராளுமன்ற அங்கீகாரம் அப்போது கிடைக்கவில்லை.
பழைய தேர்தல் முறைமைக்குப் போவதானால் பாராளுமன்றத்தில் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டு அதன் பின்னரே சாதாரண பெரும்பான்மையுடன் தேர்தல்களை நடத்துவதற்கான அனுமதியைப் பெறலாம் எனவும் கலப்பு தேர்தல் முறைமைக்குப் போவதானால் பாராளுமன்றத்தின் மூன்றி இரண்டு பெரும்பானமை தேவை எனவும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
முந்திய அரசினால் முன்மொழியப்பட்ட இந்த் திருத்தம் பிரச்சினைக்குரியது எனவே அது திருத்தப்படவேண்டும் என்பதுவே தற்போதைய அரசின் நிலைப்பாடு என ஊடக அமைச்சர் டல்லஸ் அழகப்பெருமா தெரிவித்துள்ளார். ஆனால் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுமென வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சென்றவாரம் தெரிவித்திருந்தார்.
தற்போது இலங்கையில் நான்கு தேர்தல் நடைமுறைகள் உள்ளன. ஜனாதிபதிக்கான தேர்தல்கள், பாராளுமன்றத்துக்கான தேர்தல்கள், மாகாணசபைகளுக்கான தேர்தல்கள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களே அவை. இவற்றில் ஜனாதிபதிக்கான தேர்தல் நாடு தழுவிய ரீதியில் நாடு ஒரு தேர்தல் தொகுதி என்ற நிலைப்பாட்டில் மேற்கொள்ளப்படுவது. அதே வேளை, பாராளுமன்றத்துக்கான தேர்தல்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது.
மாகாணசபைத் தேர்தல்கள் விடயத்தில் தற்போதுள்ள பிரதிநிதிகள் எண்ணிக்கை முறைமையிலிருந்து 60/40 கலப்பு முறைமைக்கு மாற்றுவதென முந்திய அரசு தீர்மானித்திருந்தது. இம்முறையில் 60 வீதம் தேர்தல் தொகுதிகளைப் (electorate) பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாகவும் (பழைய முறை), 40 வீதம் மக்கள் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (proportional representative) முறையிலும் இருக்கும். இதைத் தற்போதைய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளூராட்சித் தேர்தல்கள் தற்போது 50/50 கலப்பு முறைமையில் நடைபெற்று வருகின்றன. இவற்றைத் திருத்தி ஒரு புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த தற்போதைய அரசு முனைகிறது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்தபோது கொண்டுவந்த தேர்தல் சீர்திருத்தத்தின்போது தேர்தல் தொகுதி முறைமையிலிருந்து மக்கள் பிரதிநிதித்துவ முறைமைக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் மக்களின் எண்ணிக்கை குறையும்போது பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் குறையும். போர்க்கலத்தில் பெரும்பாலான தமிழர்கள் இடம் பெயர்ந்தமையால் தமிழர்களின் பிரதிநிதிகள் எண்ணிக்கை குறைந்தமைக்கு இதுவே காரணம். ஆனாலும் சிறுபான்மை இஅனக்கள்குக்கான பிரதிநித்துவத்தை அது உறுதிசெய்தது. இதற்கு முன்னர் இருந்த முறைமையில் ஒரு தொகுதியில் எத்தனை மக்கள் வாழ்கிறார்கள் எனபது முக்கியமில்லை ஆனால் அத் தொகுதி குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்ட பிரதேசமாக இருந்தால் போதும். அதற்கு ஒரு பிரதிநிதி உறுதிப்படுத்தப்படுவார்.
மக்கள் பிரதிநித்துவ முறைமையின் பிரகாரம், வாழும் மக்களின் இனக்குழும எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பிரதிநிதிகள் எண்ணிக்கை இருக்கும் என்பதால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பேணப்படும்
புதிய தேர்தல் சீர்திருத்தத்தின் பின்னரும் மக்கள் பிரதிநிதித்துவ முறைமை தக்கவைக்கப்படுமென அழகப்பெருமா தெரிவித்துள்ளார்.